உள்சுடினும் சிற்றிற் பிறந்தாரைச் சீறற்க – நான்மணிக்கடிகை 1

நேரிசை வெண்பா

எள்ளற்க என்றும் எளியாரென்1 றென்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா2 - உள்சுடினும்
சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க
கூறல்ல வற்றை விரைந்து. 1 நான்மணிக்கடிகை

பொருளுரை:

எக்காலத்தும் பொருள்வலிகளாற் குறைந்தவரென்று பிறரை இகழாதீர்கள்;

மிகச் சிறந்த ஒன்றைப் பெறுவதனாலும் கொள்ளத் தகாதவருடைய கைகள் தன் கைகளுக்கு மேற்பட்டன ஆகும்படி அவரிடம் ஒன்றும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்:

வறுமை மிக்க குடியிற் பிறந்தவர்களை அவர் செய்கை தனதுள்ளத்தை வருத்துவதாயினும் சினவாதீர்கள்;

சொல்லத்தகாத சொற்களை பதைத்துக் கூறாதீர்கள்.

கருத்துரை.

எவரையும் எளியரென்று இகழாதே; சிறந்த பொருளாயினுந் தகாதவர் கொடுக்க வாங்காதே; தகாதன செய்தாலும் ஏழை மக்களைச் சீறாதே; தகாத சொற்களைப் பதைத்துச் சொல்லிவிடாதே.

விளக்கவுரை: தன்னிடத்தில் ஒன்றை விரும்பி நட்பாய் வருங்காலத்திலும், தனக்கு ஆக்கம் வந்த காலத்திலும் பிறரை எள்ளற்க வென்பதனால் ‘என்றும்' என்றார். சிற்றில் என்ற சிறுமை வறுமை மேல் நின்றது.

(பாடம்) 1. எளியரென், 2. கை மேற்பட.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Nov-19, 4:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே