ஊர்நலம் உள்ளானால் உள்ளப் படும் – நான்மணிக்கடிகை 24

இன்னிசை வெண்பா

நகைநலம்1 நட்டார்கண் நந்துஞ் சிறந்த
அவைநலம் அன்பின் விளங்கும் விசைமாண்ட
தேர்நலம் பாகனாற் பாடெய்தும் ஊர்நலம்
உள்ளானால் உள்ளப் படும். 24

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

முகமலர்ச்சியின் நன்மை நட்புச் செய்தவர்களைக் காணும் பொழுது சிறக்கும்;
மேலான அவையின் நன்மை அன்பினாற் சிறக்கும்;
வேகம் மிகுந்த தேரின் நன்மை ஓட்டுபவனால் பெருமையடையும்,
குடிமக்களின் நன்மை அவ்வூரிலுள்ள அரசனால் மதிக்கப்படும்.

கருத்து:

முகமலர்ச்சியின் நன்மை நண்பர்கள்பாற் சிறந்து தோன்றும்;
அவைகளின் நன்மை அன்பினால் விளங்கும்;
விரைந்த செலவையுடைய தேரின் நன்மை பாகனால் பெருமைபெறும்:
ஊரின் நன்மை அரசனுடைய நற்செயல்களால் மதிக்கப்படும்.

விளக்கவுரை:

நகைநலமாவது, நேசரைக் கண்டவிடத்தே தம் முகத்திற் றோன்றும் புன்னகையுங் குளிர்ந்த பார்வையுங் கூடிய முகமலர்ச்சி. இஃது, உள்ளங் கலந்த உண்மை நண்பர் மாட்டன்றி மற்றவர்பால் வேறுபட்டுப் பொலிவு குன்றும்.

சிறந்த வென்பதை நலத்துக்குங் கூட்டுக. ‘அவைநல' மென்பது கற்றவர்கள் மற்றவர்கள் மேல் வைத்த அன்பினால் அரிய கருத்துக்களை எளியவாம்படி உளங்கொளக் கூறி யறிவித்தல்,

உள்ளான், குறிப்பால் அரசனுக்காயிற்று, உள்ளால் - நன்கு மதித்தல்; அறிவுடையோரால் என்க.

நசைநலம் என்னும் பாடத்துக்கு விருப்பத்தின் நன்மை நண்பர்பாற் சிறக்குமென்க. அவர்களே அதனை நிறைவேற்றுபவராதலால்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Nov-19, 6:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 74

மேலே