கெட்டறிப கேளிரான் ஆய பயன் – நான்மணிக்கடிகை 3

இன்னிசை வெண்பா

மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து
ஏறிய பின்னறிப மாநலம் மாசறச்
சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப
கேளிரான் ஆய பயன். 3

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

மாணிக்கம் முதலான மணிகளின் நல்லியல்பை கழுவியறிவார்கள்;

குதிரையின் நல்லியல்பை அதன்மேற் சேணமமைத்து ஏறிய பின் அறிவார்கள்;

பொன்னின் மாற்றை யறிவார் குற்றங்கெட அதனை உருக்கியறிவார்கள்;

உறவினரால் உண்டாகும் பயனை செல்வமெல்லாங் கெட அறிவார்கள்.

கருத்து:

மக்கள், செல்வம் கெட்டு வறுமையுறும் போதுதான் அவர் உறவினரால் அவர்க்கு உண்டாகும் பயன் நன்கு அறியப்படும்.

விளக்கம்:

மண்ணல் - கழுவல். பண் - சேணத்தையுணர்த்துதல்,

பொன்னின் நலமென்பது, வெள்ளி முதலியன:கலவாமை. காண்பார் இதனை மற்றவற்றிற்குக் கூட்டியுரைத்தலுமாம்.

கேளிர் - ‘கேண்மை' யென்னும் பண்படியாகப் பிறந்த பல்லோர் படர்க்கைப் பெயர்.

செல்வ மிக்கான் ஒருவன் தான் வறுமையுற்ற காலத்துக் கேளிரின் நன்றியறிவை நன்கறிவானாதலின் ‘கெட்டறிப.....பயன்' என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Nov-19, 9:40 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே