வெட்டி வேர் - மருத்துவப் பாடல் – கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை

பித்தவி தாகஞ் சசிகா மிலங்கறைப் பித்தமனற்
றத்திடு குட்டஞ் சிரநோய் களமடி தாதுநட்ட
மத்தம னற்புண்ட னப்புண்வன் மூர்ச்சை வரிவிழிநோய்
வித்திர மேகத்தின் கட்டியும் போம்வெட்டி வேரினுக்கே.

– பதார்த்த குண விளக்கம்

குணம்:

வெட்டிவேருக்குப் பித்தத்தால் அகாலத்தில் உண்டாகிற தாகம், சோம ரோகம், காமாலை, ரத்த பித்தம், சுரம், பரவுகின்ற குட்டம், தலை நோய், கழுத்து நோய், சுக்கில நஷ்டம், உன்மத்தம், தீயால் வந்த புண், முலைச்சிலந்தி, திரிதோடம், மூர்ச்சை, நேத்திர ரோகம், வித்திரிதிக் கட்டி, மேகக் கட்டி ஆகியவை நீங்கும்.

உபயோகிக்கும் முறை:

இந்த வேரை இடித்துச் சூரணஞ் செய்து வேளைக்கு 5 – 10 குன்றியெடை தினம் 2 – 3 வேளை சிறிது சர்க்கரை கூட்டிக் கொடுப்பதுண்டு.

அல்லது 2 வராகனெடை வேரைப் பஞ்சு போல் நசுக்கி, 10 அவுன்ஸ் கொதிக்கின்ற நீரில் போட்டு, 2 மணி நேரம் ஊறவிட்டுப் பிசைந்து வடிகட்டி, வேளைக்கு 1 - 2 அவுன்ஸ் வீதம் சிறிது சர்க்கரை கூட்டித் தினம் 3 வேளை கொடுப்பதுண்டு.

இவற்றால் பித்த உபரி, தாகம், அழலை, சுரம் முதலியவை சாந்தப்படும். வியர்வையும், சிறுநீரும் பெருகும்.

குறிப்பு:

வெட்டி வேர் வெண்மஞ்சள் நிறமாகவும், கூந்தலைப் போல் அடர்த்தியாகவும், நீளமாகவும் பூமியில் இறங்கியிருக்கும். இதற்கு ஒருவிதமான பரிமளமுண்டு. இங்கு சிலர் வெட்டிவேரை விலாமிச்ச வேர் என்றும், விலாமிச்ச வேரை வெட்டி வேர் என்றும் கூறுவது வழக்கம். இந்த இடத்தில் வெண்மஞ்சள் நிறமானதே எனக் கொள்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Dec-19, 10:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 62

மேலே