நலமாட்சி நல்லவர் கோள் மூன்று – திரிகடுகம் 21
இன்னிசை வெண்பா
வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்
செய்தவை நாடாச் சிறப்புடைமை - எய்தப்
பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்
நலமாட்சி நல்லவர் கோள். 21 திரிகடுகம்
பொருளுரை:
தமக்கு வரும் பொருள்களிலே நான்கில் ஒரு பங்கு அறத்திற் செலவு செய்து வாழ்தலும்,
போரினிடத்து வெற்றி கிடைப்ப தான் செய்த செயல்களை ஆராயாத யாவர்க்கும் விளங்கித் தோன்றும் சிறப்புடையனாதலும்,
நிரம்ப பலவற்றையும் ஆராய்ந்து அவற்றுள் நல்லவற்றைப் படித்தலும் ஆகிய இம் மூன்றும் நற்குண நற்செய்கைகளால் பெருமை பெற்ற நல்லவருடைய கொள்கைகளாம்.
கருத்துரை:
வரவுக்குத் தகுந்தபடி அறஞ்செய்தலும், போரில் வெற்றி பெறுதலும், நல்ல பொருள்களைக் கற்றலும் நலம்.
வருவாய் - வரும் வழியையுடைய பொருள்;
செருவாய்ப்ப என்ற குறிப்பால் செய்தவை என்பது வெற்றிச் செய்கை என்பதன் மேலாயிற்று,
கோள் - கோட்பாடு: ஒருவன் தன் தேட்டத்திற் பாதி தன் வகைச் செலவுக்கும், காற்கூறு அறத்திற்கும், மற்றொரு கால் சேர்த்து வைப்பதற்கும் பயன்படுத்த வேண்டுமென்பது நூற்கொள்கை.