பக்கங்கள் எங்கே

வாழ்க்கைப் புத்தகத்தின்
இருபக்க அட்டைகளாய்
நானும் அவளும்
இணைபிரியாமல்
ஒட்டிக் கொண்டிருக்கிறோம்..

ஆசையாய் எழுதி
அன்பாய் பிரசுரித்த
எங்கள் புத்தகத்தின்
பக்கங்கள் இன்றி...

எப்போதாவது மட்டும்
தெரிகின்றன
எங்கள் கண்களுக்கு
நாங்கள் எழுதிய பக்கங்கள்..

கண்களின் தடுமாற்றமா?
இல்லை வாழ்வியல் மாற்றம்.

அட்டையோடு ஒட்ட
ஆசைப் பட்டன பக்கங்கள்
அன்று...
பக்கங்களோடு ஒட்ட
ஆசைப்படுகின்றன அட்டைகள்
இன்று...

பக்கங்கள் இல்லாத அட்டைகள்
உபயோகமற்றதாய்
ஆகிவிடுகின்றது
எடைக்கு கூட
எடுப்பதில்லை எவரும்...

ஒரு பக்கம் எழுதினாலும்
பக்கம் பக்கமாய் எழுதினாலும்
கழன்று விடுகின்றன
பக்கங்கள்..

சாந்தமாய் எழுதினாலும்
சாட்டை கொண்டு எழுதினாலும்
அட்டையோடு ஒட்ட
சங்கடப் படவே செய்கின்றன
பக்கங்கள்..

அன்றாட தேடலில்
அவரவர் குடும்பமே சுமையாக..
யாரும் தூக்கிச் சுமக்க
நினைப்பதில்லை அட்டைகளை..

பால் ஊட்டினேன்
சீராட்டினேன்
மார்பில் புதைத்தேன்
பேசிப் பயனில்லை

பக்கங்கள் வாதிடுகின்றன
எல்லாம் கடமை என்று...

உன்னிடம் இருப்பதென்ன?
உன்னால் ஆவதென்ன?
பணியின்போது கேட்டார்கள்
பணி செய்ய..
பிணியின்போது அவர்கள்
பார்வை பறைசாற்றுகிறது
அந்தக் கேள்விகளை...

முதுமைக் காலத்தில்
உடலும் ஒத்துழைப்பதில்லை
உறவும் ஒத்துழைப்பதில்லை
பணம் இல்லாவிட்டால்
வாழ்வே பெரும் தொல்லை..

எங்களைப்போன்ற நட்புகள்
துணையோடு
அவளுக்கு நானும்
எனக்கு அவளும்
புத்தகத்தின் அட்டைகளாய்
கடைசிவரை
வாழ்ந்து விட்டுப் போகிறோம்...

தனித்துவிடப்பட்டு
தவித்து நிற்கும் பலரை விட
நாம் மேல் என்ற சமாதானத்துடன்...

எழுதியவர் : அலாவுதீன் (12-Dec-19, 7:27 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : pakkangal engae
பார்வை : 127

மேலே