சொலற்பால அல்லாத சொல்லுதலுங் குற்றம் – நான்மணிக்கடிகை 26

இன்னிசை வெண்பா

அலைப்பான் பிறவுயிரை யாக்கலுங் குற்றம்
விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றம்
சொலற்பால அல்லாத சொல்லுதலுங் குற்றம்
கொலைப்பாலுங் குற்றமே யாம். 26

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

கொன்று உண்பதற்காக பிற உயிர்களை வளர்த்தலும் பிழையாகும்; விலைகொள்ளும் வகையால் ஊனைப்பெற்று உண்ணலும் பிழையாகும்;

சொல்லும் வகையின அல்லாதனவாகிய சொற்களை சொல்லிவிடுதலும் பிழையாகும்; கொலைவகைகளும் பிழையேயாகும்.

கருத்து:

பிறவுயிர்களைக் கொன்று உண்பதற்காக வளர்த்தலுங் குற்றம்;

அங்ஙனங் கொல்லாமல் அவற்றின் ஊனை விலைக்கு வாங்கி உண்ணலுங் குற்றம்;

சொல்லத்தகாதவற்றைச் சொல்லலுங் குற்றம்;

கொல்லலுங் குற்றமேயாம்.

விளக்கவுரை:

அலைத்தல் - ஈண்டுக் கொலைமேனின்றது, பால் - வகை;

சொலற்பாலவல்லாத - தீயனவுந் தகுதியற்றனவுமான சொற்கூறுகள்.

இதனால் புலாலுண்ணல், தகாதன கூறல், கொலைபுரிதல் முதலியன விலக்கப்பட்டன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Dec-19, 8:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

சிறந்த கட்டுரைகள்

மேலே