கூடார்கண் கூடி விடின் குலஞ்சிதைக்கும் – நான்மணிக்கடிகை 21

இன்னிசை வெண்பா

மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்
பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் - பெய்த
கலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்
கூடார்கண் கூடி விடின். 21

– நான்மணிக்கடிகை

பொருளுரை:

தக்காரோடு ஒற்றுமையில்லாமை ஒருவனது வலிமையை ஒழிக்கும்;

பொய்ம்மையான ஒழுக்கம் பொன்னிறத்தைப் போன்ற அழகிய உடம்பை வாடச்செய்யும்;
நிரப்பி வைக்கப்பட்ட பாண்டம் பாலின் இனிய சுவையை கெடுக்கும்;

கூடத் தகாதாரிடத்தில் நட்புக் கொண்டு கூடிவிட்டால் அச்செய்கை தன் குலத்தை யழிக்கும்.

கருத்து:

ஒற்றுமையின்மை வலிமையையும், பொய்ம்மை உடம்பையும், பால் பெய்த பொருந்தாப் பாண்டம் பாலின் இன்சுவையையும், தீ நட்பு குலத்தையுங் கெடுத்துவிடும்.

விளக்கவுரை:

ஒற்றுமை - ஒன்றாந்தன்மை; அஃதாவது வேற்றுமை காணாமல் அளவளாவுந் தன்மை.

மொய் - வலிமை; செல்வாக்கு முதலிய வலிமைகளும் இதில் அடங்கும்.

பொன் போலு மேனி - மிகுதியும் வெண்மை கலவாத தளிர் நிறமான மேனி.

‘பொய்த்தபின் தன் னெஞ்சே தன்னைச் சுடும்' என்பதனால், பொய்ம்மையினார் பின்பு துன்பந் தோன்றி உடம்பு நிறங்கெட்டு மெலிதலின். சிதைக்குமெனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-19, 10:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே