பீடுபெறக் கற்றவ் விளிவைக் களையாது நோதல் மடம் - கல்வி, தருமதீபிகை 557

நேரிசை வெண்பா

மூடன் எனுமொழியை மூடருமே கேட்கமனம்
கூடா(து) அழன்று கொதிக்கின்றார் - பீடுபெறக்
கற்றவ் விளிவைக் களையா(து) அயர்ந்துநின்று
மற்றவரை நோதல் மடம். 557

- கல்வி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மூடன் என்னும் வார்த்தையை மூடரும் கேட்க வருந்தி முனிந்து கொதிக்கின்றார், அந்த ஈன நிலை ஒழியும்படி மானமுடன் கற்று உயர்ந்து கொள்ளாமல் அயர்ந்து நின்று பிறரை நோதல் பிழை என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பணம் இல்லாதவன் ஏழை வறியன் என இழிந்து நிற்கிறான். படிப்பு இல்லாதவன் மடையன் மூடன் எனக் கடையாய் நின்றான். படியாதவனாயிருந்தாலும் அவனைப் பார்த்து நீ மூடன் என்றால் அவன் சகிக்க மாட்டான். தன்னை அன்னவாறு சொன்னவனை எதிர்த்துச் சினந்து இகழ்ந்து பேசுகிறான்.

கல்லாமல் கழிந்து நின்ற தனது பொல்லாமையை உணர்ந்து கொண்டாலும் அந் நிலையைப் பிறர் சுட்டிச் சொல்லும் பொழுது அவன் சுளித்து வருந்துகிறான். உயர்ந்த நிலைகளையே சீவர்கள் விழைந்துள்ளனர் என்பதை இது விளக்கி நிற்கின்றது. இழிந்த நிலைகளில் தாழ்ந்திருந்தாலும் தங்களை உயர்ந்தவர்களாகப் புகழ்ந்து சொன்னால் அதனை அவர் உவந்து கேட்கின்றனர். தங்கள் குறைகளை மறந்து மயங்கி உழலுகின்றனர். உச்ச நிலைகளை மனிதர் இவ்வாறு கொச்சையாய் நச்சி நிற்றலால் இச்சக வார்த்தைகள் யாண்டும் பெருகி எதிர் வர நேர்ந்தன.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

கல்லாத ஒருவனைநான் கற்றாய் என்றேன்;
..காடெறியும் மறவனைநா டாள்வாய் என்றேன்;
பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்;
..போர்முகத்தை அறியானைப் புலியே றென்றேன்;
மல்லாரும் புயம்என்றேன். சூம்பல் தோளை
..வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்;
இல்லாது சொன்னேனுக்(கு) இல்லை என்றான்
..யானுமென்றன் குற்றத்தால் ஏகின் றேனே. – இராமச்சந்திர கவிராயர்

இழிந்த உலோபிகளிடம் சென்று அவரைப் பலவாறு புகழ்ந்து கூறியும் யாதொரு பலனும் பெறாமல் ஒரு கவிராயர் வருந்திப் போயுள்ளதை இதனால் அறிந்து கொள்ளுகிறோம். தம் குற்றத்தைக் குறித்துச் சொல்லி உலக நிலைகளின் புலைகளைக் கவிஞர் அழகாக விளக்கிப் போயிருப்பது சுவை சுரந்துள்ளது.

கல்லாமல் நின்று இழிந்து படாமல் எல்லாரும் கற்று உயர்ந்து கொள்ள வேண்டும் என்றே மேலோர் யாண்டும் விழைந்து வேண்டி வருகின்றனர்.

தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு வைத்துப் படிப்பிப்பது பெற்றோர்களின் பெருங் கடமையாயுள்ளது. அவ்வாறு செய்யாது ஒழியின் அது அவர்க்கு வெய்ய பழியாகின்றது.

கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ
தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

மாலினால் இருவரும் மருவி மாசிலாப்
பாலனைப் பயந்தபின் படிப்பி யாதுயர்
தாலமேல் செல்வமா வளர்த்தல் தங்கட்கோர்
காலனை வளர்க்கின்ற காட்சி போலுமே. 3

மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும்,
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல் - நீதி நூல்

படியாத பிள்ளை கொடியனாய் வளர்ந்து குடிக்குக் கேடு செய்வனாதலால் பெற்றோர்க்கு அவன் காலன் என நேர்ந்தான்.

கல்லாத மகன் தனக்கும் தன் குடிக்கும் பொல்லாதவனாகிறான். ஆகவே வழி வழியாய் மடமை மண்டி அக்குடி பழியடைய நேர்கின்றது. அந்த இழிபழி நேராமல் இளமையிலேயே விழி திறந்து, விரைந்து கற்று உயர்ந்து கொள்பவர் சிறந்த மனிதராய் விளங்கி நிற்கின்றார். அயர்ந்து நின்றார் இழிந்து படுகிறார்,

நேரிசை வெண்பா

மட்டி மடையன் மதிகேடன் மூடனென
ஒட்டி உளவாகும் ஊனமெல்லாம் - கட்டிப்
படியா(து) இருந்த பழியால் விளைந்த
மடியா தெழுந்து மகிழ்.

மடையன், மூடன் என்னும் இழிபெயர் தன்னை அடையாதபடி பாதுகாத்துக் கொள்ளின் அந்த மகன் மானமும் ஞானமும் உடையனாய் மகிமை அடைகிறான்; படியாது கழியின் அப்பிறவி பாழாய் முடிகிறது.

மற்றவரை நோதல் மடம் - தான் கற்று உயராமல் கடையாயிருந்து கொண்டு தன்னைக் குற்றஞ் சொல்பவரைக் கொதித்து நோவது மடமையாம் என இது உணர்த்தி நின்றது. கல்லாமையால் விளையும் இளிவைக் கருதி உணர்ந்து ஒல்லையில் கற்று உன்னை ஒளிசெய்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Dec-19, 10:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

மேலே