ஆயநலம் எல்லாம் அருளி இதமளிக்கும் கல்வி - கல்வி, தருமதீபிகை 559

நேரிசை வெண்பா

தாய்போல் இனிதோம்பும் தந்தைபோல் நன்காற்றும்
தூய மனைபோல் சுகமருளும் - ஆயநலம்
எல்லாம். அருளி இதமளிக்கும் கல்வியிது
வல்லார்க்(கு) எவைதாம் வரா. 559

- கல்வி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கல்வி தாயைப் போல் பேணுகிறது; தந்தையைப் போல் காணுகிறது; இனிய மனைவி போல் இன்பம் தருகிறது; செல்வம், புகழ் முதலிய எல்லா நலங்களையும் ஒருங்கே உதவுகிறது; இத்தகைய அருமைக் கல்வியையுடையவர் அடைய முடியாதன எவை? யாவும் எளிதே அவரிடம் வந்து சேரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பெற்ற தாய் பிள்ளையை எவ்வழியும் பேரன்புடன் பேணி வருகிறாள். இனிய உணவூட்டி, நல்ல உடை யுடுத்தி, நன்கு சீவி முடித்து எல்லாவகையிலும் செல்லமாகப் பேணியருளுகிறாள். கல்வியும் அவ்வாறே; உணவு, உடை முதலியன யாவும் நல்கி உரிமையுடன் மக்களைப் பாதுகாத்து வருதலால் தாய் என நேர்ந்தது.

அறிவு நலங்களை நன்கு உணர்த்தித் தன்னைப் பெரிய நிலைகளில் வைத்தருளுதலால் கல்வி தந்தை என வந்தது. கல்வி நல்கி வருகிற இன்ப நலங்களைக் கருதியுணர தூய மனை போல் சுகம் அருளும் என்றது. தூய மனை என்றது பரிசுத்தமான மனைவி என அவளது கற்பு நிலை தெரிய வந்தது.

மனம், மொழி, மெய்கள் புனிதமுடைய இனிய பதிவிரதை தன் கொழுநனுக்கு ஐம்புல இன்பங்களும் ஆர நல்கி ஆவன புரிந்து யாண்டும் ஆர்வமோடு பேணி வருவாளாதலால் அங்ஙனம் இன்ப நலங்களை இனிது அருளி வருகிற கல்விக்கு அவள் இங்கே உவமையாய் வந்தாள்.

’கல்வியே கற்புடைப் பெண்டிர்’ எனக் குமர குருபரர் குறித்துள்ளதும் ஈண்டு உணரவுரியது.

அறிவுக்குப் பேரின்ப போகமாய்க் கல்வி மருவியுள்ளது. அந்த இன்பச் சுவையில் உள்ளம் ஊன்றியுள்ள பொழுது உலக இன்பங்களையெல்லாம் அது மறந்து விடுகின்றது.

நேரிசை வெண்பா

உள்ளம் கலைச்சுவையை ஊன்றி நுகருங்கால்
வெள்ளமென இன்பம் விளையுமே - வள்ளமுலை
ஊர்வசியே நேர்வந்(து) உலாவியெதிர் நின்றாலும்
பேர்வறியா வுள்ளம் பிறழ்ந்து.

கல்வி நல்ல அறிவின்பமாதலால் அதனை அழுந்தி துகரும் பொழுது பொறியின்பங்கள் எல்லாம் புல்லிதாய் ஒழிந்து போகின்றன. பேரின்பம் பெற்றவர் சிற்றின்பத்தை இகழ்ந்து விடுகின்றனர். மனம் ஒரு முகமாய் ஆய்ந்து தோயுந்தோறும் அந்த ஆனந்தம் பாய்ந்து வருகிறது.

கட்டளைக் கலித்துறை

ஆயுந் தொறுந்தொறு மின்பந் தருங்கலை யாங்கறிவு
மாயுந் தொறுந்தொறு மின்பந் தரும்வள்ளல் வார்கழல்கள்
தேயுந் தொறுந்தொறு மின்பந் தருஞ்சந்து தேங்குழனிற்
றோயுந் தொறுந்தொறு நேராத வின்பஞ் சுரந்திடுமே.தொகுதி 2, களவுப்படலம், 100 தணிகைப் புராணம்

சந்தனக் கட்டை தேயும் தோறும் வாசனையாம்; மங்கையரைத் தோயும் தோறும் சுக போகமாம், சிவ போகம் மாயுந் தோறும் சிவானந்தமாம், கல்வியை ஆயுந்தோறும் பேரின்பமாம் என்னும் இது இங்கே கூர்ந்து ஓர்ந்து சிந்திக்க வுரியது.

எல்லாம் அருளி இதம் அளிக்கும் என்றது அரிய பல உறுதி நலங்கள் யாவும் கல்வியால் வருதல் தெரிய வந்தது. பொருள், இன்பம், புகழ், புண்ணியம் முதலியன நல்கி மறுமையிலும் அதிசய முத்தி நிலையை அருளும்.

நேரிசை வெண்பா

எழுத்தறியத் தீரும் இழிதகைமை, தீர்ந்தால்
மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும் - மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதநூற் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்.

கல்வியறிவால் விளையும் கதிநலங்களை இது காட்டியுள்ளது.

பஃறொடை வெண்பா

கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
1புற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணருங் கோளுணர்ந்தால்
தத்துவ மான நெறிபடரும் அந்நெறி
இப்பா லுலகின் இசைநிறீஇ - உப்பால்
உயர்ந்த உலகம் புகும். 28 நான்மணிக்கடிகை

மடமை ஒழியும், மதி தெளியும், புகழ் பெருகும், பேரின்ப வீடு மருவும் எனக் கல்வியால் உண்டாகும் பாக்கியங்களை விளம்பி நாகனார் இங்ஙனம் விளக்கியுள்ளார். இப்பால் - இம்மை. உப்பால் - மறுமை. இருமையிலும் கல்வி பெருமை தருகிறது.

கல்வியால் எல்லா நன்மைகளும் எய்துகின்றனவாதலால் அதனையுடையவர் யாவும் அடைந்தவர் ஆகின்றனர்.

தாய், தந்தை மனைவி என மருவி நின்று இனிமை புரிகின்றது; பொருளும் போகமும் புகழும் தருகின்றது; மறுமையில் பேரின்பம் அருளுகின்றது. இத்தகைய அருமைக் கல்வியை உரிமை செய்து கொண்டவரே மனிதப் பிறவியின் பயனைப் பெற்றவர் ஆகின்றார்.

'வித்தை தாயைப் போல் காத்தருளுகிறது, தந்தையைப் போல் எப்பொழுதும் இதம் புரிகிறது. அயலே சென்ற இடங்களிலெல்லாம் உறவினர் போல் நின்று உபசரிக்கின்றது; இத்தகைய கல்வியை இழந்திருப்பவன் இழிந்த மிருகமேயாவான்’ என்னும் இது இங்கே தெளிந்து உணர்ந்து கொளத் தக்கது.

கல்வி மனிதனைத் தெய்வமாக்குகிறது; அதனை இழந்தவன் விலங்காயிழிந்து வீணே ஒழிந்து போகிறான்.

கருதிய நலங்களையெல்லாம் உரிமையுடன் அருளுகிற கற்பகம் போல் கல்வி பொற்பமைந்துள்ளது; இந்த அற்புதத் திருவை விரைந்து அடைந்து கொள்பவர் உயர்ந்த பாக்கியசாலிகளாய் ஒளி மிகுந்து திகழ்கின்றார்,

சிறிது படித்தாலும் அதனைக் கருதியுணர்வது பெரிதும் நன்மையாம். ஊன்றியுணர்பவன் உயர்ந்த கல்விமான் ஆகிறான். சிந்தனையில்லாத படிப்பு சிறந்து திகழாமல் சிதைந்து படுகின்றது.

நேரிசை வெண்பா

கற்ற கலையைக் கருத்தூறச் செய்யாமல்
மற்றும் படிக்கவே மண்டுதல் - உற்ற
உணவு செரிக்காமல் உண்டிமேல் உண்டி
உணவிழைந்த(து) ஆமே யுணர்.

உண்ணும் உணவும், எண்ணும் கல்வியும் கண்ணும் கருத்துமாய் இதில் காண வந்துள்ளன. கருதி நோக்கி உறுதி தெரிக என்றும், உள்ளம் படித்ததை உணர்வின் சாரமாக்கிக் கொள்க என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Dec-19, 9:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே