கல்லாமல் பேசுகின்ற பொல்லா மிருகம் புரை - கல்வி, தருமதீபிகை 553

நேரிசை வெண்பா

வாய்பேசும் மாட்சியினால் மக்களுயர்ந் தார்,விலங்கோ
வாய்பேச மாட்டா வகையிழிந்த - ஆய்வகையில்
கல்லாமல் சொல்லளவில் காணுமகன் பேசுகின்ற
பொல்லா மிருகம் புரை. 553

- கல்வி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வாய் பேசுகின்ற மாட்சிமையினால் மக்கள் உயர்ந்தனர்; வாய் பேச மாட்டாமையால் மிருகங்கள் இழிந்தன; ஆகவே நூல்களைக் கல்லாமல் சொல்லளவில் நின்ற மனிதன் பேசுகிற ஒரு பொல்லா மிருகமே ஆவான். கல்லாமையால் நேரும் இழிவை இது உணர்த்துகின்றது.

மனிதர்கள் மேலானவர்களாய் உயர்ந்தும்; மிருகங்கள் கீழானவைகளாய் இழிந்தும் இருக்கின்றன. இந்த உயர்வு தாழ்வுகளுக்குக் காரணம் மனிதன் பேசுகிறான்; மிருகம் பேச முடியாது. பேச்சு எண்ணங்களை வெளிப்படுத்தி வருதலால் பேசுகிற இனம் அறிவு நலங்கள் நிறைந்து தேசு மிகுந்துள்ளது. பேச்சிழந்த இனம் மூச்சளவில் வாழ்ந்து வருதலால் காட்டு விலங்குகளாய் அவை விலகி நிற்கின்றன. மொழி வழக்கு உயிர் விளக்கமாயுள்ளமையால் அஃது இல்லாதது இழிந்து பட நேர்ந்தது.

பேசுந்தன்மை மனிதனை மாட்சிமைப் படுத்தி வருகிறது; அவை மொழிகளால் வெளிப்படுகின்றன; மொழிகள் எண்ணங்களிலிருந்து எழுகின்றன. எண்ணங்களின் உயர்வுக்கு ஏற்றபடி மனிதன் உயர்கிறான். நீர் மேல் எழுந்த பூக்கள் என நீர்மையில் மக்கள் எழுந்துள்ளனர். மனிதன் எதைச் சார்கிறானோ அதன் வண்ணமாகவே வளர்ந்து வருதலால் மேலோர்களுடைய எண்ணங்களும் செயல்களும் அவனுக்கு மேன்மைகளை அளித்தருளுகின்றன.

மேலான எண்ணங்கள் நூல்களாய் வெளி வந்துள்ளன. மக்களுடைய உள்ளங்களைப் புதுமையாக உயர்த்திப் புத்தொளி அளித்துத் தத்துவ நலங்களை அருளி வருதலால் நூல்கள் புத்தகங்கள் எனப் போந்தன.

’புத்தி நலமருளிப் புத்துயிர் நல்கிவரும்
புத்தகமே புத்தக மாம்’

என்றதனால் எத்தகைய நிலைகளையுடையது புத்தகம் என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம். மனிதனுடைய அகத்தைப் புனிதமாகப் புதுப்பித்து வருவதே புத்தகமாம்; அல்லாத மற்றவையெல்லாம் வெறும் செத்தைகளே.

உயர்ந்த கருத்துக்கள் நிறைந்த நூல்கள் உயிரினங்களை உயர்த்தி வருகின்றன. அறிவின் சாரங்கள் ஆன்ம போகங்களாய் அமைந்து நிற்கின்றன. சிறந்த அரசர்களுடைய சரித்திரங்களும், உயர்ந்த பெரியோர்களின் கருத்துக்களுமே காவியங்களாகவும், நூல்களாகவும் வெளி வந்திருத்தலால் அவை அரிய உணர்வு நலங்களையும் இனிய சுவைகளையும் ஊட்டி மக்களுடைய சீவிய நிலைகளை உயர்த்தி யருளுகின்றன.

மேலோர்களுடைய உணர்வின் சாரங்கள் நூல்களாய் நின்று உயிரினங்களுக்கு யாண்டும் உறுதி புரிந்து வருகின்றன.

A good book is the prestigious life-blood of a master-spirit embalmed and treasured up on purpose to a life beyond life. - Milton

“உயர்ந்த பெரியாரின் அரிய உயிரின் சாரம் பின் வருகிற சந்ததிகளுக்கெல்லாம் உரிமையாக நன்கு பாதுகாத்து வைத்திருப்பதையே நல்ல புத்தகம் என்று நாம் சொல்லி வருகிறோம்’ என ஆங்கிலக் கவிஞர் மில்ட்டன் இங்ஙனம் கூறி யிருக்கிறார்.

Books are a substantial world, both pure and good. - Wordsworth

'தூய்மை நன்மையுடைய உண்மை யுலகமே புத்தகங்கள்’ என வேர்ட்ஸ்வொர்த் இவ்வாறு குறித்துள்ளார்.

இவ்வாறு அறிவு நலங்கள் செறிந்த நூல்களைப் பயின்றுவரின் அவர் சிறந்த அறிவாளிகளாய் உயர்ந்து திகழ்கின்றார்; அங்ஙனம் பயிலாதவர் அறிவிலிகளாய் இழிந்து நிற்கின்றார்.

கல்லாமல் சொல்லளவில் காணுமகன் பேசுகின்ற
பொல்லா மிருகம் புகல்.

கல்வியில்லாதவனை இது இங்ஙனம் சுட்டிக் காட்டியுள்ளது. மிருகங்கள் இயற்கையறிவோடு இருக்கின்றன; உண்கின்றன, உறங்குகின்றன; பெட்டைகளோடு கூடுகின்றன; குட்டிகளைப் போடுகின்றன. இயற்கை அறிவோடு கூடியுள்ள மனிதனும் உண்டு உறங்கிப் பெண்டுகளைக் கலந்து பிள்ளைகளைப் பெற்று விடுகிறான்.

அந்தக் காட்டு மிருகத்திற்கும் இந்த நாட்டு மனிதனுக்கும் வேற்றுமை என்ன? எனின், அ.து பேசாது; இவன் பேசுவான். ’வாயடங்க நோயடங்கும்‘ என்றபடி பேசாமையால் யாதொரு பிழையும் நேராது. இவன் பேசுவதால் இடர்கள் பல நேர்கின்றன. குறும்பு பேசிக் கோள்மூட்டிப் பொய் புகன்று புறங்கூறிப் பயனில்லாத சொற்களை உரைத்து வருதலால் பிறர்க்கு அல்லல்கள் ஆகின்றன. ஆகவே பேசாத அந்த மிருகத்திலும் பேசுகின்ற இந்த மனிதன் மிகவும் கொடியவனாகின்றான்.

கல்லாத இவனை கடுமையும் கொடுமையும் மடமையும் தெரியப் பேசுகின்ற மிருகம், பொல்லாத மிருகம் என விதந்து சொல்ல நேர்ந்தது. பேச்சும் மூச்சும் உயிர் உண்டு என்று காட்டுமே யன்றி வேறு உயர்ந்த மாட்சிகளை யூட்டா.

பேசத் தெரிந்த அளவில் மனிதன் உயர்ந்தவன் ஆகான்; அந்த வாய்மொழியோடு தன் தாய் மொழியையும் ஒரளவு நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்; அங்ஙனம் கற்கவில்லையானால் முன்னோர்களுடைய பெரிய எண்ணங்களையும் அரிய அறிவு நலங்களையும் அவன் இழந்தவனாகிறான், அந்த இழப்பு இழிபழிகளை விளைத்து அவனை ஈனன் ஆக்கி விடுகிறது.

இலங்கு நூல் கல்லாதான் விலங்கு என்றார் வள்ளுவர்.
நீட்டு ஓலை வாசியான் காட்டு மரம் என்றார் ஒளவையார்.

கற்றறிவில்லா உடம்பு பாழ் என்றார் விளம்பிநாகனர்.

கல்லாதான் கோட்டி கொளல் இன்னா என்றார் கபிலர்.

கல்லாது நீண்ட ஒருவன் நாய் என்றார் சங்கப்புலவர்.

கல்லாமையின் பொல்லாமையை நினைந்து வருந்தி நெஞ்சம் இரங்கி உயர்ந்த உள்ளமுடைய நல்லோர்கள் இங்ஙனம் இகழ்ந்து சொல்லினர். சிறந்த மனிதப் பிறப்பை அடைந்தும் கல்லாமல் வீணே கழிந்து படுதல் மிகுந்த பரிதாபமாதலால் மேலோர்கள் இவ்வாறு பரிந்து கூற நேர்ந்தார்.

கற்றவர் அறிவு நலங்களை அடைந்து பெருமை பெறுகின்றார், உள்ளத்தில் உணர்வொளி பெருகவே உலகத்தில் அவர் ஒளிவீசி நிற்கின்றார்; கல்லாதவர் அறிவு குன்றிச் சிறுமை உறுகின்றார். அறிவொளி குறைந்தவர் அவலமாய் இழிந்து படுகின்றார்.

நேரிசை வெண்பா

கல்லாதான் கல்லாய்க் கழிந்திழிந்தான்; கற்றவனே
எல்லொளி வீசி எழில்மிகுந்து - நல்ல
மணியாய் உயர்ந்தான்; மதிகெட்டு நின்றார்
பிணியாய் இழிந்தார் பிறழ்ந்து. – கவிராஜ பண்டிதர்

கல்விமான் அரிய மணியாய் ஒளி மிகுந்து உயர்கிறான்; கல்லாதவன் கடிய கல்லாய் இழிந்து கிடக்கின்றான் என்றது நிலைமைகளை நினைந்து தெளிய வந்தது. உயிரொளி மங்கினமையால் உயர்வொழிய நேர்ந்தது.

நந்தன் என்னும் உழவன் ஒருநாள் ஒரு பெரியவரைக் கண்டு அவரை வணங்கினான். அவர் அறிவுரைகள் கூறி பின்பு குடும்ப நிலைகளை விசாரித்து மகனுடைய படிப்பைக் குறித்துக் கேட்டார். அவன் படிக்கவில்லை; இரண்டு எருமைகள் உள்ளன; அவற்றை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” என்று அவ்வுழவன் உரைத்தான். அவ்வுரையைக் கேட்டு அவர் வருந்தினார்;

மாட்டுமகனே! என்று மறுகி இரங்கினார்; மீண்டும் அவனை நோக்கி, ’அப்பா இரண்டு என்று இனி நீ யாரிடமும் சொல்லாதே; உனக்கு மூன்று எருமைகள் இருக்கின்றன; நீ பெரிய பாக்கியவான் போய் வா!' என்று வாய் மொழிந்தருளினார்.

படியாமையால் தன் மகனை எருமை மாடு என்று குறிப்பாக அப் பெரியவர் இகழ்ந்துரைத்தார் என அவன் உணர்ந்து கொண்டான். மறுநாளே பையனைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தான். சில காலத்துள் அவன் நன்கு படித்துக் தேர்ந்தான். சிறந்த அறிவாளியாய் யிருந்தமையால் அரசாங்கத்தில் ஓர் உயர்ந்த பதவியும் கிடைத்தது. தான் கற்று முன்னுக்கு வந்த நிலைமையைத் தன் தந்தை ஒருநாள் உரைத்ததைக் கேட்டு அம்மைந்தன் வியந்தான். தன்னை மனிதனாக்கிய அந்த மகானை நன்றியறிவோடு கண்டு தொழ வேண்டும் என்று கருதி விரைந்தான். அதிகார முறையில் ஒர் உயர்ந்த குதிரையிலேறி, அப் பெரியவரிடம் வந்தான்.

ஒரு இழிந்த எருமைக்குச் சிறந்த அரசபதவி தந்து அதனைக் குதிரையில் இவர்ந்து வரும்படி செய்த பெரிய தரும மூர்த்தி!” என உருகி யுரைத்து அடியில் விழுந்து தொழுது எழுந்து அவர் எதிரே வணங்கி நின்றான். அவர் திகைத்தார். அவன் உண்மையை உரைத்தான். அவர் உள்ளம் உவந்தார்.

நேரிசை வெண்பா

கல்லா திழிந்து கடைப்பட்(டு) எருமையாய்
நில்லா துயர்ந்த நிலையருளி - எல்லாரும்
கண்டுதொழ என்னையிந்தக் காட்சி புரிந்துவைத்த
மண்டுதவம் என்றான் மகிழ்ந்து.

இங்ஙனம் மொழிந்து மீண்டும் பணிந்து அவன் விடைபெற்றுப் போனான். கல்லாமல் இழிந்து பொல்லாத மிருகங்களாய்ப் போய்த் தொலையாதீர்கள், கற்று உயர்ந்து கொள்ளுங்கள் என உலகத்தவர்க்கு இந்தச் சரித்திரம் ஒர் உறுதி நலனை உணர்த்தியுள்ளது. உண்மையை எண்ணி உயர்வு பெறுங்கள் என்கிறார் கவிராச பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-19, 4:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

சிறந்த கட்டுரைகள்

மேலே