மருத்துவ வெண்பா – வாழைப்பூ – பாடல் 42

நேரிசை வெண்பா

வாழைப்பூ மூலரத்த மாபிரமி வெட்டைபித்தங்
கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் – ஆழியன
லென்னவெரி கைகால் எரிவுந் தொலைந்துடலின்
மன்னவளர்க் குந்தாது வை.

குணம்:

வாழைப்பூ ரத்த மூலம், பிரமேகம், வெள்ளை, பயித்தியம், கபாதிக்கம், உதிரக்கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல் இவைகளை நீக்கும். சுக்கில விருத்தியைத் தரும்.

உபயோகிக்கும் முறை:

வாழைப்பூவைப் பொரியலாக அல்லது துவரம் பருப்புடன் கூட்டமுதாகச் செய்து உண்பது வழக்கம். இதனால் உஷ்ண பேதி, இரத்த மூலம், சீத பேதி முதலியவைகள் குணமாகும். இந்தப்பூவைச் சாறாக்கி அதனுடன் தயிர் கூட்டிப் பெண்களுக்குக் கொடுக்க சூதக வயிற்று வலி, பெரும்பாடு முதலியவைகள் போகும். இதனைக் கிருதங்களிற் கூட்டுவதுமுண்டு.

கிருதம்:

நோய்க்குத் தகுந்தவாறு நெய்யையும் மூலிகைகளோடு சேர்த்துத் தயாரித்துக் கொடுப்பார்கள்...இதையே கிருதம் என்பர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Dec-19, 12:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 72

மேலே