சான்றோரை நயத்திற் பிணித்து விடல் – நான்மணிக்கடிகை 10

இன்னிசை வெண்பா

கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர
மந்திரத் தாற்பிணிப்பர் மாநாகம் கொந்தி
இரும்பிற் பிணிப்பர் கயத்தைச்சான் றோரை
நயத்திற் பிணித்து விடல். 10

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

யானையை கட்டுத் தறியில் கட்டி வயப்படுத்துவர் (பாகர்); கொடிய நல்ல பாம்பை அதன் சீற்றந் தவிரும்படி மந்திரத்தினால் வயப்படுத்துவர் (மாந்திரிகர்); கீழ்மகனை உடம்பை ஒறுத்து விலங்கினால் வயப்படுத்துவர் (அரசர்); அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்த பெரியோரை இன்சொல் முதலியவற்றால் வயப்படுத்திவிடுதல் சிறப்பாகும். (அறிவுடையோர்).

கருத்து:

யானையைத் தறியாலும், பாம்பை மந்திர மொழியாலும், கீழ்மக்களை விலங்காலும் மக்கள் வயப்படுத்துவர்; ஆனால், சான்றோரை இன்சொற்களால் வயப்படுத்த வேண்டும்.

விளக்கம்:

மா வென்னும் அடைமொழி விடத்தன்மையையும் கொடுந்தன்மையையும் உணர்த்திற்று.

‘கொந்தி' யென்றது, இங்குத் துன்புறுத்துதலை யுணர்த்தும்;

கயம் - கயவர்; கீழ்மக்கள்.

‘நய' மென்றது, நினைவினிமை, சொல்லினிமை, செயலினிமையாகிய எல்லா இனிமைகளையு மென்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Nov-19, 10:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 62

சிறந்த கட்டுரைகள்

மேலே