அறிவார்யார் நல்லாள் பிறக்குங் குடி – நான்மணிக்கடிகை 4

இன்னிசை வெண்பா

கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின்
ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்
பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்
நல்லாள் பிறக்குங் குடி. 4

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

அகிற்கட்டை கள்ளிமரத்தின் நடுவில் உண்டாகும்; ஒளியுள்ள அரிதாரம் மான் வயிற்றில் உண்டாகும்; மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய கடலினுள் பிறக்கும்; நல்ல மக்கள் பிறக்கும் குடும்பத்தை முன்பே அறிய வல்லவர் யார்? யாருமில்லை.

கருத்து:

எக்குடியினும் நன்மக்கள் தோன்றுவர்.

விளக்கவுரை:

கள்ளி - சதுரக்கள்ளி; அகின்மரம் வேறேயிருப்பினும், இக் கள்ளியினுள் உண்டாகும் உள்ளீடு அகில் போல் மணமுடைமையின் இதனையும் ‘அகில்' எனக் கொள்வர்.

ஆள் - நல்லியல்புகளை ஆளும் நன்மக்கட்குப் பெயர்.

எக்குடியினும் நல்லார் பிறத்தலை முற்காலத்திலும், இன்றுங் காண்கின்றமையின், அவர் பிறக்குங் குடி இதுதானென்று துணிந்தறிதல் கூடாமையின் ‘அறிவார் யார்' என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Nov-19, 9:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே