மருத்துவ வெண்பா - கொத்துமல்லிக் கீரை – பாடல் 44

நேரிசை வெண்பா

கொத்துமல்லிக் கீரையுண்ணிற் கோரவ ரோசகம்போம்;
பித்தமெல்லாம் வேருடனே யேகுங்காண் – சத்துவமாம்
வெச்செனவே போகம் விளையுஞ் சுரந்தீரும்
கச்சுமுலை மாதேநீ காண். 44

- பதார்த்த குண விளக்கம்

குணம்:

கொத்துமல்லிக் கீரையால் அரோசகமும், பித்த வர்க்கமும், பித்த சுரமும் போகும்; வன்மையும், சுக்கிலமும் விருத்தியாகும்.

உபயோகிக்கும் முறை:

இதனைப் பருப்பிலிட்டுப் பாகப்படி வேக வைத்துக் கடைந்து முதலன்னத்தில் போட்டு நெய்விட்டும் அல்லது இதனை உப்பு, புளி, காரத்துடன் கூட்டித் துவையலாகச் செய்து தாளித்து அன்னத்திலிட்டு நெய்விட்டும் உண்பதுண்டு. இவற்றால் கபாலத்தைப் பற்றிய சூடு தணியும்; நித்திரை உண்டாகும். பித்தத்தையும், அரோசகத்தையும் நீக்கித் தீபனத்தை உண்டாக்கும்.

கொத்துமல்லித் தொக்கு செய்முறை:

புளி, மிளகாய் வற்றல், பெருங்காயம், கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து வறுத்தபின் மிக்சியிலிட்டு கொத்துமல்லி இலையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, கெட்டியாக அரைத்து வைத்துக் கொண்டால் மோர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Dec-19, 12:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 64

சிறந்த கட்டுரைகள்

மேலே