இல்லென்னாத வன்மையின் வன்பாட்ட தில் – நான்மணிக்கடிகை 30

இன்னிசை வெண்பா

திருவின் திறலுடைய தில்லை - ஒருவற்குக்
கற்றலின் வாய்த்த பிறவில்லை - எற்றுள்ளும்
இன்மையின் இன்னாத தில்லையில் லென்னாத
வன்மையின் வன்பாட்ட தில். 30

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

ஒருவனுக்கு செல்வத்தைப்போல் வலிமையுடையது பிறிதில்லை;

கல்வியினால் பெற்ற அறிவைப்போல் உற்ற நேரத்திற் பயனாவன வேறு இல்லை;

எதனுள்ளும் வறுமையைப்போல் துன்பம் உடையது வேறு யாதுமில்லை;

இரப்பார்க்கும் இல்லையென்னாத மனவுறுதியைப் போல் திட்பமானது வேறு இல்லை.

கருத்து:

செல்வத்தைப்போல் ஒருவனுக்கு வலிமையுடையது வேறில்லை: கல்வியைப்போல் துணையாவது பிறிதில்லை; வறுமையைப்போற் றுன்பமானது வேறில்லை; இல்லையென்னாமல் ஈதலைப்போல் திட்பமானது வேறில்லை.

விளக்கவுரை:

வறுமையுடையான் இம்மை மறுமை நலங்களிற் சிறிதும் நன்மை யுடையனாகாமையின், ‘இன்மையி னின்னாத தில்லை' யெனப்பட்டது. வன்மை ஈண்டு மனத் திட்பம். வன்பாட்டது - வன்மையானது; எக்காலத்திலும் இல்லையென்னாமை அரியவற்றுள் அரிதானமையின், அதனை யொப்பதொரு வன்மை பிறிதில்லை யென்றார்.

ஒப்பாவன வின்மை கூறப்பட்டமையின், மிக்கவின்மை கூறவேண்டாவாயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Dec-19, 9:07 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 81

சிறந்த கட்டுரைகள்

மேலே