யாரே யநுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம் – நல்வழி 22

நேரிசை வெண்பா

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே யநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம். 22 நல்வழி

பொருளுரை:

பணத்தினை வருந்தி யுழைத்துச் சேர்த்து உண்ணாமலும் அறஞ்செய்யாமலும் பூமியிலே புதைத்து வைத்து நன்மை யெல்லாவற்றையும் இழந்த மனிதர்களே! நான் கூறுவதைக் கேளுங்கள்; உடம்பினை விட்டு உயிர் நீங்கிய பின்பு பாவிகளே! அந்தப் பணத்தை இவ்விடத்து யாவர் அநுபவிப்பார்?

அறத்திற்கும் இன்பத்திற்கும் சாதனமாகிய பொருளை வீணிலே பூமியிற் புதைத்து வைப்பதைப் பார்க்கிலும் அறியாமையில்லை

விளக்கம்:

அடுத்தவருக்கு துன்பம் விளைவித்து, ஓடி ஓடி பணத்தை தேடும் கேடு கேட்ட மனிதர்களே கேளுங்கள்,

உங்கள் உயிர் பிரிந்து போகும் வேளையில் பணம் உங்களுடன் வராது, அதை யாரோ அனுபவிப்பார்கள்,

ஆதலால் உயிர் இருக்கும் போதே பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Nov-19, 8:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 73

மேலே