மறமொறுக்க வாய்த்த வழக்கு - இன்னிலை 1

இன்னிலை என்ற நூலை இயற்றியவர் பொய்கையார் எனப்படுகிறது. இந்நூல் அறப்பால், பொருட்பால், இன்பப்பால் வீட்டுப்பால் என நான்கு பகுதிகளாகவும், அவற்றில் வீட்டுப்பால் 'இல்லியல், துறவியல் என இரண்டு இயல்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலியைச் சார்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர் ‘இன்னிலை’ என்ற பேரில் ஒரு நூலின் ஏட்டை வ.உ.சியிடம் கொடுத்து இது பதினெண்கீழ்க் கணக்கு நூற்களில் ஒன்று எனக் கூறி இருக்கிறார். வ.உ.சி.யிடம் இதற்கு கணிசமாகப் பணமும் பெற்றிருக்கிறார். சொர்ணம் பிள்ளை இது போலவேறு சிலரையும் ஏமாற்றியிருக்கிறார்.

பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் இன்னிலையும் ஒன்று என நம்பி அதைப் பதிப்பித்தார் வ.உ.சி. இப்பதிப்பு போலியானது; தவறானது என மயிலை சீனி வெங்கடசாமி, மு. அருணாசலம் போன்றோர் எழுதினர். 1931-ல் அனந்தராம அய்யர் பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் ஒன்று ‘கைந்நிலை’ என பதிப்பித்த பின்னர் வ.உ.சி. மனம் நொந்திருக்கிறார்.

அறப்பால் 10 வெண்பா, பொருட்பால் 9 வெண்பா, இன்பப்பால் 12 வெண்பா, வீட்டுப்பால் (இல்லியல் 8 வெண்பா, துறவியல் 6 வெண்பா) 14 வெண்பா எனக் கொண்டுள்ளன" என்பது வ. உ. சி அவர்கள் முன்னுரை.

அறப்பால்

நேரிசை வெண்பா

அன்றமரிற் சொற்ற அறவுரைவீழ் தீக்கழுது
மன்றுயர்ந்து போந்த வகைதேர்மின் - பொன்றா
அறமறிந்தோன் கண்ட அறம்பொருள்கேட் டல்லன்
மறமொறுக்க வாய்த்த வழக்கு. 1

- இன்னிலை

பொருளுரை:

முற்காலத்தில் பாரதப்போரில் (கண்ணன் அருச்சுனற்குக் கூறிய கீதையாகிய) அறவுரையை விரும்பிக் கேட்ட கொடிய பேயானது, அறிவால் உயர்வுற்று ஆன்றோர் அவையைப் போய்ச் சேர்ந்த வகையை ஆராய்வீர்.

அழியாத தருமங்களை உணர்ந்தோன் அறிந்து கூறிய அறநூலினையும் பொருள் நூலினையும் (நீங்கள்) கேட்டு துன்பத்தை விளைக்கும் பாவங்களை நீக்குங்கள். பொருத்தமான தகுந்த நன்னெறி இதுவேயாகும்.

கருத்து:

கொடிய பேயும் அறவுரை கேட்டுயர்ந்தது; ஆதலால் மக்களாகிய நீங்களும் ஆன்றோரறவுரை கேட்டுப் பாவம் நீக்கி வாழ்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-19, 1:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே