பெண் சுதந்திரம்

அந்த நிசப்தமான மாலை நேரம் இரவின் ஆரம்பத்திலிருந்தது. மலர் அப்பொழுது தான் அலுவலகத்தில் இருந்து கிளம்பினாள்.
சுருட்டை முடி, இளம் சிகப்பு சேலையில் பார்க்கும் அனைவரையும் தன் பக்கம் ஈர்க்கக்கூடிய கண்கள், முழுமதியான முக தோற்றம். தன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவள் வேலைக்கு சேர்ந்து 2 நாட்களே ஆகி இருந்தது.

அன்று அதிகப்படியான மழை ஆதலால், பேருந்து இயக்கப்படவில்லை, சிறிது நேரம் காத்திருந்தாள்.
மழை விடுவதாக தெரியாதலால், மழை சிறிது குறைந்த பின் தெருவில் இறங்கி நடக்கலானாள்.

ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு பகுதியை கடந்து தான் அவள் வீடு செல்ல வேண்டும். வேகமா கடந்து விடலாம் என்று நம்பிக்கையோடு நடக்க ஆரம்பித்தாள், இருந்தாலும் மனதில் சிறியதாய் ஒரு பயம் மெல்ல அவளை அணைக்க தொடங்கியது.

சிறிது தூரம் நடந்து ஆள் அரவமற்ற அந்த இடத்தை அவள் அடையவும், அவளை அணைத்த பயத்தோடு சேர்த்து இருளும் அவளை அணைக்க தொடங்கியது.

மழைக்காலம் ஆதலால், நிலவும் முழு முகம் காட்ட மறுக்க, இருட்டில் தன் அலைபேசியை உயிர்ப்பித்து பார்த்தால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் தான் அந்த பகுதியில் ஒரு கும்பல் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்தது நினைவுக்கு வர, அவள் கண்களின் ஓரம் கண்ணீர் துளி எட்டி பார்த்தது.

வேறு வழி இல்லை என்று எண்ணி மனதில் கொஞ்சமாக திடத்தை ஏற்படுத்தி மெதுவாக முன்னேறினாள், சுற்று முற்றும் ஒரே இருட்டு, அந்த இருட்டில் குளிர்ந்த காற்று அவள் முகத்தில் முத்தமிட அதற்க்கு ஏற்றார் போல் அசைந்து கொடுக்கும் மரம், சாலையின் ஓரத்தில் சலசலப்பாய் இரகசியம் பேசும் செடிகள். இது எல்லாம் இனிமையாக இருந்தாலும், அதை இரசிக்கும் மன நிலையில் அவள் இல்லை.

ஒரு பக்கம் நாய்களின் ஓலம், இடியாய் அவள் இதயத்தில் இறங்கியது. சில்வண்டுகளின் ரீங்காரம் அவளுக்கு மேலும் பயத்தை சேர்த்தது. திரும்பி சென்று விடலாமா என்று கூட எண்ணினாள். ஆனால் வேறு வழி இல்லாமல் தொடர்ந்து நடந்தாள்.

அவளுக்கு எதிராக தூரத்தில் ஒரு மோட்டார் வாகனத்தின் வெளிச்சம் தெரிய, மனதிற்குள் சந்தோஷம் என்றாலும், அவளது மனம் வேறு விதமாக சிந்திக்க தொடங்கியது...

வருவது யாராக இருக்கும் .?
கள்வனாக இருக்குமோ .?
இல்லை பெண்களை மாணபங்க படுத்தி கொலை செய்யும் சைக்கோவாக இருக்குமோ .?
இவ்வருக்கு சிந்திக்க சிந்திக்க அவளது உடல் ஒரு வித நடுக்கத்திற்கு உண்டானது, மனதிற்கும் பயம் பூகம்பமாக வெடித்தது.

அப்பொழுது தான், ஏன் பெண்கள் வேலைக்கு போகக்கூடாது .?
அவர்களுக்கு குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற உரிமை கூட கிடையாதா,?

பெண்களுக்கென்று சில உரிமைகளும் சுதந்திரமும் இருக்கின்றது அதை பறித்துவிடாதீர்கள் என்று தன் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் 3 நாட்களுக்கு முன்னர் சண்டையிட்டது நினைவுக்கு வர. அவளின் இதயமோ வெடிக்கும் அளவிற்கு துடிக்க ஆரம்பித்தது.
மோட்டார் வாகனத்தின் வெளிச்சம் நெருங்க நெருங்க பயமும் அதிகரித்து கொண்டே போனது. இதய துடிப்பின் ஓசை கூட அவளுக்கு இடியாய் இறங்கி பயத்திற்கு மேலும் பயத்தை சேர்த்தது. வியர்வையில் குளிக்க தொடங்கினாள்.

இன்றோடு தன் வாழ்வு மட்டும் அல்ல, பெண்களின் சுதந்திரம் என்று அவள் வாதிடத்தும் முடிவுக்கு வந்து விடுமோ என்று என்ன தொடங்கினாள்.

அந்த மோட்டார் வாகனம் அவளுக்கு மிகவும் அருகில் வர பயத்தின் உச்சத்தில் இருந்த அவள் தன் முகத்தை மூடி கொண்டு அலறியேவிட்டாள்.!

அந்த வாகனம் அவளுக்கு மிகவும் அருகில் வந்து நின்றது.... .... .....
அந்த வாகனத்தில் இருந்த ஆசாமி, மலர் வண்டில ஏறுமா என்று சொன்ன உடன் தான் அவளுக்கு உயிரே வந்தது.

மூடி இருந்த முகத்தை நிமிர்த்தி பார்த்தாள், வாகனத்தை திருப்பிக்கொண்டு தயாராய் நின்றிருந்தார்
மலரின் தந்தை இராமசாமி.

எழுதியவர் : முஹம்மது உதுமான் (6-Nov-19, 3:08 pm)
சேர்த்தது : முஹம்மது உதுமான்
Tanglish : pen suthanthiram
பார்வை : 161

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே