கல்வி இன்றேல் விழியிரண்டும் இல்லாத மெய் போல் பழி மிகும் - கல்வி, தருமதீபிகை 554

நேரிசை வெண்பா

செல்வம் குலமுதலாம் சீரெல்லாம் சேர்ந்திருந்தும்
கல்வியொன்(று) இன்றேல் கடையனாய் - நல்ல
விழியிரண்டும் இல்லாத மெய்யேபோல் வெய்ய
பழியே மிகுந்து படும். 554

- கல்வி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

செல்வம், குடிப்பிறப்பு முதலிய சீர்கள் எல்லாம் ஒருங்கே நிறைந்திருந்தாலும் கல்வி ஒன்று இல்லையானால் அவன் கண் இழந்த குருடனாய் இழிந்து படுகிறான் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், கல்லாதவன் கண் இல்லாதவன் என்கின்றது.

சிறப்புகளும் மதிப்புகளும் பல வகைகளில் மனிதனுக்கு அமைந்துள்ளன. பிறப்புரிமைகளில் சிலர் சிறப்பு நலங்களை அடைந்திருக்கின்றனர். அரசர் குடி, அமைச்சர் குடி, அறிஞர் குடி, வீரர் குடி என இவ்வாறு பரம்பரையான குடும்பங்களில் வந்து வருபவர் இயல்பாகவே மதிப்படைந்து நிற்கின்றனர்.

இந்த மதிப்புகள் சொந்தமானவையல்ல; புறத்திலிருந்து வந்தன; ஆதலால் தனது அகத்தில் தகுதி யில்லையாயின் அந்த மகனுக்கு இவை அயலாகின்றன.

செல்வம், அழகு, பலம், குலம் முதலிய நலங்கள் எல்லாம் ஒருவனுக்கு ஒருங்கே வாய்ந்திருந்தாலும் கல்வி அவனிடம் இல்லையாயின் அவன் கடையனாயிழிந்து நிற்கிறான். கல்லாதவனிடமுள்ள உருவ அழகும் திருவும் பிறவும் பொல்லாதனவாய்ப் புலையுறுகின்றன

நுண்மாண் துழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று. 407 கல்லாமை

கல்வியறிவில்லாதவனது வடிவழகை வள்ளுவப் பெருந்தகை இவ்வாறு எள்ளலாக இழித்துக் காட்டி இருக்கிறார்.

தருமர் முதலிய ஐவருடைய மனநிலைகளைக் குறித்து ஒருமுறை கண்ணன் வினவி வருங்கால் நகுலனை நோக்கி உன் உள்ளக் கிடக்கையை உண்மையாக உரை என்று கேட்டார். அப்பொழுது அவன் உரைத்த மொழிகள் அயலே வருகின்றன.

நகுலன் சொன்னது
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

குலமிக வுடைய ரெழின்மிக வுடையர்
..குறைவில்செல் வமுமிக வுடையர்,
நலமிக வுடைய ரென்னினுங் கல்வி
..ஞானமற் பமுமிலா தவரை,
வலமிகு திகிரிச் செங்கையாய் முருக்கின்
..மணமிலா மலரென மதிப்பேன்,
சலமிகு புவியி லென்றனன் வாகைத்
..தார்புனை தாரைமா வல்லான். 19 பாரதம்

குலம் எழில் செல்வம் முதலிய நலங்கள் எல்லாம் உடையராயினும் கல்வி இல்லாதவரை ஒரு பொருளாக மதியேன் என அம்மதிமான் இங்ஙனம் உறுதியாக உரைத்திருக்கிறார். செம்முருக்கம் பூ பார்வைக்குப் பெரிதாகவும் அழகாகவும் இருக்கும்; மணம் இராது. நெடிது வளர்ந்து எழிலாய் இருந்தாலும் கல்வியில்லாதவன் அந்த மணம் இல்லா மலர் என நேர்ந்தான்.

மலர்க்கு மணம் போல் உயிர்க்குக் கல்வி என்றதனால் அஃதில்லாத உயிர் வாழ்வின் இளிவு தெளிவாம்.

உயர்ந்த குடியில் பிறந்து சிறந்த உருவமும் பருவமும் அமைந்திருந்தாலும் வித்தையில்லாதவன் மணமில்லாத முருக்கம் பூவைப்போல் ஒளியிழந்து இழிந்தே நிற்பான்' என வடமொழியாளரும் இங்ஙனம் குறித்துள்ளனர்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச் சீர் அருகி வரலாம்)

மண்ணிற்செய் பாவை மீது
..வயங்குபொற் பூச்சோ தண்பூங்
கண்ணியை மாற்றிச் சூடுங்
..காட்சியோ பழம்பாண் டத்திற்
பண்ணிய கோல மோநற்
..பண்பொடு ஞானங் கல்வி
புண்ணிய மேது மில்லான்
..பூண்டபே ரெழிலு டம்பே. 5 - அழகால் செருக்கல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல், நீதி நூல்

கல்லாதவனது உருவ அழகை மேலோர்கள் இவ்வாறு இழித்துக் கூறியுள்ளனர். சிறந்த மதிப்புடைய அழகும் கல்வியில்லாதவனிடம் சார்ந்தமையால் இழிந்து பட்டது.

கல்வி உயிரழகாதலால் அதனை இழந்தவன் எவ்வளவு எழிலுடையனாயினும் எவ்வழியும் இழிபழிகளை அடைய நேர்ந்தான்.

நேரிசை வெண்பா

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல; - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.. 131 கல்வி, நாலடியார்

முடி அழகு, உடை அழகு முதலிய புற அழகுகள் எல்லாம் அழகல்ல; அக அழகாகிய கல்வி அழகே அழகு என இது காட்டியுள்ளது.

தன்னையுடையானை அரசர் முதல் யாவரும் உவந்து கண்டு புகழ்ந்து தொழச் செய்யுமாதலால், கல்வி அழகு என வந்தது.

பிற அழகுகள் நிலை திரிந்து அழியும்; கல்வி அழகு என்றும் நிலையாய் நின்று நிலவும். எவ்வழியும் அழியாத இந்த அழகையுடையவன் யாண்டும் திவ்விய மகிமைகளை அடைந்து வருகிறான்.

நேரிசை வெண்பா

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக்(கு) அழகுசெய் வார். 13 நீதிநெறி விளக்கம்

மயிர்வனப்புங் கண்கவரு மார்பின் வனப்பு
முகிர்வனப்புங் காதின் வனப்புஞ் - செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு. 36 சிறுபஞ்சமூலம்

இடைவனப்புந் தோள்வனப்பு மீடின் வனப்பும்
நடைவனப்பு நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல வெண்ணோ
டெழுத்தின் வனப்பே வனப்பு. 74 ஏலாதி

கல்வியே அழகு எனக் குறித்துக்காட்டி அதன் மகிமையை விளக்கி வந்துள்ள இவை இங்கே நன்கு காணத்தக்கன.

இத்தகைய கல்வியை இழந்திருப்பது எத்தகைய இழிவு! அவ்வளவையும் செவ்வையாகச் சிந்திக்க வேண்டும். இழி நிலையை உணராமல் வாழ்வது ஈனமேயாம்.

விழி இல்லா மெய்யே போல் பழியே என்பது கல்லாமையின் இழிவைக் தெளிவாகக் காட்ட இவ்வுவமை வந்தது. இருளடைந்திருக்கும் அதன் மருள் நிலை தெரிய கண் இல்லாத உடல் போல் கல்வி இல்லாத உயிர் என்றது.

கல்லாதவன் அறிவு நலம் குன்றி உயிரொளி மங்கி வறிதே இழிந்திருப்பானாதலால் கொடிய குருடன் என நின்றான்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். 393 கல்வி

கற்றவர் நிலையும் கல்லாதவர் புலையும் இங்ஙனம் இது ஒருங்கே காட்டியுள்ளது. கண் அனைய அருமைக் கல்வியை இழந்து மனிதன் சிறுமைப்பட்டிருப்பது பெரிய பரிதாபமேயாம்.

நேரிசை வெண்பா

கண்ணே அனையதெனக் கல்விதனை வள்ளுவப்பேர்
அண்ணல் இரங்கி அறிவித்தும் - எண்ணமுடன்
கற்றுத் தெளியாமல் கண்குருடு பட்டுநமர்
இற்றொழிதல் என்னே இடர்.

அரிய கல்வியை உரிய பருவத்தே பயின்று பெரியவனாகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Dec-19, 5:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 141

சிறந்த கட்டுரைகள்

மேலே