வெல்வது வேண்டின் வெகுளி விடல் - நான்மணிக்கடிகை 15

இன்னிசை வெண்பா

இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக தன்னொடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது
வேண்டின் வெகுளி விடல். 15

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

இழிவை ஒருவன் விரும்பினால் இரத்தலை மேற்கொள்க;

இவ்வுலகத்தில் எஞ்ஞான்றும் நிலைபெறுதலை விரும்பினால் புகழ் நிறுத்துக;

தன்னுடன் துணையாகச் செல்வதொன்றை விரும்பினால் அறங்களைச் செய்க;

பிறரை வெல்லல் வேண்டினால் சினத்தை விடுக.

கருத்து:

இழிவை விரும்பினால் இரக்க; அழியாமை வேண்டினால் புகழ் புரிக; உறுதுணையை வேண்டினால் அறஞ்செய்க; வெல்லல் விரும்பினால் வெகுளியை விடுக.

விளக்கவுரை:

இன்னாமை - துன்பம். இங்கு இழிவு என்னுந் துன்பத்தை யுணர்த்திற்று.

புகழ் செய்தாரே உலகில் இறவாது நிற்பர் என்பதனை, ‘மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்,

தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்தனர்' என்னும் புறநானூற்றா லறிக;

நடுக - நிறுத்துக

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-19, 2:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 599

சிறந்த கட்டுரைகள்

மேலே