தெளிநீர்மை பேணிவரின் கோடி தவமுன்பால் மண்டி வரும் - விநயம், தருமதீபிகை 544

நேரிசை வெண்பா

துளிநீர் மனிதனாய்த் தோன்றலால் அந்த
ஒளிநீர் அருமை உணர்ந்து - தெளிநீர்மை
கொண்டுநீ பேணிவரின் கோடி தவமுன்பால்
மண்டி வருமே மகிழ்ந்து. 544

- விநயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஒரு துளி நீர் உயர்ந்த மனிதனாய் உருவாகி வருகிறது. ஒளி நிறைந்த அந்த அதிசய நீர்மையை உணர்ந்து அதனை இனிது பேணி வரின் அரிய பெரிய தவங்களை அது அருளி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதனுடைய உருவத்தோற்றம் அரிய அதிசயமுடையது. கண்ணுக்குத் தெரியாத நுணுகிய அணுக்களிலிருந்து விண்ணுற ஓங்கி நிற்கும் பெரிய காட்சிகளைக் காட்டியருளுவது இயற்கைச் சக்தியின் விசித்திர வேலையாய் இருக்கிறது.

எத்தகைய அறிவாலும் அளந்து காண முடியாத வித்தக வினோதங்கள் எங்கும் விரிந்து நிற்கின்றன. பழகி வருகிற பழக்கங்களினால் அந்நிலைகளை வியந்து காணாமல் எவரும் அயர்ந்து போகின்றனர். உலகில் காணுவதினும் உடலில் காணவுரிய அதிசயங்கள் பல உள.

’துளி நீர் மனிதனாய்த் தோன்றலால்’ என்றது மனிதன் தோன்றியுள்ள கருமூலத்தைக் கருதியுணர வந்தது. அரசன், கவிஞன், ஞானி என உயர்ந்த கீர்த்திகளில் ஓங்கியுள்ளவர் எல்லாரும் பிறந்து வந்திருக்கும் மருமத்தை அறிந்து சிந்திப்பின் பரிந்து தெளிவர்.

சுக்கிலத்தைத் துளி நீர் என்றது. வெண்மை நிறமுடையதாதலின் இப்பெயர் வந்தது. விந்து, பிந்து, இந்திரியம் எனவும் வழங்கப்படும். உளவினை ஓர்ந்து தெளிப துளி என அளவு கூறியது.

இந்த ஒரு துளி வெள்ளை நீர் ஆணிடமிருந்து வெளிப்பட்டுப் பெண்ணிடம் பாய்ந்து அங்கே செந்நீரோடு தோய்ந்து பத்து மாதம் வயிற்றிலிருந்து வடிவம் திரண்டு முடிவில் பிள்ளையாய்ப் பிறந்து வெளி வருகிறது.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

புள்ளிநீர் வீழ்ந்தது பெருகிப் புன்புலால்
உள்வளர்ந் தொருவழித் தோன்றிப் பேரறம்
உள்குமேன் முழுப்புலாற் குரம்பை யுய்ந்துபோய்
வெள்ளநீ ரின்பமே விளைக்கு மென்பவே. 335

பாற்றுளி பவளநீர் பெருகி யூன்றிரண்(டு)
ஊற்றுநீர்க் குறும்புழை யுய்ந்து போந்தபின்
சேற்றுநீர்க் குழியுளே யழுந்திச் செல்கதிக்(கு)
ஆற்றுணாப் பெறாதழு தலறி வீழுமே. 336 துறவு உணர்த்தல், முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

துளி அளவு சுக்கிலத்தால் மனிதன் தோன்றுகிறான், அங்ஙனம் தோன்றினவன் நெறியுடையனாய்த் தருமம் தழுவி ஒழுகின் மறு பிறவியின்றிப் பேரின்ப நிலையை அடைகிறான், அவ்வாறு ஒழுகாமல் பழி வழியில் இழியின் நரக துன்பத்தில் வீழ்கிறான் என இவை உணர்த்தியுள்ளன. சுக்கில சுரோனிதங்களை ’பால் துளி, பவள நீர்’ என்றது. ’ஒருவழித் தோன்றி’ என்றது முன்பு போன வழியே பின்பு மீண்டு வந்து என மனிதன் ஈண்டு வந்திருக்கும் நிலையை எண்ணியறிய வந்தது.

கருவிலிருந்து பிறந்து வளர்ந்து வாழ்ந்து மனிதன் மாய்ந்து வருகிற நிலைகளைப் படம் வரைந்து காட்டியது போல் பட்டினத்தார் பாடியிருக்கிறார். உடல்கூற்று வண்ணம் என்னும் பெயரால் குறப்புச் சந்தத்தில் வந்துள்ள அந்தப் பாசுரம் அயலே வருகிறது.

1. ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்
அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊறுசுரோணிதம் மீதுகலந்து-

2. பனியில்ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து
புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடம்இதென்று
பார்வைமெய்வாய்செவி கால்கைகள் என்ற-

3. உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்வி ழுந்து
யோகமும்வாரமும் நாளும் அறிந்து-

4. மகளிர்கள் சேனை தரவணையாடை மண்படஉந்தி
உதைந்துகவிழ்ந்து மடமயில்கொங்கை அமுதம்அருந்தி
ஓரறிவீ ரறி வாகிவளர்ந்து-

5. ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட
வந்துதவழ்ந்து மடியில் இருந்து மழலைபொழிந்து
வாஇருபோவென நாமம்விளம்ப-

6. உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர்
தங்களொடுஉண்டு தெருவில் இருந்த புழுகி அளைந்து
தேடியபாலரோ டோடிநடந்து அஞ்சுவயதாகி விளையாடியே

7. உயர்தருஞான குருஉபதேசம் முத்தமிழின்கலை
யும்கரைகண்டு வளர்பிறைஎன்று பலரும்விளம்ப
வாழ்பதினாறு பிராயமும்வந்து-

8. மயிர்முடிகோதி அறுபதநீல வண்டிமிர் தண்தொடை
கொண்டைபுனைந்து மணிபொன் இலங்கும் பணிகள் அணிந்து
மாகதர்போகதர் கூடிவணங்க-

9. மதன சொரூபன் இவன் எனமோக மங்கையர் கண்டு
மருண்டு திரண்டு வரி விழிகொண்டு சுழிய எறிந்து
மாமலர் போல் அவர் போவது கண்டு-

10. மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடியமாமுதல் சேரவழங்கி-

11. ஒரு முதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும்
வம்பில் இழந்து மதனசுகந்த விதனம்இதென்று
வாலிபகோலமும் வேறு பிரிந்து-

12. வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல்வி ழுந்துஇரு
கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவி ராத குரோதம் அடைந்து-
செங்கையினில் ஓர் தடியும் ஆகியே

13. வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி
குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர்வந்து
வாயறியாமல் விடாமல் மொழிந்து-

14. துயில்வரும்நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சமும்
உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு

15. கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும் என்பவர்
சஞ்சலம் மிஞ்ச கலகல என்றுமலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து-

16. தெளிவும்இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்து மருண்டு திடமும் உலைந்துமிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏதெனநொந்து-

17. மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்
என்று தெளிந்து இனி என கண்டம் இனியென தொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற-

18. கடன் முறை பேசும் என உரைநாவுறங்கி விழுந்துகை
கொண்டு மொழிந்துகடைவழிகஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலுசு வாசமும் நின்று-
நெஞ்சுதடுமாறி வரும்நேரமே-

19. வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு
குஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல்யம தூதர்கள் வந்து-

20. வலைகொடுவீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து
குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து-

21. பழையவர்காணும் எனும்அயலார்கள் பஞ்சு பறந்திட
நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியும் என்று-

22. பலரையும் ஏவி முதியவர் தாமிருந்தசவம் கழு
வும் சிலரென்று பணிதுகில் தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை-

23. வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர்
குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிடவாழ்வென வாழ்வென நொந்து-

24. விறகிடமூடி அழல்கொடு போட வெந்து விழுந்து
முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே! - பட்டினத்தார்

மனித வாழ்வின் நிலைமையை வகையாக எடுத்துக் கூறித் தன்னைப் பிறவியிலிருந்து நீக்கியருளும்படி இறைவனை நோக்கிப் பட்டினத்தடிகள் இவ்வாறு உருகி வேண்டியிருக்கிறார்.

ஒரு சிறு துளியிலிருந்து தோன்றிப் பெரிய மனிதன் என வாழ்ந்து முடிவில் ஒரு பிடி நீறும் இல்லாமல் ஒழிந்து போகின்ற மாய வாழ்வைத் தெளிந்து கொண்டால் எவரும் உய்தி நிலையை விரைந்து கொள்வர்.

மனித வாழ்வைப் படம் பிடித்து அருணகிரிநாதரும் இவ்வகையில் காட்டியுள்ளார். மாயப் படங்களைக் கண்டு களித்துத் தீய பழக்கங்களைப் .பெருக்கி வருகிற மக்கள் இந்தத் தூய படத்தைச் சிறிதேனும் கருதிக் காண வேண்டும்.

அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு
ஆக மாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய
ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர
ஆளு மேளமாய் வால ரூபமாய் - அவரொரு பெரியோராய்

அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி
ஆவி யாயவோர் தேவி மாருமாய்
விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென
வீடு வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி
ஆசை யாளராய் ஊசி வாசியாய் - அவியுறு சுடர்போலே

வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில்
மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு
சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு
வீணி யார்சொலே மேல தாயிடா - விதிதனை நினையாதே

மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்
வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு
வார்கள் போகுவார் காணு மோஎனா
விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென
மேள மேசொலா யாளி வாயராய் - மிடையுற வருநாளில்

வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில
வாத மூதுகா மாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
பீளை சாறிடா ஈளை மேலிடா
வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
வாடி யூனெலாம் நாடி பேதமாய் - மனையவள் மனம்வேறாய்

மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்
மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு
காடு வாவெனா வீடு போவெனா
வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி
வாயு மேலிடா ஆவி போகுநாள் - மனிதர்கள் பலபேச

இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ
ஏழை மாதராள் மோதி மேல்விழா
எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற
ஈமொ லேலெனா வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய
ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் .- எரிதனி லிடும்வாழ்வே

இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்
ஏசி டார்களோ பாச நாசனே
இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
ஏக நாயகா லோக நாயகா - இமையவர் பெருமாளே. 107 திருப்புகழ்

பிறவி நிலைகளை வரிசையாக விரித்துரைத்து அந்தத் துயரங்கள் மருவாமல் தனக்கு அருள் புரியும்படி முருகப் பெருமானிடம் அருணகிரிநாதர் இங்ஙனம் உரிமையோடு வேண்டியுள்ளார். ’நீயும் நானுமாய் ஏகபோகமாய் இறுகும் வகை பரம சுகம் அருள்’ என்ற பரமான்ம அனுபவம் பரவச நிலையில் ஊன்றியுணர உரியது. இறைவனோடு தோய்ந்து அதிசய ஆனந்தத்தை எவ்வழியும் நுகர்ந்து திளைத்திருக்கிற அந்தத் திவ்விய நிலையை இழந்து வெவ்விய பிறவித் துயரில் சீவர்கள் வீழ்ந்து தவித்து ஆழ்ந்து அலமந்து வருவது கொடிய பரிதாபமாய் நெடிது நீண்டுள்ளது.

உண்மை தெளிந்த ஞானிகள் உறுதி நலங்களை உலகம் நலமுறப் போதித்துப் போகின்றனர். பெரியவர்களுடைய அனுபவ மொழிகள் விழுமிய சீவ ஒளிகளாய் அரிய பயன்களை அருளி வருகின்றன.

ஈசனோடு வாசி பேசவுரிய பரிபூரண மனிதனை ஒரு துளி விந்து தந்தருளுதலால் அந்த அதிசய கருவூலத்தை எவ்வளவு உரிமையோடு பாதுகாத்து வரவேண்டும் என்பதை யாவரும் செவ்வையாக அறிந்து கொள்ள வேண்டும்.

இருநூறு துளி இரத்தத்தின் சாரம் ஒரு துளி விந்துள் உறைந்திருக்கிறது. அதனை இனிது பாதுகாத்து வருபவன் புனித மேதையாய்ப் பொலிந்து திகழ்கிறான். பாதுகாவாமல் இழந்து விடுபவன் இழிந்து படுகிறான்.

’இரண்டு அடக்கோம்; ஒன்றை விடோம்’ என்றது ஆயுள் வேதம்; மல சலங்களை உள்ளே அடக்கி வைக்காதே; இந்திரியத்தை வெளியே விடாதே என இது போதித்துள்ளது. ஒன்று என்று விந்தைச் சுட்டியிருப்பது உய்த்துணரவுரியது. எல்லா வன்மைகளுக்கும் மூல முதலாய், ஒப்பற்ற திருவாய் உறைந்திருப்பது என அதன் அற்புத நிலையை இங்ஙனம் அறிவித்தருளினார். அரிய திருவை இழந்து வறியனாயிழிந்து படுவது பரிதாபமாகிறது.

’விந்து விட்டான் நொந்து கெட்டான்’ என்னும் பழமொழி மனிதனது சீவிய சத்தைக் தெளிவுறுத்தியுள்ளது.

பெறுவ(து) என்னைகொல் சுக்கிலம் கலித்தலால்
பெருந்தவ வலிகுன்றும்;
உறுவ(து) அவ்வளவோ பினைநீ விரும்பு
உடற்கும் ஆனிய(து) உண்டால். – வைராக்கிய சதகம்

விந்து கழியின், தவம் அழியும்; நோய் விளையும் என்றதனால் அது கழியாதிருப்பின் உளவாம் உறுதி நலங்கள் தெளிவாய் நின்றன. அரிய தவசி, பெரிய துறவி, ஞான முனிவன் என உயர்ந்துள்ளவர் எவரும் இந்திரியத்தை அடக்கியே இசை பெற்றிருக்கின்றனர். பிரமச்சரிய விரதத்தை உடையவன் உலகத்தை எளிதாக வென்று விடுகிறான்; அனுமானுடைய மகிமை முழுவதுக்கும் மூலகாரணம் இந்த விழுமிய விரதமேயாம்.

‘நெறி நின்று பொறிகள் ஐந்தும் வென்றவன்’ – இராமாயணம்’ என அந்த வீரன் பெற்றிருக்கிற வெற்றிப் பேர் எத்துணை மகிமை யுடையது! ஜித்தேந்திரியன் ஆன அவனை இந்திராதி தேவர்களும் வியந்து போற்றியிருக்கின்றனர். அதிசய மேதையென யாவராலும் துதி செய்யப் பெற்றுள்ளான்.

He was perfect master of the senses and wonderfully sagacious. - Vivekananda

'அவன் இந்திரியங்களை முற்றும் வென்றவன்; அதிசய மதியூகி’ என அனுமானைக் குறித்து விவேகானந்தர் இவ்வாறு வியந்து கூறியிருக்கிறார். அவனது விரத சீலமும், விநயமும் விவேகமும் கருதி உணருந்தோறும் அரிய உறுதி நலங்களை உதவி வருகின்றன. இச்சையை அடக்கினவன் உச்ச நிலையில் ஒளி செய்து மிளிர்கிறான். அறிவும் ஆற்றலும் அவனிடம் பெருகி நிற்கின்றன.

கோடி தவம் உன்பால் மண்டி வரும். காம இச்சையை அடக்கி இந்திரியத்தைப் பேணி வருதலால் விளையும் பெரு மகிமையை இது காண வந்தது.

விந்து சீவ தாது, அதனைப் பேணி வரும் அளவு ஆன்ம சத்தி பெருகி அற்புத நிலைகள் விளைந்து அதிசயம் மருவி வரும் என்றும், துளியின் ஒளியை விழியூன்றித் தெளிக என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Dec-19, 5:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 64

சிறந்த கட்டுரைகள்

மேலே