என்சொலினும் கைத்துடையான் காற்கீழ் ஒதுக்குங் கடன்ஞாலம் - நீதிநெறி விளக்கம் 11

நேரிசை வெண்பா

இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினுமொன்(று) இல்லானேல்
வன்சொல்லின் அல்லது வாய்திறவா - என்சொலினும்
கைத்துடையான் காற்கீழ் ஒதுக்குங் கடன்ஞாலம்
பித்துடைய வல்ல பிற. 11

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

இனிய சொற்களையுடையவனும், அடங்கிய ஒழுக்கமுடையவனும் ஆனாலும் அவன் சிறிதும் பொருள் இல்லாத வறியவனானால் கடலாற் சூழப்பட்ட உலகம் கடுஞ்சொற் கொண்டு பேசுதலல்லாது இன்சொற்கொண்டு வாய் திறந்து பேசாவாம்;

யாதுதான் சொன்னாலும் பொருட் செல்வமுடையவன் காலின் கீழே அடங்கும். ஆதலால் இவ்வுலக நிலைகள் பேதுறவே உடையன, நல்லறிவு உடையன அல்ல.

விளக்கம்:

பிறர் மகிழும்படி தீங்கு பயவாத வகையிற் பேசும் பேச்சு இன்சொல்,

தாழ்நடை – அடக்கிய ஒழுக்கம்.

ஒன்று - சிறிது என்னும் பொருளில் வந்தது:

வன்சொல்லினல்லது வாய்திறவா என்றது, உலகம் வன்சொல் சொல்லுதற்கு வாய் திறக்குமேயன்றி வேறு இன்சொல் சொல்வதற்கு வாய்திறவா.

கைத்து –கையிலிருக்கும் பொருள்;. ஞாலம் – அதில் உள்ள மக்களுயிர்களை உணர்த்தியது,

பித்து - நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் பிரித்துணராமை.

கருத்து:

செல்வர், நற்குண நற்செய்கைகள் இல்லாதவராயினும் உலகம் அவர்க்கு அடங்கி நடக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Nov-19, 5:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே