நீர்மை சுரந்து நேர்ந்தவரைப் பேணி ஒழுகும் பெருந்தகை - நாகரிகம், தருமதீபிகை 525

நேரிசை வெண்பா

நீர்மை சுரந்து நிலைதெரிந்து நேர்ந்தவரைக்
கூர்மையாய் ஓர்ந்து குறிப்பறிந்து - சீர்மையுடன்
பேணி ஒழுகும் பெருந்தகையே நாகரிகம்
காணியாய்க் கொண்டான் கனிந்து. 525

- நாகரிகம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நல்ல பண்புகள் நிறைந்து எல்லாருடைய நிலைகளையும் எதிரறிந்து யாண்டும் இனிய நீர்மையராய் ஒழுகி, எவ்வழியும் உரிமை கெழுமி ஒழுகுவோரே விழுமிய நாகரிகர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உண்மையான நாகரிகம் இன்னதென உன்னியுணர்ந்து கொள்வது மிகவும் நன்மையாம். நல்லதை இகழ்ந்து தள்ளி விட்டு அல்லதை உவந்து கொள்வது பொல்லாத போக்காம்; அப்போக்கு புனிதமான வாழ்க்கையைப் புலைப்படுத்தி விடுமாதலால் அதில் தலைப்படலாகாது.

மனிதனுக்கு மனிதன் மரியாதை புரிந்து இனிய நீர்மையோடு புனிதமாய் வாழ்வதே உயர்ந்த நாகரிகம்; இந்த நிலைக்கு மாறுபட்டனவெல்லாம் இழிந்த அநாகரீகங்களேயாம்.

குண நலங்கள் நிறைந்து பிறருடைய நிலைமைகளை நுணுகியுணர்ந்து எவ்வகையும் செவ்வையாய் நயமும் விநயமும் மருவி ஒழுகின் அந்த மனித வாழ்வு புனிதம் மிகவுடையது: திருந்திய பண்பாடுகள் அமைந்த அளவு அது பெருந்தன்மையாய் உயர்ந்து விளங்குகிறது.

பேணி ஒழுகும் பெருந்தகையே நாகரிகம்
காணியாய்க் கொண்டான்.கனிந்து.

என்றது நாகரிக வாழ்வின் நீர்மையை ஓர்ந்து கொள்ள வந்தது. தாழ்ந்தாரை உயர்த்திச் சூழ்ந்தாரை ஆதரித்து உயர்ந்த எண்ணங்களோடு வாழ்ந்து வருகின்றவனே உண்மையான சிறந்த நாகரிகன் ஆகின்றான். ஒத்த மனிதர்கள் உள்ளம் உவந்து கொள்ள எத்திறத்தும் இனிய நீரனாய்ச் சித்த சுத்தியுடன் ஒழுகி வருவது உத்தம நாகரிகமாம், அத்தகைய சன சமுதாயம் உள்ள நாடு உயர்நலமுடையதாய் ஒளிபெற்று விளங்கும். இனிய தன்மைகள் வளர அரிய நன்மைகள் வருகின்றன.

இற்றைக்கு ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்னர் செங்கண்மா என்னும் ஊரில் ஒரு குறுநில மன்னன் இருந்தான். அவனுடைய உறவினர் உயர்ந்த நாகரிகமுடையராய்த் திருந்தியிருந்தனர் என்று பெருங்கெளசிகனார் என்னும் சங்கப் புலவர் உவந்து பாடியுளளார்.

நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து
வல்லார் ஆயினும் புறமறைத்துச் சென்றோரைச்
சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி
நல்லிதின் இயக்கும் அவன்சுற்றத்(து) ஒழுக்கம். - மலைபடுகடாம்

அந்தச் சிற்றரசனிடமிருந்த கல்விமான்களின் பெருந்தகைமையை இது காட்டியுள்ளது. பரிசில் கருதிவந்த புலவர்கள் தாம் கற்றவற்றைத் தெளிவாகச் சொல்லமாட்டாமல் தியங்கி நின்றாலும் அவற்றைத் திருத்தமாகச் சுட்டிக் காட்டிச் சிறந்த உதவி புரிந்து உவந்து பேணுவர் என்னும் இது அவரது உள்ளப் பண்பையும் உயரிய நாகரிகத்தையும் உணர்த்தி நிற்கிறது.

ஆறு உட்பகை செற்று அருங்கலை ஓர்ந்து
பாரில் கீர்த்தி படைத்தோர் வைகுதல்
நல்லவை; அடக்கம் வாய்மை நடுநிலை
சொல்லு நன்மை யுடையோர் தொகைஇ
வல்லார் மொழியினும் வல்லுநர் ஆக்கிக்
கேட்போர் உறையவை நிறைஅவை யாகும். - இலக்கண விளக்கம்

இதில் குறித்துள்ள மக்களுடைய பண்பாடுகளைக் கண்டு மகிழ்கின்றோம். பெரிய நீர்மைகள் பேரின்பங்களை அருளுகின்றன.

பொறாமையும், வஞ்சமும், குரோதமும் நிறைந்த கூட்டங்களையே பார்த்துப் பார்த்துப் பரிந்து வருந்திய கண்களுக்கு இது பெரிய களிப்பை ஊட்டியருளுகின்றது.

அன்பும் தயையும் மனித சமுதாயத்தை இன்ப நிலையமாக்குகிறது. கண்ணோடி அருளுகின்ற நாகரிக வாழ்வு பண்டு இந்நாட்டில் தலை சிறந்திருந்தது. இன்று பரிதாப நிலையில் புலை மண்டியுள்ளது.

மேனி மினுக்காய்ச் செய்து வருகிற வெளிப்பகட்டுகளையே நாகரிகங்கள் என்று கருதிக் குருட்டுத்தனமாய்க் களித்துச் செருக்கி மருண்டு மயங்கி மக்கள் திரிந்து வருகின்றனர்.

நேரிசை வெண்பா

உருட்டும் புரட்டும் உளமலிந்(து) ஓங்கச்
சுருட்டுவாய் நின்று துலங்க - மருட்டு
தொழிலும் மொழியும் தொடர்ந்து வளரப்
பழியுந்தி நிற்பர் பரிந்து. – கவிராஜ பண்டிதர்

என்றபடியே திரிந்து வருதலால் நாட்டு மக்கள் வாழ்வு கெடுநிலையை நோக்கிப் பரிதாபமாய்ப் பாழ்பட்டுள்ளது.

அயல் நாட்டு மினுக்கில் செயல் காட்ட நேர்ந்தமையால் யாவும் போலிகளாய் நீண்டு மயல் நீட்டி நின்றன.

Modern civilization has tended to make our lives artificial. - Smith

நவீன நாகரிகம் நமது வாழ்க்கையை வெளிப் பகட்டாய்ச் செய்திருக்கின்றன’’ என்று ஸ்மித் என்னும் ஆங்கில ஆசிரியர் இங்ஙனம் கூறியிருக்கிறார்.

தேக சுத்தம், வெள்ளை உடை, முடி ஒழுங்கு முதலியன அவசியம் தேவையாயினும் அவ்வளவோடு பிலுக்காய் நின்று விடுவது நாகரிகம் ஆகாது; உள்ளப் பண்புடன் யாண்டும் இதம் புரிந்து வருவதே உயர்ந்த நாகரிகமாம்.

கண்ணோட்டம் புரிந்துவரும் அளவு அந்த மனித வாழ்க்கை கண்ணியம் கனிந்து புண்ணியமுடையதாய்ப் பொலிந்து வருகிறது.

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. 571 கண்ணோட்டம்

உலகிற்குக் கண்ணோட்டம் உயிராதாரமாய் உள்ளமையை இதனால் உணர்ந்து கொள்கிறோம். காரிகை – அழகு; கண்ணோட்டம் மனிதனுக்குப் பேரழகு என்றதனால் அதன் பெருமையும் அருமையும் அறியலாகும்.

தன்னை உடையவனை யாவரும் விழைந்து நோக்கி உவந்து புகழும்படி செய்யுமாதலால், கண்ணோட்டம் கழிபெருங்காரிகை என விழிதெரிய விளக்கினார் வள்ளுவர். இந்த உயிரழகை உற்றவன் உயர் நாகரிகனாய் ஒளிபெற்று நிற்கிறான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Nov-19, 4:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 62

சிறந்த கட்டுரைகள்

மேலே