மருத்துவ வெண்பா – ஓடைநீர் - பாடல் 37

நேரிசை வெண்பா

ஓடை தருநீரை யுண்ணவதி தாகமுமா
மேடையெனத் தோட்பலனு மெத்தவாம் - ஓடைமலர்க்
கண்ணாய்! அதுதுவர்ப்புங் காணா மதுரமுமாம்
எந்நாளும் பாரில் இயம்பு. 37 - - தேரையர்

பொருளுரை: ஓடை மலரைப் போன்ற குளிர்ச்சியான கண்களை உடையவளே!

ஓடை தரக்கூடிய நீரை அருந்த மிகுந்த தாகமும் அதனால் ஏற்படும் பலனும் மிக அதிகம் எனப்படுகிறது.

ஓடை நீர் துவர்ப்புச் சுவையும், காண்பதற்கரிய இனிப்புச் சுவையும் உடையதென்று எந்நாளும் இவ்வுலகத்தாரிடம் சொல் என்கிறார் தேரையர்.

நான் சமீபத்தில் சு.வெங்கடேசன் எழுதிய சாகித்ய அகடெமி பரிசு பெற்ற ’காவல் கோட்டம்’ நாவலை வாசித்தேன்.

அதில் ‘மரங்களின் வேர்களுக்கும் பாறைகளுக்கும் ஊடே சலசலத்து ஓடியது நீரோடை. மிதக்கும் பளிங்கு போல் பாறைகளையும் வேர்களையும் தழுவி நழுவி ஓடிய நீர் தெளிந்தும் குளிர்ந்தும் இருந்தது.

ஓடையில் கைகால்களைக் கழுவி குளிர்ந்த இனிய நீர் குடித்து விட்டு களைப்பாறினர்’ என்று வருகிறது. குளிர்ந்த நீரோடையின் நீர் தாகம் தீர்த்து புத்துணர்ச்சி ஊட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஓடை நீர் சுவையின் அடிப்படையில் இரண்டாக பிரித்து கூறப்படுகிறது. ஒன்று துவர்ப்புச் சுவையுடைய நீர், மற்றயது இனிப்புச் சுவையுடைய நீர். இந்த இருவகை நீரில் எதை அருந்தினாலும் தாகமும் பலமும் அதிக அளவில் ஏற்படும் என்கிறார் தேரையர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Nov-19, 9:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

சிறந்த கட்டுரைகள்

மேலே