நாடுங்காற் றூங்குபவர் மூவர் – திரிகடுகம் 19

இன்னிசை வெண்பா

கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற்
பிறன்கடை நின்றொழுகு வானும் – மறந்தெரியா(து)
ஆடும்பாம் பாட்டும் அறிவிலியும் இம்மூவர்
நாடுங்காற் றூங்கு பவர். 19 திரிகடுகம்

பொருளுரை:

கொலை செய்வதாகிய (மத) யானைக்கு பின்வாங்கி ஓடுகின்ற குணம் இல்லாத வீரனும்,

இரவிலே பிறன் வீட்டு வாயிலில் அவன் மனையாளை விரும்பி தனக்கு வாய்ப்பான சமயம் பார்த்து நின்று நடப்பானும்,

ஆடுந் தொழிலுள்ள பாம்பை நன்றி செய்தார்க்கும் தீமையைச் செய்கிற கொடுமையைத் தெரியாமல் ஆட்டுகின்ற அறிவில்லாதவனும்

ஆகிய இம்மூவரும் ஆராயுமிடத்து பழி முதலியவற்றினின்றும் விரைதலில்லாதவர்.

கருத்துரை:

போர் யானைக்கு அஞ்சிப் பின்வாங்கும் வீரனும், அயலான் மனைவியை விரும்பித் தீமையாய் ஒழுகுபவனும், நச்சுப் பாம்பை ஆட்டுகின்றவனும் விரைவில் கெடுபவராவர்.

உணவு முதலியன கொடுத்துக் காத்த அரசனுக்குப் போர் வந்த காலத்துப் போர்க்களத்தில் யானைக்கு அஞ்சி ஓடுதலால் குணமிலி எனப்பட்டான்.

யானைக்கு ஓடும் குணமிலி என்பதற்கு யானைக்கு எதிரில் ஓடுகின்ற அறிவில்லாதவனுக்கு என்றுமாம்.

எல் - இரவு. பிறன்கடை நின்றொழுகுவான் என்றது இடக்கரடக்கல்,

"கொம்புளதற் கைந்து குதிரைக்குப் பத்துமுழம், வெம்புகரிக் காயிரந்தான் வேண்டுமே" என்றபடி வெம்புகரிமுன் செல்லாதிருத்தலை அறியாமையின் குணமிலி என்றாரெனுலுமாம்.

"தூங்காமை கல்வி துணிவுடைமை" என்ற திருக்குறளில் தூங்காமை என்பதற்கு விரைவுடைமை என்று பரிமேலழகர் உரைவிரித்திருத்தலின், தூங்குதல் விரைதலில்லாமை என்று கொள்ளப்பட்டது.

தூங்குபவர் என்பதற்கு இறப்பவர் என்றும் பொருள் கூறுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Nov-19, 8:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே