உப்பால் உயர்ந்த உலகம் புகும் – நான்மணிக்கடிகை 28

பஃறொடை வெண்பா

கற்பக் கழிமடம் அஃகும் மடம்அஃகப்
1புற்கந்தீர்ந்(து) இவ்வுலகின் கோளுணருங் கோளுணர்ந்தால்
தத்துவ மான நெறிபடரும் அந்நெறி
இப்பா லுலகின் இசைநிறீஇ - உப்பால்
உயர்ந்த உலகம் புகும். 28

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

ஒருவன் அறிவு நூல்களைக் கற்பதனால் மிக்க அறியாமை குறையப் பெறுவான்; அறியாமை குறைய புல்லறிவு நீங்கி இவ்வுலகத்தின் இயற்கையை யறிவான்; அவ் வியற்கையை யறிந்துகொண்டால் உண்மையான அருணெறியிற் செல்வான்; அந் நெறியினால் இவ்வுலகில் புகழ் நிறுத்தி மறுமையில் உயர்ந்த வீட்டுலகத்திற் புகுவான்.

கருத்து:

ஒருவன் அறிவு நூல்களைக் கற்றால் அறியாமை குறையப்பெறுவான்; அறியாமை குறையப் புல்லறிவு நீங்கி உலக வியற்கையை யறிவான்; அறிய மெய்ந்நெறியாகிய நன்னெறியில் செல்வான்; செல்ல, இவ்வுலகத்திற் புகழை நிறுத்தி மறுமையில் வீட்டுலகம் புகுவான்.

விளக்கவுரை:

‘கழிமட' மென்றது, அறியாமையின் பெரும் பகுதி,.

கோள் - இங்குக் கொள்ளப்படுவதான உலக நிகழ்ச்சிகளின் கருத்து.

‘இப்பாலுலகின்' என்பதை இம்மையில் இவ்வுலகத்திலென உரைப்பினுமாம்.

உப்பால் : அகரச் சுட்டின் சேய்மைப்பொருளது; உயர்ந்த உலகம் - வீடு.

இச்செய்யுள் ஐந்தடியான் வந்த பற்றொடை வெண்பா;

(பாடம்) 1 புற்பந்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Dec-19, 10:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 85

சிறந்த கட்டுரைகள்

மேலே