உலகின் விளிநோக்கி இன்புறூஉங் கூற்று – நான்மணிக்கடிகை 27

இன்னிசை வெண்பா

கோல்நோக்கி வாழுங் குடியெல்லாந்; தாய்முலைப்
பால்நோக்கி வாழுங் குழவிகள்; வானத்
துளிநோக்கி வாழும் உலகம்; உலகின்
விளிநோக்கி இன்புறூஉங் கூற்று. 27

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

குடிமக்கள் எல்லோரும் அரசனது ஆட்சியை நோக்கி உயிர் வாழ்வார்;

குழந்தைகளெல்லாரும் தாயின் முலைப்பாலை நோக்கி உயிர் பிழைக்கும்;

உலகத்துயிர்கள் வானத்தினின்றும் விழும் மழைத்துளியை நோக்கி உயிர் வாழும்;

நமன் உயிர்களின் சாவை நோக்கி மகிழ்வான்.

கருத்து:

குடிகள் அரசனது ஆட்சியால் உயிர் வாழ்வர்; குழந்தைகள் தாயினது முலைப்பாலால் உயிர்வாழும்; உயிர்கள் மழைத்துளியால் வாழும்; கூற்றுவன் உயிரிகளின் சாக்காட்டை எதிர்நோக்கியிருப்பன்.

விளக்கவுரை:

கோல் - ஆட்சிக்கு வந்தது; அடைமொழி புணராமையின், அது செங்கோலரசையே குறிப்பதாயிற்று :

இயல்பென்ற வளவில் அது நல்லியல்பையே குறித்தல்போல வென்க.

வாழுங்குடி என்பதனாலும் அப் பொருள் காணலாம்.

‘குடி' ‘உலகம்' முதலியன அஃறிணைச் சொல்லால் வந்தமையின், அவை தமக்கேற்ற அஃறிணை வினைமுடிபைக் கொண்டன.

‘நோக்கி' வாழ்த லென்றது. இன்றியமையாமை கருதி வந்தது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Dec-19, 10:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே