நாகரிகம் என்னும் நயச்சொல் மோகமிகு காரியங்கட்காகும் இன்று - நாகரிகம், தருமதீபிகை 521

நேரிசை வெண்பா

நாகரிகம் என்னும் நயச்சொல் அருள்நலத்தின்
பாகமாய் நின்றது பண்டின்று - மோகமிகு
காரியங்கட் கெல்லாம் கருத்தாய் எடுத்ததனை
வாரி இறைக்கின்றார் வந்து. 521

- நாகரிகம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நாகரிகம் என்னும் இனிய மொழி முன்னம் அருள் நீர்மையை உணர்த்திப் பொருள் பொதிந்திருந்தது, இந் நாளில் அதனை மருள் நிலையில் புகுத்தி உலகர் மருண்டு திரிகின்றனர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், நாகரிகத்தின் நிலைமையை உணர்த்துகின்றது.

உலகில் மொழிகள் பல உள்ளன. மக்களுடைய வாழ்க்கை மொழிகளால் இயங்கி வருதலால் அது சீவிய நிலைகளாய் விளங்கி நிற்கிறது. தேசங்கள் தோறும் மொழிகள் வேறு என்பது பழமொழி. பேசும் மொழிகளின் பிரிவுகளும் விரிவுகளும் இதனால் அறியலாகும். மக்கள் பல இடங்களிலும் பிரிந்து வாழ்ந்து வருதலால் அங்கங்கே அவர் பேசி வருவன அந்நாட்டு மொழிகளாய் ஈட்டம் எய்தி நின்றன. தம்மைப் பேசி வருகிற மக்களுடைய சீர்மை நீர்மைகளை அத்தேச மொழிகளில் கூர்மையாகக் கண்டு கொள்ளலாம்.

இந்நாட்டு மக்களுடைய பழமையான பண்பாடுகளை நம் தமிழ் மொழி நன்கு காட்டியுள்ளது. பண்டை மக்களிடம் கண்ட உண்மைகளைக் கருதி உணருந்தோறும் உள்ளம் உருகி வருகிறது. உயர்ந்த குறிக்கோள்கள் ஒளி வீசி நிற்கின்றன.

திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்தியிருந்து அருந்தவர்களாய் வாழ்ந்து வந்த பெருந்தகையாளர் பலரை இந்நாடு முன்னாள் இனிது பெற்றிருந்தது. நம்முன்னோர் நீர்மைகள் எந்நாளும் பொன்னே போல் போற்றவுரியன.

பழங்கால நிலைமையை உளம்கூர்ந்து தெளிதற்கு இங்கே ஒரு சொல்லை நாம் சோதனை செய்து பார்க்கவேண்டும்.

நாகரிகம் என்னும் வார்த்தையை யாவரும் அறிவர்; அதனை ஒரு மோகன மந்திரமாக மொழிந்து வருகின்றனர். வெளிப்பகட்டான உல்லாச நிலைகளில் இக்காலத்தவர் உபயோகித்து வருகிற இச்சொல் முற்காலத்தில் உயர்ந்த பொருளில் ஒளி செய்து நின்றது.

நாகரிகம் என்னும் நயச்சொல் அருள்நலத்தின்
பாகமாய் நின்றது பண்டு.

தயை, இரக்கம், கண்ணோட்டம் ஆகிய கருணைப் பண்புகளையே நாகரிகம் என்னும் சொல் முன்னம் உணர்த்தி வந்துள்ளது. கண்ணோடி இரங்கி இதம் புரிகிறவன் எவனோ அவனே நாகரிகன் என நின்றான். இக்காலத்தில் பேசப்படும் நாகரிகர்க்கும் இதற்கும் எவ்வளவு வேற்றுமை!

சதுரர், காமுகர் நாகரிகர் ஆகும். - பிங்கலந்தை

இடைக்காலத்தில் நாகரிகர் இவ்வாறு பேர் பெறலாயினர். ஆதியில் இது அருள் நீர்மையே பொருளாயிருந்தது.

பெயக்கண்டும் நஞ்சுண்(டு) அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். 580 கண்ணோட்டம்

பழகின உரிமையாளர் எதிரே இருந்து கொண்டு நஞ்சைக் கொடுத்தாலும் அதனையும் மறுக்க மாட்டாமல் உண்பர் என நண்பு பேணும் பண்புடையாரை இது விளக்கியுள்ளது. கண்ணோட்டம், தாட்சண்யம் என்னும் பொருளில் நாகரிகம் இங்கே வந்துள்ளமையைக் கண் ஊன்றி உணர்ந்து கொள்கிறோம். உயர்ந்த நாகரிகம்.உடையார் இப்படி இருப்பர் என வள்ளுவர் ஈண்டு வரைந்து காட்டியிருக்கும் காட்சி கருதி உணரத்தக்கது.

புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை
முலைவாய் உறுக்குங் கைபோல் காந்தள்
குலைவாய் தோயுங் கொழுமடல் வாழை
அம்மடற் பட்ட அருவித் தீநீர்
செம்முக மந்தி ஆரும் நாட 5
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்
அஞ்சில் ஓதியென் தோழி தோள்துயில்
நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அதுநீ
என்கண் ஓடி அளிமதி 10
நின்கண் அல்லது பிறிதியாதும் இலளே. 355 நற்றிணை

இது ஒரு தோழி தலைவனை நோக்கிக் கூறியது. காந்தள் மலர் தழுவிய கொழுவிய வாழைப்பூவிலிருந்து வருகிற நீரை மந்திக்குருளை பருகுவது, தன்கையால் முலையைப் பிடித்துப் பிள்ளைக்குத் தாய் பாலூட்டுவது போலுள்ளது; அத்தகைய நில வளமுடைய நாட்டின் தலைவ! இத் தலைவியை மணந்து வாழ், உனக்கு அது மனமில்லையேனும் என் பொருட்டாவது செய்; களவில் உனக்கு உளவு கூறி உதவிய என்பால் கண்ணோடி அருளுக” என்று அவள் உரையாடியுள்ளாள். இதில் வரைந்து காட்டியிருப்பது உவகைக் காட்சியாய் ஒளி சுரந்துள்ளது.

நட்டோர் கொடுப்பின் நாகரிகர் நஞ்சும் உண்பர் என்று சுட்டிக் காட்டியிருக்கும் இதில் நாகரிகத்தின் பொருள் நன்கு காண வந்தது. தயை சுரந்த உயர்ந்த பெருந்தகைமையை உணர்த்தி வருதலால், இதனையுடையவர் சிறந்த மேன்மையாளராய்த் திகழ்ந்துள்ளனர். நங்கை தோழி நனி நாகரிகி' என ஒரு மங்கையை இங்ஙனம் குறித்திருக்கிறார்.

பெருங்கண் கோட்டி விரும்புவன ணோக்கி
நாணொடு நிற்கு நனிநா கரிகம்.10 புணர்வு வலித்தது, மகத காண்டம், பெருங்கதை

நாகரிகம் என்னும் இனியசொல் உயர்ந்த நீர்மையில் முன்பு உலாவி வந்துள்ளமையை இவற்றால் உணர்ந்து கொள்ளலாம்.

கருணை கனிந்த கண்ணோட்டமுடையவரே நாகரிகர் என்றதனால் அஃது இல்லாதவர் அநாகரிகர் என்பது பெறப்பட்டது.

தரவு கொச்சகக் கலிப்பா

ஆக்கரிய மூக்குவுங்கை அரியுண்டாள் என்றாரை
நாக்கரியும் தயமுகனார்; நாகரிகர் அல்லாமை,
மூக்கரிந்து, நும்குலத்தை முதலரிந்தீர்; இனி,உமக்குப்
போக்கரிதிவ் அழகையெல்லாம் புல்லிடையே உகுத்தீரே. 125, சூர்ப்பணகைப் படலம், ஆரணிய காண்டம், இராமாயணம்

மூக்கு அறுபட்ட சூர்ப்பணகை இராம லட்சுமணரை நோக்கி இவ்வாறு கூறி யிருக்கிறாள். என் மூக்கை அறுத்து விட்டார் என்று யாரேனும் போய்ச் சொன்னால் என் அண்ணன் அவருடைய நாக்கை அறுத்து விடுவானே! அவ்வளவு கொடிய கோபி, அவன் கோபத்திற்கு ஆளான நீங்கள் குலத்தோடு இனி அழிந்தே போவீர்கள்; எவ்வழியும் தப்ப முடியாது; என்னை நீங்கள் சேர்த்துக் கொண்டால் தப்பிப் பிழைக்கலாம்’ என இப்படி அச்சுறுத்தி ஆசையோடு பேசியுள்ளாள். இராவணன் மிகவும் பொல்லாதவன்; தயை தாட்சண்யம் யாதும் இல்லாதவன் என்பாள் தயமுகனார் நாகரிகர் அல்லர் என்றாள்.

நாகரிகம் என்னும் சொல் கருணைப் பண்புடையது என்பது இதுவரை கூறியவற்றால் இனிது தெளிவாயது.

பண்டு தூய அருள்நிலையில் தோய்ந்திருந்த அது இன்று மாய மருள் நிலையில் மண்டி யுள்ளது. உள்ளம் கனிந்து உயர்நிலையில் திருந்தாமல் எள்ளல் படிந்து இழிநிலையில் வெளிமினுக்கானவை எல்லாம் நாகரிகம் என நேர்ந்தன. இந்த மோக மருள் நீங்கி ஏக அருள் ஓங்க வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Nov-19, 5:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 90

மேலே