வனவிலங்கு போல மனமழுங்கி நின்றால் கனவிலிங்குண்டோ கதி - நாகரிகம், தருமதீபிகை 527

நேரிசை வெண்பா

படித்தபடிப் பெல்லாம் படியாமை புன்மை
பிடித்தபிடி எங்கும் பெருகத் - தடித்த
வனவிலங்கு போல மனமழுங்கி நின்றால்
கனவிலிங்(கு) உண்டோ கதி. 527

- நாகரிகம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கற்ற கலைகளை எல்லாம் பொல்லாத நிலைகளில் செலுத்திக் காட்டு மிருகங்கள் போல் மனம் போனபடி திரிந்து மதிகெட்டு நின்றால் கனவிலும் கதி காண முடியாது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பல நூல்களையும் படித்து வருவது படிப்பு என வந்தது. கல்விக்கும் இதற்கும் சிறிது வேறுபாடு உண்டு. உள்ளத்தில் புதைந்திருக்கும் அறிவை ஊன்றித் தோண்டிக் கொள்வது கல்வி. வெளியே விரிந்து பரந்துள்ள நூல்களை ஓர்ந்து படித்துத் தேர்ந்து கொள்வது படிப்பு. மனமும் இனமும் போல் இவை அகமும் புறமும் உறவாய் மருவியுள்ளன.

இந்நாட்டுப் படிப்பு மறுமை நோக்கம் மருவியது; உறுதி நலங்களைக் கருதியது. தெய்வ சிந்தனை செய்து உய்தி பெறுவது.

நித்திய அநித்தியங்களை உணர்ந்து சத்தியம் தெளிந்து உத்தம நிலையை அடையவில்லையாயின் அந்தக் கல்வி அறிவு கடையாய் இழிந்து படுகிறது.

நேரிசை வெண்பா

சென்றது காலம்; சிதைந்த(து) இளமைநலம்;
நின்றது,சா வென்று நினைந்துருகி - மன்றில்
நடிக்கின்ற பால்வண்ணர் நாமமெண்ணா மாந்தர்
படிக்கின்ற நூலெல்லாம் பாழ். - வரதுங்க பாண்டியன்

காலம் இருக்கும் பொழுதே உயிர்க்கு ஊதியம் கருதிக் கொள்ள வேண்டும்; அங்ஙனம் கொள்ளானாயின் அந்த மனிதனுடைய படிப்பும் வாழ்வும் பாழ் என இங்ஙனம் பரிந்து கூறியுள்ளார். துக்கம் ஒழிய, சுகம் விளையப் படிப்பதே படிப்பாம்.

கற்றும் பலபல கேள்விகள் கேட்டும் கறங்கெனவே
சுற்றும் தொழிலுற்றுச் சிற்றின்பத் தூடு சுழலினென்னாம்?

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

கற்றும் என்பலன்? கற்றிடு நூன்முறை
சொற்ற சொற்கள் சுகாரம்ப மோ?நெறி
நிற்றல் வேண்டும் நிருவிகற் பச்சுகம்
பெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே. - தாயுமானவர்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 3 / மா அரையடிக்கு)

படிப்படக்கிக் கேள்வியெலாம் பற்றறவிட் டடக்கிப்
..பார்த்திடலும் அடக்கியுறும் பரிசெலாம் அடக்கித்
தடிப்புறும் ஊண்சுவை அடக்கிக் கந்தமெலாம் அடக்கிச்
..சாதிமதம் சமயமெனும் சழக்கையும்விட் டடக்கி
மடிப்படக்கி நின்றாலும் நில்லேன்நான் எனவே
..வன்குரங்கும் வியப்பயென்றன் மனக்குரங்கு குதித்த
துடிப்படக்கி ஆட்கொண்ட துரையே!என் னுளக்தே
..சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே. - அருட்பா

படித்த மேலோர்களுடைய மனநிலைகளையும் குறிக்கோள்களையும் இவை உணர்த்தியுள்ளன. இன்னவாறு உன்னத நிலையில் உயர்ந்த நோக்கோடு ஓங்கியிருந்த இந்நாட்டுப் படிப்பு இன்னாளில் கேட்டுப் படிப்பாய்க் கெடுநிலையில் இழிந்துள்ளது.

’படித்த படிப்பு எல்லாம் படியாமை’ என்றது இக்காலப் படிப்பின் கோலம் தெரிய வந்தது.

எவ்வளவு படித்தாலும் உண்மை உணர்ச்சியின்றி எங்கும் பலர் பொங்கித் திரிகின்றனர். அவருடைய உள்ளப் போக்கும் உரைகளும் செயல்களும் யாண்டும் எள்ளத் தக்கனவாய் இழிந்து நிற்கின்றன.

நேரிசை வெண்பா

இளமை தொடங்கி இருபதாண்(டு) எல்லை
வளமையொடு கற்று வரினும் - உளமையல்
தீரார்;தம் தாய்மொழியும் தேரார்;முன் கற்றதும்பின்
ஓரார் ஒழிவர் உலைந்து. - கவிராஜ பண்டிதர்

கற்றவர்கள் என இக்காலம் களித்துக் திரிபவர்களுடைய நிலைகளை இது சிறிது குறித்துக் காட்டியிருக்கிறது. அயல் மொழியில் மயலாய் இருபது வருடங்கள் படித்தாலும் ஏதும் தெளிவாகத் தெரியாமல் இறுமாந்து திரிவது பெரிதும் பரிதாபமாயுள்ளது.

“Getting by heart the thougts of others in a foreign language and stuffing your brain with them and taking some university degrees, you consider yourself educated. Is this education?” - Vivekananda

'அன்னிய மொழியிலுள்ள பிறருடைய எண்ணங்களை மூளையில் வருத்தித் திணித்து மனப்பாடம் செய்து காட்டிச் சர்வகலாசாலையில் சில பட்டங்களைப் பெற்றுக் கொண்டவுடன் பெரிய கல்விமான்கள் என உங்களை நீங்களே நினைத்துக் கொள்கிறீர்கள்; இது கல்வியா?' என ஆங்கிலப் பட்டதாரிகளை நோக்கி விவேகானந்தர் இவ்வாறு வினவியிருக்கிறார்.

உணர்ச்சியில்லாத படிப்பு; நம்நாட்டுக்குக் கேட்டை விளைப்பது என அம்மகான் இப்படி வருந்தியிருத்தலால் படிப்பாளிகளின் நிலைமைகளைத் தெரிந்து கொள்ளுகிறோம். தமது உரிமையான அருமைத் தாய்மொழியை அறவே மறந்து ஆங்கில மோகத்தால் நம்மவர் செய்து வருகிற சிறுமைச் செயல்களை எண்ணுந்தோறும் உள்ளம் எரிகிறது, கண்ணீர் வருகிறது.

கட்டளைக் கலித்துறை

தாயைச் சிறிதும் மதியா(து) இகழ்ந்து தழுவிநின்ற
மாயைச் சிறுமி மயக்கில் இழிந்த மருளரென
நோயைத் தவிர்த்தருள் தண்தமிழ்த் தாயை நுவலலின்றி
வாயைத் திறந்திடில் ஆங்கிலச் சொல்லே வழங்குவரே! - கவிராஜ பண்டிதர்

நம் நாட்டு மக்களுடைய நிலைமைகளை இப்பாட்டு காட்டியுள்ளது. இழிவாய் மொழியாடி வருகிற இந்த இழிந்த பழக்கம் இப்பொழுது குறைந்து வருகிறது. வரினும், முழுதும் ஒழியாமல் உள்ளது. அயல்மொழிகளை நன்கு பயின்று அவற்றின் கருத்துக்களைத் தெளிந்து திருத்தம் அடையாமல் வெறும் வாய் உருட்டிலேயே வயிற்றை வளர்க்க மூண்டு களித்துத் திரிகின்றனர்; திரிபுணர்ச்சி ஒருவி, மரபுணர்ச்சி மருவி வரவேண்டும்.

ஆங்கிலேயரிடம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அறிவு நலங்கள் பல உள்ளன. காலம் கருதல், வலியறிதல், வினையாண்மை, ஊக்கம், உறுதி, நேர்மை, சீர்மை, கூர்மை முதலிய நல்ல நீர்மைகளை அவர்களிடமிருந்து உணர்ந்து கொள்ளாமல் பொல்லாத பகட்டுகளையே பழகிக் கழித்து வருகிறோம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

வெள்ளையர்பால் அமைந்துள்ள வினையாண்மை முதலாய
மேன்மை வாய்ந்த
ஒள்ளியநற் குணங்களொன்றும் ஊதியமாய் உளங்கொள்ளார்;
ஊக்கி அன்னார்
கொள்ளுகின்ற உடைகளையும் தலைதறிப்பும் புகைக்குடியும்
குடியும் அந்தோ
அள்ளிநின்று துள்ளுகின்றார் அவநிலையில் நம்மவர்தம்
ஆர்வம் என்னே! - இந்தியத்தாய் நிலை

அழிவும், இழிவும் தருதல் கருதி அவநிலை என்றது. அவற்றின் வகையும் தொகையும் தெரிய குடி இரண்டனுள் புகைக் குடியை முதலில் குறித்தது.

கள்ளுக் குடியைக் காட்டிலும் புகைக்குடி நம் நாட்டைப் பலவகையிலும் பாழாக்கியுள்ளது. அந்தக் குடியை ஒழித்ததில் அரசாங்கத்திற்குப் பதினெட்டுக் கோடி நட்டம், சுதந்திர ஆட்சியில் நிரந்தரமான நலனை அரச மன்றம் துணிந்து செய்திருப்பது புகழ்ந்து போற்ற வுரியது. புகைக் குடிக்கும் இப்பொழுது தடை விதித்திருக்கிறது. விதித்துள்ள தடை விசித்திரமுடையது; ’சிறுவர் புகை குடிப்பது குற்றம்” எனக் குறித்துள்ளது. பெரியவர் குடிக்கலாம் என இது அடிகோலியபடியாயது. வயது முதிர்ந்தவரைத் தடுப்பதில் அச்சம் தோன்றியுள்ளது என்று தெரிகின்றது. சட்டம் விதிக்கின்ற ஆட்சிக் குழுவினரிடமே இந்தப் புகைக்குடி புகுந்திருத்தலால் அதனை அடியோடு ஒழிக்க முடியாமல் சற்று விலக்களித்துப் பெரிய மனிதர் குடிக்கும் அரிய குடியைப் பேணியிருக்கின்றனர் எனச் சிலர் பேசி வருகின்றனர். தான் திருந்தாமல் உலகத்தைத் திருத்த முயல்வது பயனில் செயலாம். கோன் திருந்தின் குடிகள் திருந்தும்.

மிகவும் குளிர்ந்த தேசமாகிய மேல்நாட்டில் புகை குடிப்பது குற்றமாகாது. இந்நாட்டிற்கு எவ்வகையிலும் வேண்டாதது. செவ்வாயைக் கருவாய் ஆக்கி, நுரையீரலைக் கெடுத்து, உதிரத்தைப் பழுதாக்கி, உடல் வலிமையைச் சிதைத்து, ஊறு செய்து வருகிற பேரிழவை நாளும் வாயில் வைத்து வந்தால் அந்த மனித வாழ்வு எவ்வளவு பாழானது! எண்ணி உணர வேண்டும்.

ஒரு காசுக்கு இரண்டு பீடி விற்கிறவர் பலகோடி திரவியங்களுக்கு அதிபதிகளாயுள்ளனர்; ஆகவே எத்தனை கோடி புகைக்குடியர் இந்நாட்டில் பெருகியிருக்கின்றனர் என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம்.

பொருளாதாரத் துறையில் நன்கு பயின்ற அறிஞர் ஒருவர் ஒரு நாள் இங்கு வந்தார். உலக நிலைகளைக் குறித்துப் பல பேச்சுகள் நிகழ்ந்தன. முடிவில் புகைக் குடியைப் பற்றிப் பேச நேர்ந்தது. கேள்வியும் பதிலும் கிளர்ந்து வந்தன.

நான்: நூற்றுக்கு எத்தனை பேர் புகை குடிப்பார்கள்?
அவர்: நூற்றுக்கு எழுபது பேர் குடிப்பார்கள்

நான்: அவ்வளவு இராது, கொஞ்சம் குறைத்துச் சொல்லுங்கள்.
அவர்: ஐம்பது பேருக்குக் குறையாது.

நான்: ஒரு ஆள் எவ்வளவு குடிப்பான்?
அவர் ஒரு நாளைக்கு ஏழு ரூபாய்க்குக் குடிக்கும் பெரிய மனிதரும் உளர்; அகற்குக் குறைந்து குடிப்பவரும் இருக்கின்றனர்.

நான்: பெருங் குடியரையும் சிறு குடியரையும் ஒருங்கு சேர்த்துச் சராசரி கணக்கு எடுத்தால் ஓர் ஆளுக்கு எவ்வளவு ஆகும்?
அவர்: குறைந்தது நாலு அணா ஆகும்.

நான்: இன்னும் சிறிது குறைத்துக் கூறுங்கள்.
அவர்: இரண்டு அணா வைக்கலாம்.

நான்:: ஒரு அணா வைத்துக் கொள்ளுங்கள். இந்த மதுரையில் சனத் தொகை எவ்வளவு?
அவர்: ஏழு லட்சம் பேர் உள்ளனர்.

நான்: மூன்று லட்சம் பேராவது கட்டாயம் குடிப்பர் அல்லவா?
அவர்: ஆம்.

நான்: மூன்று லட்சம் அணாக்களை ரூபாய் ஆக்குங்கள்.
அவர் பதினெண்ணாயிரத்து எழுநூற்று ஐம்பது.

நான்: நாள் ஒன்றுக்கு இவ்வளவானால் ஒரு மாதத்திற்கு என்னாகும்?
அவர்: ஐந்து லட்சத்து அறுபத்தீராயிரத்து ஐந்நூறு.

நான்: ஒரு மாதத்திற்கு 562500 ஆனால் வருடத்துக்கு என்னாகும்?

இதற்கு அவர் பதில் சொல்லவில்லை; திகைத்து நின்றார்.

இந்த ஒரு ஊரிலேயே புகைக்குடியில் இவ்வளவு பாழாகின்றது; எல்லா ஊர்களிலும் சேர்த்துக் கணக்கெடுத்தால் எவ்வளவு ஆகும்? என வினவவே அவர் வியப்படைந்தார். கள்ளுக் குடியிலும் இக் குடி கொடியது; பெருங் கேடுடையது' என்று சொல்லிப் போனார்.

இந்தக் கேட்டிலிருந்து நீங்கி நம் நாட்டு மக்கள் நலம்பெற ஆண்டவன்தான் அருள் புரிய வேண்டும். பரிதாப நிலைகள் பெரிதாய் உள்ளமையால் பாவ மருள்கள் யாண்டும் நீண்டு நிற்கின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

ஒருகாசுக்(கு) இருபீடி விற்பவரும் பலகோடிக்(கு)
..அதிபர் ஆகிப்
பெருகாசர் எனயெவரும் பேணிவரப் பெருகிவரும்
..பெருமை காணின்
வருகாசும் புகைக்குடியும் இந்நாட்டில் எவ்வளவு
..வளமாய் நீண்டு
திருகாசர் திரிகின்றார் என்பதைநேர் தெரியினோ
..தீமை யாமே!

பீடிநீகு டித்தாயேல் பீடையுனை விடாதுகாண்!
..பீழை மலிந்து
நீடிவரு சுருட்டெனினோ நீசுருண்டு வீழ்ந்தழிவாய்;
..நெடிய மூச்சுள்
ஓடிவரு பொடியாயின் ஒருபொடிய னாயிழிவாய்!
..உறுதி ஓர்ந்து
நாடியுனை எவ்வழியும் நலமாகப் பேணிவரின்
..நன்மை யாமே.

தன்னைச் சீரழித்துச் சிறுமைப்படுத்தும் ஈனங்களை இகழ்ந்து ஒழித்தபோதுதான் மனிதன் மானமும், ஞானமும் உடையனாய் மகிமையடைவான். புலை ஒழிக, நிலை தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Nov-19, 8:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

சிறந்த கட்டுரைகள்

மேலே