இருபத்தோராம் நூற்றாண்டுக் குழந்தை

நகைச் சுவை.
இருபத்தோரான் நூற்றாண்டுக் குழந்தை.

எங்கள் உறவினர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார், எங்களைக் காணவும் நலம் விசாரிக்கவும் என்பதற்காக. அவருடன் அவரது ஐந்து வயதுப் பெயர்த்தி சித்திரையும் வந்திருந்தாள். பண்ணை வேளைகளைப் பார்க்க நான் புறப்பட்டவுடன், இருவரும் என்னுடன் எங்கள் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டி உடன் வந்தார்கள்.
தோட்டத்தில் உள்ள குளத்தில் ஒரு கல்லாமை (கல்லாமை இல்லை, கல் ஆமை, சிறிய வகை ஆமை) நீண்ட காலமாகக் குடி இருந்தது. அதனுடன் அவ்வப்போது துணையாக ஒரு பெண் ஆமையும் வந்து செல்லும். எங்கள் வீட்டில் எல்லாருடனும் அவை இரண்டும் பழகி இருந்ததால் நாங்கள் யார் அருகில் சென்றாலும் அவை வெளியில் வந்து எங்களை வேடிக்கை பார்க்கும். தொட்டாலும் கை கால் தலையைச் சுருக்கிக் கொள்ளாது.
அன்றும் அவை கரையில் மேய்ந்து கொண்டிருந்தன. என்னைக் கண்டதும் தள்ளாடித் தள்ளாடி வந்தவை, என்னுடன் புதியவர்கள் இருந்ததால் சட்டென்று கைகால்களைச் சுருக்கிக் கொண்டு படுத்து விட்டன. குழந்தைக்கு வேடிக்கை காட்ட எண்ணி அவற்றை எழுப்ப முயன்றேன்.
அவற்றைப் பலமுறை உச்சியில் உள்ள வட்ட ஓட்டின் மீது மெதுவாகத் தடவியும் அவை வெளிக்காட்டவில்லை. மல்லாக்க்ப் போட்டு வயிற்றைத் தட்டியும் ஒரு பலனும் இல்லை!!

அப்போது சித்ரா சொன்னாள் - "தாத்தா, பேட்டரி தீந்துருச்சு போல! போயி வேரெ வாங்கி வாங்க! மாத்தி உடலாம்!"

அதுவரை உயிருள்ள ஆமைகளயே பார்த்திராக குழந்தை அவற்றைப் பொம்மைகள் என எண்ணிக் கொண்டாள்!!

*************************************************************************************************************************
எனக்கும் உறவினருக்கும் கண்ணில் நீர் வந்து விட்டது! இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த ஆமைகளாவது இருக்குமோ?
அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு உண்மையாகவே சீனாக்காரனின் ஆமைப் பொம்மைகளைத் தான் காட்ட வேண்டி வந்து விடுமோ?

எழுதியவர் : செல்வப் ப்ரியா - - சந்திர (6-Dec-19, 11:48 am)
பார்வை : 43

மேலே