பயணம்

பயணம்

அண்டவெளியில்
துமியாய் பயணிக்க வந்துதித்தேன்
இரவியைச் சுற்றி
பயணம் செய்யும்
புவியின் மீது ஒருநாள்!

விருப்பம் வினவப்படாமல்
ஏற்றப்பட்ட உருவமெனும் வாகனம்!
மரபின்வழியே பதிவுகளாய்
ஏகப்பட்ட பொதிகள்!

உறவுப்பாசங்கள்
விரவிக்கிடக்கும்
வழுக்கலாய் பாதைகள்!
சினம் ,பொறாமை போன்ற இழுக்கல் தரும் கறைகளாய்
வேகம் குறைக்கும் தடைகள்!

கவலைகள்,சஞ்சலங்கள் என
ஆக்கசெயல் நிறுத்தங்கள்!
கல்வி கேள்வி கலைகளால்
மேற்கொள்ளப்படும் திருத்தங்கள்!

இன்னும் இவ்வளவு தூரம்
எனக்கூறக் கல் எதுவும் தென்படாத நீண்டு செல்லும்
நெடுவழி..

நினைத்தது கிடைத்தும் கிடைக்காமலும்
கிடைத்தது நிலைத்தும் நிலைக்காமலும்
அனுபவக்காட்சிகளை
காணச் செய்யும்
சீர்குலைந்த வேகம்!

பயணம் முடிந்ததும்
காலாவதியான பயணச்சீட்டென்றாகும்
வாகனமாயிருக்கும் என் பருஉடல்!

அதற்குள் நல்லனவே செய்து
கடந்து விடவேண்டும்
பிறவி எனும் பெருங்கடல்!

எழுதியவர் : Usharanikannabiran (14-Dec-19, 8:13 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 164

மேலே