ஊடி முகத்தான் நோய்செய்வர் மகளிர் – நான்மணிக்கடிகை 12

இன்னிசை வெண்பா

பல்லினான் நோய்செய்யும் பாம்பெலாங் - கொல்லேறு1
கோட்டால் நோய்செய்யுங் குறித்தாரை ஊடி
முகத்தான் நோய்செய்வர் மகளிர் முனிவர்
தவத்தால் தருகுவர்2 நோய். 12

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

எல்லாப் பாம்புகளும் பிறர்க்குப் பல்லினால் துன்பந் தரும்;

கொலை பயிலுங் காளை மாடு தன்னால் குறித்துக் கொள்ளப்பட்டவர்க்குக் கொம்புகளால் துன்பந்தரும்;

பெண்மக்கள் பிணங்கி தம் முகக்குறிப்பினால் துன்பந் தருவர்;

தவமுடையார் தமது தவ வலிமையால் துன்பந் தருவர்.

கருத்து:

பாம்பு பல்லாலும், ஏறு கொம்பாலும், மகளிர் முகத்தாலும் பிறர்க்குத் துன்பஞ் செய்வர்; முனிவர் தவத்தாற் றுன்பந் தருவர்.

விளக்கவுரை:

நோய் செயல் - ஒரு சொற்றன்மைத்து: நோய் - துன்பம்; இனி, ‘கொல்களிறு கோட்டால் நோய் செய்யு' மென்னும் பாடம்.

‘தருக்குவர்' பாடமாயின் ‘மிகுவிப்பர்' என்பது பொருள்.

முனிவர் எல்லா உயிர்களையும் தம்மோடொக்க நோக்குபவராதலால் ‘தருகுவர்' என்றார்.

‘பையவே சென்று பாண்டியற்காகவே' எனும் ஞானசம்பந்தப் பெருமான் திருமொழியை நோக்குக.
(பாடம்)1. கொல்களிறு. 2. தவத்தில் தருக்குவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Nov-19, 4:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே