கடல்சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி – நல்வழி 16

நேரிசை வெண்பா

தண்ணீர் நிலநலத்தால்; தக்கோர் குணங்கொடையால்;
கண்ணீர்மை மாறாக் கருணையால்; - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றால் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. 16 நல்வழி

பொருளுரை:

தண்ணீரானது நிலத்தின் நன்மையினாலும், நல்லோருடைய குணமானது ஈகையினாலும். கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும் கடல் சூழ்ந்த பூமியினிடத்து வியக்கத்தக்க மேன்மையுடையனவாகும் என்று நீ அறிவாயாக.

கருத்து:

நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும்.

விளக்கம்:

கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் தண்ணீரின் பெருமை அது இருக்கும் நிலத்தின் தன்மையினாலும், நல்ல மனிதர்களின் பெருமை அவர் செய்யும் தர்ம காரியங்களினாலும், கண்ணின் பெருமை கருணை பொங்கும் விழிகள் மூலமும், சிறந்த பெண்ணின் பெருமை அவளின் கற்பு நெறி மாறாப் பண்பினாலும் நீ அறியலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Nov-19, 8:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

மேலே