தெய்வமெனச் சிறப்பருளும் கல்வி எய்தார் இறந்தார் இழிந்து - கல்வி, தருமதீபிகை 555

நேரிசை வெண்பா

மனித உருவை மருவினும் கல்வி
இனிதமையா(து) ஆயின் இளிவே - மனிதன்தான்
தெய்வம் எனவே சிறப்பருளும் கல்விதனை
எய்தார் இறந்தார் இழிந்து. 555

- கல்வி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அரிய மனிதப் பிறப்பை அடைந்திருந்தாலும் கல்வி இல்லையாயின் அது இளிவாய் இழிந்துபடும்; மனிதனைத் தெய்வமாகச் செய்தருளுகிற கல்வியை உரிமையுடன் அடைந்து கொள்ளாதவர் உயிரோடிருந்தாலும் இறந்தவரே என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இழிபிறவிகள் பலவும் தப்பி மனித உருவை மருவி வருவது பெரிதும் அரிதாதலால் அந்த அருமை நிலையை உம்மை உணர்த்தி நின்றது. எண்ணரிய பிறவிகளுள் மானிடப் பிறவி மிகவும் கண்ணியமுடையது; ஆகவே அது புண்ணியப் பேறாக எண்ண வந்தது.

அத்தகைய அரிய உயர்ந்த பிறவியும் கல்வியைப் பெறவில்லையானால் புல்லிதாய் இழிந்து படுகின்றது. கல்லாமையால் அறிவு வளர்ச்சி இல்லாமல் போவதால் பொல்லாத மடமைகள் புடைசூழ்ந்து கொள்ளுகின்றன; அதனால் அந்க மனித வாழ்வு எவ்வழியும் எள்ளலாய்த் தாழ்ந்து இழிவுகளில் வீழ்ந்து அழிவுகளில் ஆழ்ந்து அவலமாய் உழலுகின்றது.

கல்வி இல்லாதவர் ஒளியில்லாத விழி போலவும், சிறகு இல்லாத பறவை போலவும் வலியிழந்து இழிவுறுதலால் அவரது வாழ்க்கை பழியடைந்துள்ளது.

’கல்வி யில்லாதவனது ஜீவியம் நாய் வால் போல் விருதாவானது; மறைக்க வேண்டியதை மறைத்து மானம் காக்காமல் ஈனமாய் அது இழிந்துள்ளது’ என ஒரு வடமொழி சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது; எள்ளல் இழிவுகளை உள்ளியுணர நாய்வாலை உவமை குறித்தது. மாடு, குதிரை, கழுதை, பன்றி முதலிய மிருகங்களின் வால்கள் மரும நிலையை மறைத்து ஈக்கள் முதலியவற்றால் இடர்கள் நேராமல் காக்கின்றன. நாய் வால் அவ்வாறு யாதொரு பலனுமின்றி வீணே கோணலாய்த் தோன்றி நிற்கிறது. ஈனமான அந்த வீணத்தோற்றம் கல்லாதான் தோற்றத்துக்கு இங்கே உவமானமாய் வந்தது.

உயர்ந்த பிறப்பில் பிறந்திருந்தும் உரிய பருவத்தில் கல்லாமையால் மனிதன் இவ்வாறு பொல்லாத பழிகளை அடைய நேர்ந்தான். கலையிழந்த போதே தலையிழந்து தாழ்ந்தான்.

கல்வி அமையாதாயின் இளிவே. என்றது வேறு வகையில் எவ்வளவு உயர்வுகள் அமைந்திருந்தாலும் கல்வி ஒன்று அமையவில்லையாயின் அவன் பிறப்பு இழிக்கப்படும் என்பதை உணர்த்தி நின்றது. உலக நிலையில் குலம் முதலியவற்றால் இழிந்தவனாயினும் கல்வியுடையவன் உயர்ந்த மதிப்பை அடைந்து கொள்ளுகிறான்; எல்லாச் செல்வங்களையும் எய்தியிருந்தாலும் கல்லாதவன் புல்லியனாகவே எண்ணப்படுகிறான்.

மண்ணைப் பொன் ஆக்குவது போல் எவ்வளவு தாழ்ந்தவனையும் கல்வி திவ்விய நிலையில் உயர்த்தி அருளுகின்றது.

மண்ணுலகில் பிறந்த மனிதனே எனினும் கல்வியுடையவன் அறிவால் சிறந்து விளங்குதலால் விண்ணுலகில் இருக்கும் தேவனைப் போல் யாவரும் அவனை மதித்துப் போற்றுகின்றனர் என்பதை ’தெய்வம் எனவே கல்வி சிறப்பு அருளும்’ என கவிராஜ பண்டிதர் குறிப்பிடுகிறார்.

‘'தேவர் அனையர் புலவர்' - நான்மணிக்கடிகை, 75 என்றார் விளம்பி நாகனார். கல்வியால் அறிவு ஒளி பெற்று உயர்வதால் அந்த மனிதன் எந்தவகையிலும் சிறந்து உயர்ந்து விளங்குகிறான். புலவர் என்னும் பெயர் கல்வியறிவால் தலை சிறந்தவர் என்னும் பொருளையுடையது. கலை அறிவால் உயர்ந்திருத்தலால் தேவரும் புலவர் என நேர்ந்தார்.

உயர்நிலையோர் சுரர் உம்பர் புலவர்
அண்டர் முதல்வர் ஆதித்தர் சுவர்க்கர்
பொன்னுல குடையோர் தேவர் பொதுப்பெயர். - பிங்கலந்தை

தேவர்க்குப் புலவர் என்று ஒரு பெயர் இதில் வந்துள்ளது.

புத்துயீர்த்திட்(டு) அலையாமல், புலவர்நா(டு) உதவுவது- 21 நாடவிட்ட படலம், கிட்கிந்தா காண்டம், இராமாயணம்

தெய்வ லோகத்தைப் புலவர் நாடு என்று இது குறித்திருக்கிறது. இத்தகைய உத்தம நிலையில் உயர்த்தி யருளுகிற அருமைக் கல்வியைப் பெற்றவரே பிறவி நலனை உற்றவராய் உயர்கிறார், பெறாதவர் பிறப்பின் சிறப்பை இழந்து இழிந்து படுதலால் அவர் இருந்தும் இறந்தார் என நேர்ந்தார். உயிருக்கு அமுதமான இனிய கல்வியை உடனே உரிமை செய்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-19, 10:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே