பண்பாடு காணாது இருத்தல் கடை - பண்பு, தருமதீபிகை 540

நேரிசை வெண்பா

உண்பாடு நோக்கி உலாவி உழைத்துமே
கண்பாடு கண்டு கழிகின்றார் - பண்பாடு
காணா(து) இருத்தல் கடையென்(று) உணராமல்
வீணே விளிகின்றார் வெந்து. 540

- பண்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உணவையே கருதி உழைத்து உண்டு உறங்கி மனிதர் உலாவிக் களிக்கின்றார்; உண்மையான குண நலங்களைக் கண்டு தெளியாமல் வீணேயிழிந்து ஒழிந்து போகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

குண நீர்மைகள் உயிரின் உயர் மணங்களாய் ஒளி மிகுந்துள்ளன. அவற்றை மருவிய அளவு மக்கள் மகிமையடைந்து வருகின்றனர். அவை இல்லையானால் சுவையில்லாத பண்டம் போல் மனிதன் நவையுழந்து இழிகின்றான்.

உருவத் தோற்றத்தில் மனிதனாயினும் உள்ளத்தில் நல்ல தன்மைகள் இல்லையெனின் அவனுடைய பிறப்பும் இருப்பும் எள்ளலடைந்து இழிவுறுகின்றன. உயர்ந்த இயல்புகள் குன்றிய அளவு இழிந்த மயல்கள் மனிதனைச் சூழ்ந்து கொள்ளுகின்றன.

உழைப்பது, உண்பது, உறங்குவது, விழிப்பது, களிப்பது என இந்த நிலையிலேயே வாழ்ந்து வந்தால் அந்த மனித வாழ்வு மிருக வாழ்வாகவே மருவி இருக்கும். உயர்ந்த சிந்தனைகளை இழந்த பொழுது இழிந்த விலங்குகளாகவே மாந்தர் அலைந்து திரிகின்றனர்.

நேரிசை வெண்பா

உண்டு கழிப்பார் ஒருபலனும் கண்டிலார்
மண்டு களிப்பில் மயங்குவார் - கொண்ட
இருகால் விலங்காய் இழிந்து திரிவார்
ஒருகாலும் உண்டோ உயர்வு. - கவிராஜ பண்டிதர் -

இவ்வாறு பரிதாப நிலையில் வாழ்ந்து வரும் அளவும் மக்கள் மாக்களாய்ப் பாழ்பட்டுள்ளனர். நீர்மைகள் குன்றவே, சீர்மைகள் குன்றின. தனக்கு நேர்கிற இழிவையும் அழிவையும் தெளிவாக உணர்ந்து கொள்ளாமையால் மனிதன் அவலமாய் அழிந்து வீழ்கிறான். வீழ்ச்சி தெரியாமல் உழல்வது வியப்பாயுள்ளது.

இனிய எண்ணங்கள் மனிதனை உயர்த்துகின்றன, அந்தச் சித்த விருத்தி பழுதாய்ச் சீரழிந்து போனால் மனிதன் பாழாய்ப் பேரழிந்து போகிறான். உள்ளத்தை இனிமையாக உரிமை செய்து கொண்டவன் பேரின்ப வெள்ளத்தில் வள்ளத்தை ஓட்டி உல்லாசமாய் உலாவி வருகிறான்.

உள்ளப் பண்பு உயர்ந்த மகிமைகளைக் காட்டி இன்பங்களை ஊட்டி வருகிறது. அந்த ஒன்றைப் பெற்றவன் எல்லா நலங்களையும் ஒருங்கே பெற்றவனாகிறான்.

ஒளி மிகுந்த உயர்ந்த மணியினும் அளி மிகுந்த குணம் அரிய மேன்மையுடையது. அதனை உரிமையாக வுடையவர் யாண்டும் அருமையாகப் போற்றப்படுகிறார்.

உயர்ந்தோர், மேலோர், பெரியோர், சான்றோர் என ஆன்ற மதிப்போடு உலகம் யாரைப் போற்றி வருகிறது? சிறந்த அரசரும் உவந்து பணிந்து எவரை விழைந்து தொழுது வருகிறார்? இதனை நினைந்து பார்த்தால் குண சீலங்களின் மகிமையை உணர்ந்து கொள்ளலாம்.

குணநலம் சான்றோர் நலனே; பிறநலம்
எந்நலத்(து) உள்ளதுாஉம் அன்று. 982 சான்றாண்மை

சான்றோருடைய நிலைமையை இது உணர்த்தியுள்ளது. செல்வம், கல்வி, அதிகாரம் முதலிய நலங்களை அவர் ஒரு பொருளாக மதியார், குண நலங்களையே உயிர் நிலையாக எவ்வழியும் பேணி ஒழுகுவர் என்றதனால் அவரது திவ்விய மகிமை தெளிவாகி நின்றது. மலருக்கு மணம் போல் மனிதனுக்குக் குணம் மாண்பு தருகிறது.

’பண்பாடு காணாதிருத்தல் கடை’ தன்னை உயர்ந்த மகானாக்கிச் சிறந்த இன்ப நலங்களை யூட்டியருளுகிற பண்புடைமையை மனிதன் உரிமையாகப் பேணிக் கொள்ளாமலிருப்பது பெரிய பரிதாபமான பேரிழவாம். பண்பாடு காணாதவன் புண்பாடு காண்கின்றான்.

திருவுடையான், அறிவுடையான், திறலுடையான் என்பதை விடப் பண்புடையான் என்பது எவ்வளவோ மகிமையுடையது. பண்பின் அளவிற்கே மனிதன் உயர்ந்து மாட்சிமை பெறுகிறான்.

பொறுமை, சாந்தம், அமைதி என்பன பெருமையின் உரிமைகளாய்ப் பெருகி நிற்கின்றன. அருமைப் பண்புகளான இவை மனிதனை அதிசய நிலையில் உயர்த்தி யருளுகின்றன.

வீட்டை விசாலப்படுத்திக் கோட்டை கட்டி வாழ்வதினும் உள்ளத்தை விசாலப்படுத்திப் பெருந்தன்மையுடன் ஒழுகி வருபவன் விழுமிய பாக்கியவானாய் எழுமையும் இன்புறுகின்றான்.

உள்ளப் பண்பு குறையின் மனிதன் எள்ளப்படுகிறான். பண்பு படியாமல் பழகி வருதலால் துன்பமும் பழியும் தொடர்ந்து வருகின்றன. இனிய இயல்புகள் குன்றவே கொடிய மயல்களும் செயல்களும் குடிபுகுந்து, எள்ளல்களும் இழிவுகளும் எவ்வழியும் விளைந்து வெவ்விய துயரங்கள் விரிந்து வருகின்றன.

அரிய மனிதராய்ப் பிறந்தும் கொடிய மிருகங்களாகவே பலர் வாழ்ந்து வருகின்றனர். பொல்லாத அப் பழி வாழ்வைக் காணுந்தோறும் நல்லோர்களுடைய விழிகள் கூசுகின்றன.

நேரிசை வெண்பா

மானிடராய் வந்து மருவி இருந்தாலும்
கானிடையே வாழும் கடுவிலங்காய் - ஈனம்
படிந்து பலபேர் பழிவாழ்வு கொண்டு
மடிந்து கழிகின்றார் மாய்ந்து. - கவிராஜ பண்டிதர்

என்றபடியே மனித சாதி தோய்ந்து வந்தால் இனிய கதி நலங்களை எவ்வாறு காண்பது? அரிய பிறவி அடைந்தும் கொடிய இழிவில் உழலுவது நெடிய துயரமாய் நேர்ந்து நின்றது.

'மனிதர் சிலரைக் காணும் பொழுது மாடுகள் நல்லன என்று தோன்றுகிறது்’ என ஒரு பெரியவர் பரிதபித்திருக்கிறார், அவரது பச்சாத்தாபம் சனங்களுடைய இழி நிலைகளை உச்ச நிலையில் உலகறியச் செய்துள்ளது. உயர்ந்த பழக்கங்களையே பழகி வந்துள்ளவர்களுக்கு இழிந்த மக்களுடைய செயல்கள் ஈனங்களாய்த் தோன்றலால் பரிதாபத்தோடு அவர் இகழ்ந்து சொல்ல நேர்கின்றார். சொல்லில் அவர் உள்ள நிலை தெரிகிறது.

The more I see of men, the more I love dogs.

’மனிதர்களை எவ்வளவுக்கு எவ்வளவு காண்கின்றேனோ அவ்வளவுக்கு அவ்வளவு நாய்களை நான் விரும்புகிறேன்' என ஓர் ஆங்கில அறிஞர் இங்ஙனம் கூறியிருக்கிறார்.

நன்றி யறிவுடைய நாயினும் கீழாக
ஒன்றி உழலல் ஒழி.

நாட்டுள் இருந்து நவைபுரியின் அன்னவரே
காட்டு மிருகங்கள் காண்.

இழிந்த இயல்புகள் மக்களை இவ்வாறு இகழ்ந்து வெறுக்கும்படி செய்து விடுகின்றன. ஈனப் பழக்கங்கள் ஈனமாக்கி விடுமாதலால் மான மனிதர் அவற்றை ஒழித்து ஒழுக வேண்டும்.

நல்ல பண்புகளை வளர்த்து வருபவர் எல்லா மகிமைகளையும் எளிதே அடைந்து கொள்ளுகின்றனர். எவ்வழியும் இனிய நீர்மைகளைப் பேணி அரிய மேன்மைகளை அடைக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Nov-19, 3:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே