புல்லிப் பயின்றார்க்கே கல்வி போதுமால் ஓதி உயர்க - கல்வி, தருமதீபிகை 552

நேரிசை வெண்பா

செல்வம் வழிமுறையில் சேர்ந்துவரும்; கல்வியோ
புல்லிப் பயின்றார்க்கே போதுமால் - ஒல்லையினில்
ஓதி உயர்க; ஒழிந்தாயேல் நீஎன்றும்
பேதையாய் நிற்பாய் பிறழ்ந்து. 552

- கல்வி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

செல்வம் வமிச பரம்பரையாக வந்து சேரும்; கல்வி அவ்வாறு வராது; அதனை விழைந்து பயின்றவர்க்கே அது விளைந்து வரும்; ஆதலால் விரைந்து படித்து உயர்ந்து கொள்க: அயர்ந்து நின்றால் என்றும் மூடனாய் நீ இழிந்து உழலுவாய் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இது, இளமையில் கல் என்கின்றது. கல்வியும் செல்வமும் கண் என முன்னர் எண்ணியறிந்தோம்; இதில் அவற்றின் இயற்கை நிலைகளை அறிய வந்துள்ளோம். இரண்டும் ஒரு முகமாய் இணைத்து எண்ணப்படினும் பல விசித்திர வேறுபாடுகளுடையன. ஒன்று ஈண்டு உணர வந்தது. உயிர் வழியே தொடர்ந்து வருகிற கல்விக்கும், உடல் வழியே ஒட்டி நிற்கிற செல்வத்துக்கும் உரிமை காண நேர்ந்தது அருமைக் காட்சியாய்ச் சேர்ந்தது.

வழிமுறை - பின் வருகிற சந்ததி வரிசை. அவன் மகன் அவனாய் வழியே தொடர்ந்து முறையாய் வருதலால் வமிசாவளி வழிமுறை என வந்தது.

தலைமுறை என்பது முன் சென்றதைக் குறித்து வரும். கொடிவழி, பரம்பரை, மரபு நிலை என வருவன எல்லாம் காரணக் குறிகளாய் இந்த உறவுரிமைகளை உணர்த்தி நிற்கின்றன.

செல்வம் வழிமுறையில் சேர்ந்து வரும். என்றது அதன் வரவு நிலையை ஓர்ந்து கொள்ள வந்தது.

தான் யாதும் முயன்று தேடாமல் சோம்பேறியாய் இருந்தாலும் தந்தை ஈட்டிய பொருள் மைந்தனுக்கு வந்து சேர்கிறது. கல்வி அவ்வாறு வருவது இல்லை; தான் சொந்தமாக வருந்தித் தேடிய பொழுதுதான் ஒருவன் அதனை அடைந்து கொள்ள முடியும். தேடினார்க்கு இன்பம் நல்கித் திருவருள் புரியும் கல்வி.

செல்வம் பிதிரார்ச்சிதமாய்ப் பெறலாம் ஆதலால் அது இழிந்த பேறாய் இசைந்து நின்றது. அயல்தர வருதலால் அது மயல் தந்து மரியாதையைப் பறித்துள்ளது.

கல்வி சுயார்ச்சிதமாய் வருதலால் அது புனிதமான இனிய பேறாய் அரிய நீர்மைகளை விளக்கிப் பெரிய மகிமைகளோடு பெருகி மிளிர்கிறது. ஞான சம்பத்து மான சம்பத்தாய் மருவியுள்ளமையால் வானமும் வையமும் அதனை வாழ்த்தி வருகின்றன.

புல்லிப் பயின்றார்க்கே போதும்; கல்வி ஈட்டத்தின் காட்சியை இது காட்டி நின்றது. கருத்தை ஊன்றிப் பயின்ற அளவுதான் அது விருத்தியாய் விளைந்து வருகிறது. புல்லி - பொருந்தி. போதும் - வரும். மறு முகம் பாராமல் ஒருமுகமாய் ஆழ்ந்து அமர்ந்து பயின்றவரே தேர்ந்த கல்விமான்களாய்ச் சிறந்து திகழ்கின்றனர்.

உள்ளம் தோய்ந்த கல்வி பள்ளம் பாய்ந்த நீர்போல் வெள்ளமாய் விரைந்து நிறைகிறது. அங்ஙனம் தோயாதது எள்ளலாய் இழிந்து மறைகிறது.

இளமையில் ஒருவன் கல்லாது கழித்தானானால் பின்பு அவன் பொல்லாத மூடனாய் இழிந்துபட நேர்கின்றான். அந்த இழிவு நேராமல் விரைந்து பயின்று உயர்ந்து கொள்ள வேண்டும்.

கல்விப் பயிற்சிக்குரிய கால எல்லையைக் கருதிக் காண ஒல்லை என்றது. உயிர்க்கு உறுதியான அரிய கல்வியைச் சிறிய பருவத்திலேயே பழகி உரிமை செய்து கொள்ளவில்லையாயின் அந்த மனித வாழ்வு பாழாயிழிந்து பழியடைகின்றது.

நீ என்றது மனிதனது தலைமையான நிலைமையை நினைந்து தெளிய வந்தது. மேதையாய் நின்று எவ்வளவோ மேன்மை அடைய வேண்டிய நீ பேதையாய் இழிந்து பிழைபடலாமா? இதனை விழி திறந்து நோக்கிக் கல்வியை விழைந்து கொள்ளுக.

பிதா தேடி வைத்த செல்வம் பிள்ளைக்கு வருதல் போல் கல்வி வராது, தனது சொந்த முயற்சியினாலேயே அதனை எந்த மனிதனும் தேடிக் கொள்ள வேண்டும். இந்த உண்மையை உள்ளி யுணர்ந்து ஒல்லையில் உயர்க.

Learning by study must be won,
It was never entitled from son to son.

'கல்வியை வமிச பரம்பரையாக அடைய முடியாது; படிப்பினால் மாத்திரம் அதனைப் பெறமுடியும்' என்னும் இது இங்கே அறிய வுரியது.

தனது முயற்சியான பயிற்சியால் அடையவுரிய இனிய கல்வியை மனிதன் அடையானாயின் அவன் பெரிய மடையனாகிறான்; வறியனாயிருப்பதை விட மடையனாயிருப்பது கொடிய இழிவாம்; அந்த ஈன இழிவில் மான மனிதன் இழிந்து படாமல். ஞானமுடையனாய் உயர்ந்து நலம் பல பெறவேண்டும்.

கல்வியைக் கருத்தூன்றி இளமையிலேயே நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்; அங்ஙனம் கல்லாது விடின் எல்லா இழிவுகளும் குழ்ந்து கொள்ளும். இழிபழிகள் நேராமல் விழுமிய கல்வியை நீ விரைந்து பெற்று உயர்ந்து கொள் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-19, 7:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே