அறிவுடையோர் விரும்பிச் சேரமாட்டார்கள் – திரிகடுகம் 14

இன்னிசை வெண்பா

இழுக்கல் இயல்பிற் றிளமை பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை யாண்டும்
செறுவொடு நிற்குஞ் சிறுமைஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார். 14 – திரிகடுகம்

பொருளுரை:

பொதுவாக இளமைப் பருவம் தவறான செயல்களைச் செய்யும் இயல்புடையது;

அறியாமை அறிவுடையோரால் தவறு என விலக்கப்பட்டவைகளைச் செய்யும் செயல்களில் வல்லமை யுடையதாகும்;

எக்காலத்தும் சினத்தோடு நிற்பது ஈனத்தன்மை ஆகும்.

ஆகவே இம் மூவகைச் செயல்களையும் பின் விளைவுகளை அறிந்த அறிவிடையார் செய்ய எண்ண மாட்டார்கள்.

கருத்துரை:

இயல்பாக வழுவுதலை உடையது இளமைப்பருவம்;

பிறர் வெறுப்பவைகளைச் சொல்லுதல் மூடத்தனம்;

எப்போதும் சினத்தோடிருப்பது சிறுமை;

இவை ஒருவனுக்கு இருந்தால் பெரியோர் அவனைச் சேரார்.

இழுக்கல் – வழுக்குதல்

சிறுமையுடன் செறுவும் உடன் நிகழ்தலால், உடன் நிகழ்ச்சிப் பொருளுமாம்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Nov-19, 7:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

மேலே