காலடி கீழடி அல்ல

==========================

நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

அது "அவர்கள்" முன்வைத்த ஒரு பயணத்திட்டம். கற்கால தடயங்களை அணுகி செல்லும் பயணம்.

அந்த தடயத்தை பரிசீலித்து பார்க்கும்போது வாழ்வில் மீண்டும் ஒரு மீட்டுருவாக்கம் செய்வதற்கு ஏதுவான அம்சங்கள் அதில் சான்றுகளோடு இருப்பதாக நாங்கள் நம்பினோம்.

இருப்பினும்...

சந்தித்த பின்னர் அதனுடனான எல்லா பழைய உறவை பிணைப்பை விலக்கி கொள்கிறோம் என்ற ஷரத்தை எந்த முன் நிபந்தனையுமின்றி நாங்கள் ஏற்று கொண்டோம். அவர்களுக்காக...

நாங்கள் அதை பார்க்க விரும்புகிறோம். அது என்பதை எளிமைப்படுத்தி சொல்ல கொஞ்சம் சிக்கலானது.

மறைக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட
கேட்பாரற்று தலைமுறைகளுக்கு முந்திய வரலாற்றுக்குள் தவறிப்போன ஒன்றை
சந்திப்பதுதான் அது.

அவர்கள் அதற்கான பயணத்தின் முன் வரைவை எங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

காடுகள் மலைகள் கடல்கள் பள்ளத்தாக்குகள் நதிதீரங்களை தாண்டி சலிக்காத வீர தீரங்களை பிரயோஹித்து பின் சந்திக்க வேண்டிய வஸ்துதான் அது.

பயணகாலத்தில் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதை தீர்மானங்கள் இயற்றி கையொப்பம் பெற்று உடல் மன பரிசோதனைகளை முடித்துக்கொள்ள நாட்கள் குறிக்கப்பட்டன.

நாங்கள் ஒரு நாள் நகரத்துக்கு வெளியில் ஒன்றாக குமிழினோம். அது கடற்கரை சார்ந்த பிரதேசம்.

நாடியா டாட்டூ வரையப்பெற்ற மார்புகளை சூரியனுக்கு காட்டி கொண்டிருந்தாள்.
அவளையொத்த கன்னிகள் உடல் மூடியும் மூடாமலும் கடற்கரை மணலில் பொதிந்திருந்த நெருப்பை தங்கள் உடற்சூட்டால் வாட்டி கொண்டிருந்தனர்.


இன்னொரு மூலையில் ஆஜானுபாகுவான கிழவர்கள் தங்களின் பௌதீக அறிவியலையும் சாஸ்திர நுட்பங்களையும் ஒன்றிணைத்து பேசிக்கொண்டிருந்தனர்.

பாபி டீசர்,கோஸ்டாஸ் எழுதிய எலெக்ட்ரோமாக்நாடிக், இன்டெக்சன் புத்தகங்கள் செல்லாது போன காலம். திசையும் திக்கும் தெரியாத அறிவியல் உலகத்தில் அந்த கிழவர்கள் செவ்வாயில் இருந்து இறக்குமதி ஆன விஸ்கியோடும் கீரை பொட்டலங்களோடும் யோசித்து கொண்டிருந்தனர்.

நாங்கள் அதை சந்திக்கும் சவால்களை விடவும் அது எப்படி தீர்ந்து அழிந்து போனது எப்படி? நீர்த்து போனது எப்படி? என்பதை முடிந்த வரைக்கும் ஆவணப்படுத்தவே முயற்சி செய்தோம்.

இது "அவர்களின்" நிபந்தனைகளை மீறும் செயல். உடன்பாடு நிபந்தனைகள் மீது செய்யும் துரோகம். பார்த்துவிட்டு பின் அங்கிருந்து அகன்று செல்ல மட்டுமே அவர்கள் அனுமதி வழங்கி இருந்தனர்.

அவர்கள் நெறிகள் என்பதன் மீது எந்த மரியாதையும் கொண்டவர்கள் அல்லர். அதேசமயம், மனுக்குலம் கொண்டிருக்கும் பற்பல அதிகார வர்ணங்களுக்கும் அனைத்து சித்தாந்தங்களுக்கும் முழு எதிர்ப்பை பதிவு செய்தவர்கள்.

காலத்தின் பிடியில் இருந்தும் நினைவுகளில் இருந்தும் மனிதனை கிட்டத்தட்ட பிய்த்து எடுத்து தனிமை செய்யவே அவர்கள் வந்தார்கள். அதை அப்படியே நிறைவேற்றினர்.

மொழியின் மீதும் அதனுள் ஊடுருவி நிற்கும் கடும் சிக்கல்களையும் அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர்.

அறநூல்கள், ஒழுக்கம் பற்றிய பார்வைகள், குழப்பம் மிகுந்த நீதி நேர்மை பற்றிய கருத்துருக்கள், பாவம் புண்ணியம் என்னும் மேஜிக்கல் ரியலிசம் இவை யாவும் போதிக்கப்பட்ட எங்களுக்கு
அவர்கள் அதை எல்லாம் தடை செய்தனர்.

நாங்கள் "நான்" என்னும் தன்னுணர்வை அடைய ஒரு செயலுக்குள் புகுத்தினர்.
அதை அரசியல் மக்களாட்சி ஜனநாயகம் கம்யூனிசம் என்றெல்லாம் கூறினர்.

நான் என்பதற்கு மிக அருகில் அரசியல் என்ற கருத்து இருந்தது.

நாம் என்பதற்கு மிக அருகில் பணம் என்ற அலகு இருந்தது.

இதில் "நாங்கள்" என்பது எங்கே இருக்கிறோம் என்பதை கண்டறியவே இந்த பயணம் என்று அவர்கள் கூறினர்.

இந்த வாய்ப்பு ஒரு முறை மட்டுமே என்றும் மேலும் அமெரிக்க கிராமம் ஒன்றில் ஆதி காலத்துக்கு முன் கண்டறிந்த KOI 7711.01 என்னும் கோளுக்கு செல்லும் வாய்ப்பை விட அரிதான ஒன்று என்றும் ஆசை காட்டி பயணிக்க எங்களை வற்புறுத்தினர்.

பயணத்தின் முடிவில் நாங்கள் இறுதியாக அதை சந்திக்க முடியும்.

                      **************

நாடியா கடல் நீரையும் ஒளியின் கிரணங்களையும் பார்த்து கொண்டிருந்தாள். அவள் தந்தை பஞ்சாபகேசன் சொல்லிக்கொடுத்த பல பெட் டைம் ஸ்டோரிஸ் அவளுக்கு நினைவில் வந்து போயின.

அவள் தந்தை கடவுள் என்பதை பலமுறை பேசி இருக்கிறார்.

அவர் கடவுள் எதையும் செய்யும், திருத்தும், ஆக்கும், அழிக்கும், படைக்கும் வல்லமை கொண்டவர். தீவிரம் அற்றவர். மன்னிப்பவர் என்றும் சொல்லி இருந்தார்.

கடவுள் மனிதர் போலவே இருப்பவர்கள் என்றாலும் எந்த வடிவத்திலும் கடவுளரை நாம் தரிசிக்க முடியும் என்பதை ஆழமாக நம்பி அவளுக்கும் அவ்வாறே நம்ப கற்று கொடுத்தார்.

இதற்கு ஒரே ஆதாரமாக அவர் எடுத்து காட்டிய உதாரணம் இந்தியாவை சேர்ந்த ஓர் கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை வரலாறு. சில்க் ஸ்மிதா என்று அவள் பெயரையும் சொல்லி இருந்தார்.

சில்க் ஸ்மிதா உயிருடன் இருந்த போது அத்தர் போல் மணந்து இறந்த பின்பும் அவளை தெய்வம் போல் கொண்டாடிய மக்களுக்கு கனவில் தோன்றி  அம்மக்களை அதே கனவில் புனிதமாக்கி வந்தவர் என்று பஞ்சாபகேசன் கூறினார்.

அந்த சில்க் ஸ்மிதா ஏனைய ஸ்மிதாக்களை விட காந்தப்பார்வை மிக்கவர் என்றும் "மறைபொருள்" காட்டும் ஆற்றல் கொண்டவர் என்றும் கூறினார்.

நாடியா நிற்கதியுடன் நம்பினாள். ஏழு கோடி மக்கள் நம்பிய ஒன்றை அவள் நம்பியதில் என்ன ஆச்சர்யம்?

அந்த ஏழு கோடிகள் வாழ்க்கை பற்றியும் அவள் கேள்விப்பட்டு இருந்தாள்.  ஜாதி என்ற ஒற்றை சொல்லாடல் மூலம் ஒருவரையொருவர் எண்ணம் செயல் சிந்தனைகள் மூலம் வன்மம் பூண்டு வாழ்ந்த மக்கள் என்பதும், நெக்குறுகும் வசனம் பேசி கதைகள் பேசி சிந்தனையால் கன்னிபாலிசத்தை காப்பாற்றி வந்தவர்கள் என்றும், காட்டுமிராண்டிகளுக்கு பின் வந்த செண்டினல் மக்களுக்கும் பின் வந்தவரே அந்த ஏழு கோடி மக்கள் என்பதும் அவள் படித்திருந்த விஷயம்.

நாடியாவுக்கு பெருத்த ஆவலை ஊட்டிய தகவல் ஒன்று உண்டென்றால் அது அந்த ஏழு கோடிகள் காதலிக்கவும் உடலுறவு கொள்ளவும் கொண்ட உடலுறவை மீண்டும் மனதில் அசை போட்டு பார்க்கவும், எந்த பகல் கனவுகளையும் விட்டு வைக்காமல் அனுபவிக்க எப்போதும் பாடல்களை மட்டுமே நம்பினர் என்பதுதான் அது.

பாடல்கள் அந்த ஏழு கோடி குருதியில் கலந்திருந்தது. ஒரே பாடலை புல்லரிப்பு நிற்காது தலைமுறைக்கும் கேட்பவர்கள் கடத்துபவர்கள் என்பதும் நாடியாவை கிளர்ச்சியூட்டியது.

கிழவர்கள் ஏதோ திட்டமிட்டு கொண்டிருந்தனர். ஒரு கிழவரின் அருகில் சென்ற கனகாசெலினியம் மெல்ல கேட்டாள்..."நாம் என்று புறப்படுகிறோம்?"

நிவர்த்திக்க முடியாத அசம்பாவிதங்களை பொறுத்துக்கொள்ள முடியுமாயின் மிக விரைவில் என்றார்.

அது என்பதன் வெளிப்படையான உண்மையான வடிவம் அர்த்தம் என்ன? என்றாள் கனகாசெலினியம்.

கிழவர் அவளை உற்று நோக்கினார். பின் அந்த கூட்டத்தை பார்த்தார்.

நாங்கள் அந்த கிழவனாரின் பதிலுக்கு காத்திருக்க ஆரம்பித்தோம்.

அது என்பது....என்று ஆரம்பித்து சற்று நிறுத்தினார்.

நாங்கள் கலைந்து நிற்காமல் வட்டமாய் ஒன்றாய் அவரை நோக்கி முன்னேறினோம். பேச தயாரானார்.

அது என்பது பற்றி தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது. "அவர்கள்" வந்த பின் நம்மிடையே இருந்த கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் வந்த காலத்தில் எந்த தடயம் ஆதாரம் குறிப்பு லட்சினைகள் இல்லாமல் அழிக்கப்பட்ட ஒன்றுதான் அது.

நாமும் அவர்களின் சிலவற்றை அழித்திருக்கிறோம். அவர்களும் நம்முடைய சிலவற்றை அழித்து உள்ளனர். இதை வரலாறு என்பார்கள்.

ஆக, பெரும் பயணத்துக்கு பின் நாம் சந்திக்க போவது  ஆற்றல் மிகுந்த சங்கடங்கள் கொண்ட அழிவின் இன்னொரு வடிவத்தை மட்டுமே.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் அது என்பதன் இன்னொரு பெயர் பண்பாடு.

நாங்கள் கிழவனாரின் பேச்சை ஆமோதித்து கலைய ஆரம்பித்தோம்.

===============================

எழுதியவர் : ஸ்பரிசன் (19-Nov-19, 2:46 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 94

மேலே