கற்றான் கடந்து விடும் அவைக்குட்டம் – நான்மணிக்கடிகை 16

இன்னிசை வெண்பா

கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்குந் தோமில்
தவக்குட்டந் தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம்
கற்றான் கடந்து விடும். 16

– நான்மணிக்கடிகை

பொருளுரை:

மரக்கலமுடையார் கடலின் ஆழமான நீரைப் பிளந்து செல்வர்;

விரைந்து பாய்ந்து செல்லும் படைக் குதிரையை யுடையவன் பகைவரது படையென்னும் ஆழ் கடலின் கரையை பொருது உடைத்து விடுவான்;

தன் மனத்தைத் தன்வயப்படுத்தினவன் குற்றமில்லாத தவமென்னுங் கடலை நீந்திக் கரையேறுவான்;

தெளியக் கற்றவன் கற்றறிவுடையோர் நிரம்பிய அவைக்கடலைத் தாண்டி விடுவான்.

கருத்து:

மாலுமிகள் நீர்க்கடலையும், மறவர் படைக்கடலையும், தற்காப்புடையான் தவக்கடலையும், கற்றான் அவைக்கடலையும் கடத்தல் எளிது.

விளக்கவுரை:

தன்னுடையான் - தன்னைத் தன் வயத்திலுடையவன். அவைக்குட்டங் கடத்தலாவது,

ஐயந்திரிபுகளில்லாக் கல்வியறிவுடன் நின்று செவிக்கினிமையும் பயனும் உண்டாகுமாறு சுருங்கச் சொல்லி விளங்கவைத்துத் தெளிவு தேற்றி அவையினரை மகிழ்வித்தல் என்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-19, 2:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே