வாழ்வில் இனிமை விரும்பின் எளிமை துணைக்கொள் - விநயம், தருமதீபிகை 547

நேரிசை வெண்பா

வாழ்வில் இனிமை வளர விரும்பினோ
சூழ்வில் எளிமை துணைக்கொள்க; - தாழ்வில்
உயர்நலங்கள் எல்லாம் ஒருங்கே உளவாம்
உயிர்நலம் காண்க உணர்ந்து. 547

- விநயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வாழ்க்கையில் இன்பம் வளர்ந்துவர விரும்பின் எவ்வழியும் எளிய நீர்மைகளை உரிமை செய்து கொள்க; இனிய பணிவில் அரிய பல உயர் நலங்கள் பெருகியுள்ளன; உன் உயிர்க்கு உண்மையான உறுதி நலனை உணர்ந்து தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் எளிய வாழ்வு இனிய சுகம் என்கின்றது.

அல்லல் யாதும் இல்லாமல் நல்ல சுகமாய் வாழவே எல்லாரும் விரும்பியுள்ளனர். வேண்டாத அல்லல்கள் மேல்வந்து வீழ்கின்றன; வேண்டுகிற இன்பங்கள் விலகிப் போகின்றன. மனித வாழ்க்கை யாண்டும் அதிசய வினோதங்களாயுள்ளன.

எல்லாம் நியமமாகவே நடைபெற்று வருதலால் நேருகிற நிலைகளுக்கெல்லாம் காரணங்கள் மறைந்திருக்கின்றன. நினைவு நல்ல வழிகளில் வளரின் நலங்கள் வருகின்றன; அல்லல் நிலைகளில் இழியின் அவலங்கள் பெருகுகின்றன.

மனதைப் புனிதமாக வைத்துக் கொண்டவன் வாழ்க்கை முழுவதையும இனிமையாக வளர்த்துக் கொள்ளுகிறான்.

தன் குடி வாழ்க்கை என்றும் மேன்மையாக வளர்ந்து வர வேண்டின் அவன் எவ்வழியும் நல்ல சிந்தனைகளைப் பேணி வர வேண்டும். உள்ளத்தில் நல்லவன் உலகத்தில் எல்லா வழிகளிலும் நலங்களைக் கண்டு இனிய பலன்களை அனுபவிக்கிறான்.

செல்வச் செழிப்பினால் ஒரு வாழ்க்கையில் உண்மையான சுகம் காண முடியாது, பகட்டான ஆடம்பரங்கள் அதனால் வெளியே விளங்கி நின்றாலும் உள்ளே மெய்யான இனிமை சுரந்து நில்லாது. கடுந் தருக்கு, காமக் களிப்பு, மடமை, மயக்கம், மனத்திமிர் முதலிய மையல் மருள்களே அங்கு வெய்ய நிலைகளில் உலாவி நிற்கும்.

அருள் கனிந்த வாழ்வில் பொருள் பணிந்துள்ளது. எளிய வாழ்வே பெரியோர்களுக்கு யாண்டும் உரியனவாயுள்ளன. அகத்தில் இனிய பண்புகள் சுரந்திருத்தலால் புறத்தில் அவரது வாழ்வு அறத்தோடு பொலிந்து விளங்குகிறது.

பொருள் நிறைந்த வாழ்வு மருள் மலிந்து நிற்றலால் அருள் சுரந்த இந்த வாழ்வின் எதிரே இருள் படிந்து இழிந்துளது.

எல்லாச் செல்வங்களும் வாய்ந்த அரசர் வாழ்வினும் யாதும் இல்லாத தவசிகள் வாழ்வு எவ்வளவு சுவையுடையதாய் ஒளி பெற்று உயர்ந்து மிளிர்கிறது!

Poverty is its ornament. It does not need plenty. - Emerson

"வறுமை அதன் அணி; அதிகமான வசதிகளை அது விரும்பாது' என உண்மையான பெரியோர்களுடைய வாழ்க்கை நிலையைக் குறித்து எமர்சன் இவ்வாறு உரைத்திருக்கிறார்.

’சூழ்வில் எளிமை துணைக் கொள்க’ என்றது வாழ்வில் சுகமும் தெளிவும் மருவி வருதற்கு வழியை விழிகாண இது விளக்கி நின்றது. சூழ்வு - சூழ்ந்துள்ள நிலை. தன்னைச் சுற்றியிருக்கும் சூழல்களைச் செவ்வையாக ஒழுங்கு செய்துகொள்ளின் அந்த மனிதனுடைய குடிவாழ்க்கை எவ்வழியும் இனிமை சுரந்து வரும்.

குடியிருப்பு, உணவு, உடை முதலிய தேக வசதிகளை வீணே பெருக்கி விரிக்காமல் வேண்டிய அளவு சுருக்கிப் பழக்கிக் கொள்ளின் யாண்டும் நன்மையாம். தேவைகளை வளர விடின் அவை கொடிய சுமைகளாய்க் குடிகேடு செய்யும்.

குடும்ப பாரம் என உலகில் வழங்கி வரும் சொல்லால் அதனைப் பாதுகாத்து வருவது எவ்வளவு கடினம் என்பது எளிது தெளிவாம்.

குடும்ப பாரத்தை விவேகிகள் கடக்கும்
கொள்கைபோல் பாலையைக் கடந்து. - ஞானவாசிட்டம்

ஒரு அரசன் குதிரையேறிப் பெரிய பாலைவனத்தைக் கடந்து போன நிலையை இவ்வாறு குறித்திருக்கிறார். குடும்பம் தாங்கும் இடும்பைகளை இதனால் அறிந்து கொள்ளலாம்.

இயல்பாகவே இவ்வாறு சுமையான குடும்ப வாழ்வை இதமாகவும் இனிமையாகவும் நடத்தி வருவது பெரிய கலையாம்; அரிய விநயமாம்.

ஆடம்பரமில்லாத எளிய வாழ்வு இனிய ஞான நீர்மையாய் மருவி வருகிறது. ஆன்ம சிந்தனை மேவிய உயர்ந்த குறிக்கோள்களோடு தோய்ந்து வருகிற வாழ்க்கை சிறந்த மகிமையாய்த் தேசு மிகுந்து திகழ்தலால் அதனை யாவரும் வியந்து புகழ்கின்றனர். அது அரிய மகான்கள் வாழ்க்கையாயுள்ளது.

Plain living and high thinking are no more. - Wordsworth

‘எளிய வாழ்க்கையும் உயர்ந்த எண்ணமும் இல்லாமல் போயினவே’ என்னும் இது இங்கே அறியவுரியது.

இடம்ப வாழ்வும் இழிந்த எண்ணங்களுமே யாண்டும் மலிந்திருத்தலை நினைந்து வேட்ஸ்வொர்த் என்னும் ஆங்கிலக் கவி இங்ஙனம் வருந்தியிருக்கிறார்.

’உயிர் நலம் காண்க’ என்றது உடலைப் பேணி வரும் பொழுதே உயிர்க்குறுதி நலங்களை உணர்ந்து கொள்க என இது உணர்த்தியருளியது. உடலளவில் அளவறிந்து வாழ்ந்து உயிரின் உயர்ந்த நிலையை விரைந்து அடைந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Dec-19, 10:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 82

மேலே