தனக்கணியாம் தான்செல் உலகத்து அறம் – நான்மணிக்கடிகை 9

இன்னிசை வெண்பா

நிலத்துக் கணியென்ப நெல்லுங் கரும்பும்
குளத்துக் கணியென்ப தாமரை பெண்மை
நலத்துக் கணியென்ப நாணந் தனக்கணியாம்
தான்செல் உலகத் தறம். 9

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

வயலுக்கு நெற்பயிரும் கரும்பின் பயிரும் அழகென்று சொல்லுவர்;

குளங்களுக்கு செந்தாமரைக் காடுகள் அழகு என்று சொல்லுவர்;

பெண் தன்மைக்குரிய கற்பாகிய நன்மைக்கு நாணுமியல்பு அழகென்று சொல்லுவர்;

நல்லோன் ஒருவனுக்கு தான் செல்லும் மறுமை யுலகத்துக்குத் துணையாகச் செய்யப்படும் அறங்களே அழகாகும்.

கருத்து:

நெல்லுங் கரும்புங் கழனிக்கு அழகு; தாமரை குளத்துக்கு அழகு; நாணம் பெண்மைக்கு அழகு; அறங்கள் ஆண்மைக்கு அழகாகும்.

விளக்கம்:

நெல்லையுங் கரும்பையும் நோக்கி நிலம் மருத நிலமாகிய வயல் எனப்பட்டது.
பெண்மை - பெண்டிரின் தன்மை; பெண்மை நலம் - கற்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Nov-19, 10:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

சிறந்த கட்டுரைகள்

மேலே