கல்வியின் ஊங்கில்லை சிற்றுயிர்க்கு உற்ற துணை - நீதிநெறி விளக்கம் 2

நமது அறியாமையை நீக்கி அறிவைப் பெருக்கி நமக்கு உதவியாக இருக்கின்ற கல்வியானது நால்வகைப் பயனையும் நமக்குத் தருகிறது. நால்வகைப் பயன்கள் யாவை என்பதை நாம் தெரிந்துகொள்வோமா? அறம், பொருள், இன்பம், வீடு என்பவையே நால்வகைப் பயன்கள் ஆகும்.

நேரிசை வெண்பா

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்இசையும் நாட்டும் – உறும்கவலொன்(று)
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லை
சிற்றுயிர்க்கு உற்ற துணை. 2

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

ஒழுக்கம் செல்வம் இன்பம் என்னும் மூன்றுடன் வீடு பேற்றையும் கொடுக்கும்; உலகத்தில் குற்றமற்ற புகழையும் நிலைநிறுத்தும்;

நேரக்கூடிய வருத்தமொன்று நேர்ந்த பொழுதும் கைகொடுத்து உதவி செய்யும்;

ஆதலால், சிறிய உயிர்களாகிய மக்கட்குத் தக்க துணை கல்வியை விட வேறொன்றில்லை.

விளக்கம்:

வீடு, முதல் மூன்றன் பயன்களுடன் மறுமையில் எய்துதற்குரியதாகலானும் அதனை மட்டும் உம்மை கொடுத்து வேறு பிரித்தார்.

புறங்கடை புறத்தில்; புறம் என்றது கற்றறிந்த புலவன் இருக்கும் ஊர்க்குப் புறனாய இடம் என்னும் பொருளில் நின்றது.

உறுகவல்; முன்வினைப் பயனாகக் கட்டாயம் வந்தே தீருங் கவலைக்கிடமான செய்கை.

உழி - பொழுது; இடமுமாம்.

சிற்றுயிர் - அறிவிலும் ஆற்றலிலும் சிறுமையுடைய உயிர்;

துணையாயிருப்பதென்பது உற்றுழியுதவலாகலின், அவ்வுற்றுழியுதவலுக்கு வேறாக அதனினும் மேம்பட்ட நல்லிசையையும் அறமுதலா நான்கினையும் தரவல்லதாதலால், கல்வி உற்ற துணையாயிற்று.

இச்செய்யுளில் உள்ள பயக்கும், நாட்டும், கைகொடுக்கும் என்னுஞ் சொற்கள் மிக்க ஆற்றலுடையவை. பயக்கும் நாட்டும் கொடுக்கும் என்பனவற்றைப் பெயரெச்சமாக்கிக் கல்விக்கு அடைமொழி யாக்கலுமாம்.

கைகொடுக்கும் என்பது இடையே வந்த இடுக்கணைக் கெடுத்துச் செய்யத்தக்கது இதுவென அறிந்து உள்ளம் ஓங்குவதற்கு ஏதுவான அறிவினை உண்டாக்குதல்.

கருத்து:

மக்களாய்ப் பிறந்தவர்கள் கல்வியே தக்க துணையென்று நம்பிக் கற்க வேண்டும்.

(புறங்கடை = வெளி வட்டாரம், இசை = புகழ், நாட்டும் = நிறுத்தும், உறும் = அடையும், கவல் = கவலை, உற்றுழி = ஏற்பட்ட வேளை, ஊங்கு = சிறந்தது)

அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றின் வாயிலாகத்தான் மனிதன் வீடுபேறு என்னும் முக்தி நிலையை அடையமுடியும். எனவே நால்வகைப் பயனையும் கல்வியால் பெறமுடியும் என்பதை உணர்த்த விரும்பிய குமரகுருபரர் ‘அறம், பொருள், இன்பமும்’ என்று தனியாகச் சொல்லி அதன் பிறகு ‘வீடும்’ என்று பிரித்துக் கூறியுள்ளார்.

கல்வி கற்றவர்கள் மேலே கண்ட நால்வகைப் பயனைப் பெறுவதுடன் உலகில் நல்ல புகழையும் அடைவார்கள். மேலும், கவலை ஏற்படும் போது அந்தக் கவலையிலிருந்து மீள்வதற்கு உரிய வழியையும் கல்வி தரும் என்பதையும் குமரகுருபரர் கூறியுள்ளார்.

எனவே மனிதனுக்குக் கல்வியைத் தவிர வேறு எதுவுமே சிறந்த துணையாக இருக்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Nov-19, 5:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே