கண்காணும் காட்சி கருதி விநயமுறின் மாட்சி மருவும் - விநயம், தருமதீபிகை 543

நேரிசை வெண்பா

எண்சாண் உடம்பாய் இனிய மனிதனென
மண்காண வந்து மகிழ்கின்றாய்; - கண்காணும்
காட்சி பலவும் கருதி விநயமுறின்
மாட்சி மருவும் மதி. 543

- விநயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அரிய மனித உருவை மருவி இவ்வுலகில் வந்து உலாவி மகிழ்கின்றாய்; உன் கண் எதிரே காணுகின்ற பொருள்களைக் கருதியுணர்ந்து உறுதி நலங்களை ஓர்ந்து விநயமாய் ஒழுகிவரின் மிகுதியான மகிமைகள் பெருகி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தன் கைக்கு எட்டுச் சாண் அளவே ஒவ்வொரு மனிதனுடைய உடல் உயரம் அமைந்திருக்கிறது. நான்கு முழ மனிதன் என்பது உலக வழக்கு. இந்த உடம்பில் இணைந்துள்ள அற்புத நுட்பங்கள் அளவிடலரியன. அண்டத்தைப் போலவே பிண்டமும் அறிய அரிய அதிசய நிலையில் மருவியுள்ளது.

தோல், எலும்பு, தசை, நரம்பு, இரத்தம் முதலிய தாதுக்களால் அமைந்ததாயினும் எண்ணிறந்த நுண்ணிய அணுக்கள் உடம்பில் இடங் கொண்டுள்ளன.

உடலின் கூறுகளைப் பகுத்து அறிந்த மருத்துவர் எலும்புகளின் எண்ணிக்கை, குடலின் நீளம், தசைகளின் கனம், ஈரல், மூளைகளின் நிறை முதலியவற்றை ஓரளவு உரைத்திருப்பினும் உணர முடியாத நுண்மைகள் பல இருத்தலை வியந்து நிற்கின்றார்.

அரிய உயிர்க்கு உரிய இடமாயுள்ளமையால் உடல் ‘ஆன்ம ஆலயம்’ என மேன்மை மிகப் பெற்றது. சீவப் பறவை குடியிருப்பதாதலால் குடம்பை, குடில், வீடு என உடம்பை அழைத்து வருகின்றனர். சின்ன ஒரு கூறை வீடாகக் கவிகள் வருணித்துள்ளனர்.

கலித்துறை
(காய் விளம் விளம் விளம் விளம்)

காலிரண்டு நிறுத்திமே லிருகைபி ணைத்தொரு புறஎலும்
பாலிணக்கி முகட்டுமேல் வளையடர் நரம்பெனும் ஆக்கையால்
கோலியிட்ட பழுக்கழிக் கொருகுறை வுறாமல்வ ரிந்துமேல்
தோலிணக்கி யகற்றைவேய்ந் துயர்சுவர் புலால்கொடி யற்றியே. 1

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வந்து போக இரண்டு வாசல் வகுத்து மற்றெழு சாளரம்
தந்து சாக்கி ரமாதி ஈரிரு தளமெ டுத்ததன் மேல்மலர்க்
கொந்து லாவி யமாமு டிக்கன கும்பம் வைத்தவிர் கூந்தலா
முந்து நீள்கொ டிமாட நாலு முகக்கண் மாளிகை முற்றினான். 2 மெய்ஞ்ஞான விளக்கம்

சீவன் குடியிருப்பாக மேவியுள்ள குடிலை இதில் கூர்ந்து பார்க்கிறோம். முன் வாசல், பின் வாசல், சன்னல்கள் முதலிய வசதிகளையெல்லாம் உருவகத்தில் கண்டு உவந்து கொள்கிறோம்.

இன்னவாறு அமைந்த இந்தச் சின்ன இன்னல் வீட்டில் குடி புகுந்த சீவன் அந்தப் பெரிய பேரின்ப வீட்டை அடைந்து கொள்ள மறந்து போனமையால் மாறி மாறிப் பிறந்து திரிந்து அலைந்து வருகிறான். மாயப் பிறவியில் சிக்கிக் காயச் சிறையில் அகப்பட்டுக் கிடக்கிற அவல நிலையைக் கருதியுணர்ந்த போது மகான்கள் உருகி வருந்தி உய்தி நாட நேர்கின்றனர். அந்த ஞான நாட்டம் தோய்ந்தவுடன் இந்த ஊன வீட்டை வெறுத்து உயர்ந்த ஆனந்த வீட்டை விழைந்து நிற்கின்றனர்.

(உத்தரமேரூர் திருத்தலத்துக்கான இந்தப் பாடல் ஆறுமுகங்களையும் பன்னிரு தோள்களையும் போரில் வென்றதாகிய வடிவேலையும் நினைத்து தியானிப்பதைக் கோருகிறது.

அடிக்கு 28 எழுத்துகள்; ஒவ்வொரு நான்காம் எழுத்தும் (தோலெலும்பு என்பதில் நான்காம் எழுத்து; அடுத்த சீரில் நான்காம் எழுத்து, இப்படி.) மெல்லின ஒற்று.

(தானதந்த தானதந்த தானதந்த தானதந்த
தானதந்த தானதந்த தனதான)

தோலெலும்பு சீநரம்பு பீளைதுன்று கோழைபொங்கு
சோரிபிண்ட மாயுருண்டு வடிவான
தூலபங்க காயம்வம்பி லேசுமந்து நான்மெலிந்து
சோருமிந்த நோயகன்று துயராற
ஆலமுண்ட கோனகண்ட லோகமுண்ட மால்விரிஞ்ச
னாரணங்க ளாகமங்கள் புகழ்தாளும்
ஆனனங்கள் மூவிரண்டு மாறிரண்டு தோளுமங்கை
யாடல்வென்றி வேலுமென்று நினைவேனோ. - திருப்புகழ்

அருணகிரிநாதர் இவ்வாறு இறைவனைக் கருதி உருகியிருக்கிறார்.

காக மோடுகழு கலகை நாய்நரிகள்
சுற்று சோறிடு துருத்தியைக்
காலி ரண்டுநவ வாசல் பெற்றுவளர்
காமவேள் நடன சாலையை
போகஆசைமுறி யிட்ட பெட்டியைமும்
மலமி குந்தொழுகு கேணியை
மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை
முடங்க லார்கிடை சரக்கினை
மாக இந்த்ரதனு மின்னை யொத்திலக
வேதம் ஓதியகு லாலனார்
வனைய வெய்யதடி கார னானயமன்
வந்த டிக்குமொரு மட்கலத்
தேக மானபொயை மெய்யெ னக்கருதி
ஐய வையமிசை வாடவோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே. 1 - 13. சிற்சுகோதய விலாசம், தாயுமானவர்

தேகச்சிறையை நீங்கி இறைவனோடு ஏகநிலையை அடையத் தாயுமானவர் இப்படி இரங்கி ஏங்கியிருக்கிறார்.

ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்
சலமலப் பேழை; இருவினைப் பெட்டகம்;
வாதபித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்;
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை;
நாற்றப் பாண்டம்; நான் முழத்து ஒன்பது
பீற்றல் துண்டம்; பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்;
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்;
ஓயா நோய்க்கிடம்; ஓடும் மரக்கலம்;15
மாயா விகாரம்; மரணப் பஞ்சரம்;
சோற்றுத் துருத்தி; தூற்றும் பத்தம்;
காற்றில் பறக்கும் கானப் பட்டம்;
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை;
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை;20
ஈமக் கனலில் இடுசில விருந்து;
காமக் கனலில் கருகும் சருகு;
கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி,
பவக்கொழுந்(து) ஏறுங் கவைக் கொழு கொம்பு;
மணமாய் நடக்கும் வடிவின் முடிவில்25
பிணமாய்க் கிடக்கும் பிண்டம்; பிணமேல்
ஊரில் கிடக்க வொட்டா உபாதி;
கால் எதிர் குவித்தபூளை; காலைக்
கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்;30
அதிரும் மேகத்து உருவின் அருநிழல்;
நீரில் குமிழி; நீர்மேல் எழுத்து;
கண்துயில் கனவில் கண்ட காட்சி;
அதனினும் அமையும் பிரானே! அமையும்;
இமைய வல்லி வாழிஎன் றேத்த35
ஆனந்தத் தாண்டவம் காட்டி
ஆண்டுகொண் டருள்கைநின் அருளினுக்(கு) அழகே! – கோயில் திரு அகவல் – 2 - பட்டினத்தார்

உடம்பின் நிலையைப் பல வகையிலும் குறித்துக் காட்டிப் பிறவி நீங்கி உய்யப் பரமனை நோக்கிப் பட்டினத்தார் இவ்வாறு பரிந்திருக்கிறார்.

’மனிதன் என மண் காண வந்து மகிழ்கின்றாய்’ என்றது தனது உண்மை நிலையை உணர்ந்து தெளிய வந்தது. உருவம் பெயர்களை மருவியுள்ளவன் அவற்றை ஒருவி உயிரின் உரிமையைத் தெளிந்து கொள்ளின் உயர் கதியை அடைகிறான். மெய் நிலை தெரிவது மெய்யறிவாய் உய்வு தருகிறது.

ஒட்டியிருக்கும் கூட்டின் பட்டிமை தெரிந்து உயிர்க்குய்தி காண வேண்டும் என்பது கருதி ’எண் சாண் உடம்பு’ என்று சுட்டிச் சொன்னது. உண்மை தெரியின் உள்ளச் செருக்கு ஒழிந்து யாண்டும் பணிவாய் மனிதன் நன்மை நாட நேர்கிறான்,

நேரிசை வெண்பா

கற்றதுகைம் மண்ணளவு; கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும்பந் தயம்கூற வேண்டாம் புலவீர்!
எறும்பும்தன் கையால்எண் சாண். - ஒளவையார்

மனிதன் கருவம் கொள்ளாமல் விநயமாயடங்கி இனிது ஒழுக வேண்டும் என ஒளவையார் இவ்வாறு உணர்த்தியிருக்கிறார். உண்மையுணர நன்மையுறுகிறது.

நயம் என்பது தருமம், நீதி, ஊதியம் முதலிய நலங்களை உணர்த்தி வரும். அந்த நன்மைகள் யாவும் பெருகி வரும்படி இனிய தன்மையனாய்ப் பணிவோடு ஒழுகி வருவது ’விநயம்’ என வந்தது. விசேடமான நயங்களையுடையது விநயம் என்றும், விநயம் ஒரு தெய்வ சம்பத்து என்றும், அதனை மருவி மகிமை பெறுக என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-19, 3:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

சிறந்த கட்டுரைகள்

மேலே