நாடாதி நட்டார்கண் விட்ட வினை – நான்மணிக்கடிகை 25

இன்னிசை வெண்பா

அஞ்சாமை யஞ்சுதி 1ஒன்றின் தனக்கொத்த
எஞ்சாமை யெஞ்சல் அளவெல்லாம் - நெஞ்சறியக்
கோடாமை கோடி பொருள்பெறினும்2 நாடாதி2
நட்டார்கண் விட்ட வினை. 25

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

அஞ்சுதற்குரிய செயல்களில் அஞ்சாமலிருக்கும் ஒழுக்கத்தை நீ அஞ்சுவாய்;

ஒரு செயலில் தனக்குக் கூடுமான செயலளவுகளிலெல்லாம் பிறர்க்கு உதவி செய்தலிற் குறையாமையாகிய ஒழுக்கத்தைக் குறைய விடாதே;

உள்ளமறிய ஒருபக்கங் கோணாமையாகிய ஒழுக்கத்தை கொள்ளுவாய்,

பெரும் பொருள் பெறுவதானாலும் நண்பரது பொறுப்பில் செய்யவிட்ட தொழிலை ஆராயாதே.

கருத்து:

அஞ்சுவது அஞ்சுக; இயன்றளவு உதவிசெய்வதிற் குறையாதே; ஒருபக்கங் கோணாதே; நண்பர்கள்பால் விட்ட தொழிலை ஆராயாதே.

விளக்கவுரை:

அஞ்சாமை பழிபாவங்கட்கு அஞ்சாமை; இவ்வியல்பு ஓராண்மையாகாமையின், இன்னோரன்ன வற்றில் அஞ்சுதலே வேண்டற்பாலது.

‘தனக்கொத்த அளவெல்லா' மென்று கூட்டுக.

கோடாமை யென்றது ஈண்டு நடுவு பிறழாமை.

நட்டார்கண் விட்ட வினையை நாடின், அவர் வினையை நெகிழவிடுவர்; விடவே, இடருண்டாம்,

பாடம்: 1. அஞ்சுக, 2. நாடாமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Dec-19, 8:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே