மருத்துவ வெண்பா - கத்தக் காம்பு – பாடல் 45

நேரிசை வெண்பா

நற்கத்தக் காம்பதனை நாளுமடைக் காயோடு
பொற்புமிகு மாதரசே போட்டுவர – பற்கடாம்
வன்மைபெறும் எயிறுறும் வாய்நாற்றம் முற்றுமறும்
வெம்மையறு மென்றே விளம்பு. 1

குணம்:

கத்தக் காம்பைத் தாம்பூலத்தோடு உபயோகப்படுத்தி வரப் பற்களுந் தேகமும் வன்மையடையும். வாய் நாற்றமும், தேக வெப்பமும் நீங்கும்.

நேரிசை வெண்பா

பேதிசிறு நீர்க்கட்டும் பேசவொணா வாய்ரணமும்
தீதிலுயர் உந்திப்புண் தீருமே – மேதினியில்
செங்குருதி தோடமெலாம் தீர்ந்துவிடும் விந்திறுகும்
பைங்கூந்தற் மானே பகர். 2 - பதார்த்த குண விளக்கம்

குணம்: கத்தக் காம்பால் பேதி, நீர்க்கட்டு, வாய் விரணம், வயிற்றுப் புண், ரத்தக் கெடுதல் நீங்குவதுடன் விந்து பலப்படும்.

உபயோகிக்கும் முறை:

இதைத் தாம்பூலத்துடன் சேர்த்து மென்று தின்ன மலத்தைக் கட்டும். நீரை வறட்டும். உறைந்த உதிரத்தைக் கரைக்கும். இதனைப் பற்பொடிகளில் சேர்த்துப் பல்தேய்க்கப் பல் ஈறு பலப்பட்டுப் பல்லாட்டத்தை நீக்கும்.

இதைத் தாம்பூலத்துடன் உபயோகப்படுத்த குடலிலும், நீர்த்தாரையிலும் உள்ள புண்ணை ஆற்றும். நீர்ச்சுறுக்கு, பேதி, சொப்பன ஸ்கலிதம் முதலியவைகளும் போம்.

நான் சிறு குழந்தையாய் இருக்கும் போது, என் தாயார் வெற்றிலையில் சுண்ணாம்பும் தடவி, பாக்குடன் கத்தக் காம்பும் சிறிதளவு பிய்த்துச் சேர்த்துப் போடுவார்கள். வெற்றிலையுடன் கத்தக் காம்பு சிறிதளவு சேர்த்துப் போடும்பொழுது நாக்குச் சிவப்பு கூடுமென்பார்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Dec-19, 1:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே