இயற்கை வளம் 3

====================

நமக்கென மண்ணில் நதியோட விட்டு
அமர்க்களம் செய்யும் வனம்.21
*
வனம்கொண்ட நேசம் வசமாக்கும் நெஞ்சில்
தினந்தோறும் பெய்யும் மழை 22
*
மழையற்று வாட மரம்வெட்டிப் போடும்
பிழைசெய்தல் வாழ்வின் பிழை.23
*
பிழைசெய்து நாளும் பிழைக்கின்ற நாமும்
அழைப்பின் வருமோ மழை.24
*
மழைமேகம் சூழும் மலைமேட்டி லெல்லாம்
நிலையாக வேண்டும் மரம்.25
*
மரமற்றுப் போனால் மழையற்றுப் போகும்
சிரமேற்றி வைத்தல் சிறப்பு.26
*
சிறப்புடன் வாழ்ந்திடச் செய்வாயே காடு
பறப்பன வாழும் படிக்கு.27
*
படிக்கும் குழந்தைக்கும் பாரிலுள்ளக் காட்டைப்
பிடிக்கச்செய் வாழும் இயற்கை.28
*
இயற்கைச் சிதைவை இளையோர்க் குணர்த்த
முயற்சி எடுக்க முனை.29
*
முனைவாரே வாழ்வில் முகில்சொட்டும் தேனில்
நனைவாராம் என்றேநீ நம்பு. 30

தொடரும்.....
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Dec-19, 2:27 am)
பார்வை : 142

மேலே