முற்பகல் நோலாதார் நோற்றாரைப் பின்செல்லல் - நீதிநெறி விளக்கம் 12

இன்னிசை வெண்பா

இவறன்மை கண்டும் உடையாரை யாரும்
குறையிரந்துங் குற்றேவல் செய்ப - பெரிதுந்தாம்
முற்பகல் நோலாதார் நோற்றாரைப் பின்செல்லல்
கற்பன்றே கல்லாமை யன்று. 12

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

ஈயாத்தன்மையைத் தெரிந்து கொண்டிருந்தும் செல்வமுடையவர்களை எல்லாரும் பொருள் வேண்டி அதன் பொருட்டுக் கைவேலைகளும் செய்வார்கள்,

முன்பிறப்பில் தாங்கள் மிகவும் தவம் செய்யாதவர்கள், தவம் செய்தவர்களைப் பின்சென்று வேண்டுதலன்றோ கல்வியறிவாகும்; அஃது அறியாமையன்று.

விளக்கம்:

தவமுடையாரை வேண்டுதல் கல்விக்கு அழகு என்றமையாற் பொருளுடையாரை வேண்டுதல் அழகன்று என்பது பெறப்படும்;

இவறன்மை - கேட்டபொழுது பொருள் கொடாமை,

இஃது `இவறலும் மாண்பிறந்த மானமும்’ என்ற விடத்துப் பரிமேலழகர் இவறலும் என்பதற்கு “வேண்டிய சமயத்தில் பொருள் கொடாமையும்” என்று உரைகூறுதலின் வைத்து அறியப்படும்.

குறையிரத்தல்: நின்று வேண்டுதல் என்னும் பொருள் தந்து நின்றது.

கற்பன்றே என்பதனோடு அமையாமற் கல்லாமையன்று என்று பின்னுங் கூறியது தெளிவின் பொருட்டு.

கற்பன்றே என்றது, ஈதன்றோ கற்பு என்றபடி.

முற்பகலில் தவம் மிகுதியுஞ் செய்து செல்வராயுள்ளாரை, அவ்வாறு தவம் செய்து செல்வம் பெறாத இலம்பாட்டார் பின் செல்வதன்றோ கல்வி யறிவின் பயன் அஃது அறியாமையன்று’ என்று உரைகூறுவாருமுளர்:

பொருளுடையாருள் இவறன்மை இல்லாதாரே தவமுடையராதலின், அது பொருளன்றென்பது கண்டு கொள்க,

நோற்றாரைப் பின் செல்லல் `கற்பன்றே கல்லாமையன்று’ என்றமையின், இவறன்மை கண்டும் உடையாரை யாருங் குறையிரந்துங் குற்றேவல் செய்தல் கல்லாமையன்றே கற்பன்று என்பதும் பெறப் படுமாறறிந்து கொள்க,

கருத்து:

பொருளுடையாரினும் தவமுடையார் உலகத்தவராற் பின்பற்றத் தக்கவராவர்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Nov-19, 5:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே