எல்லாம் புரியவல்ல ஈசன் ஒருவனெதிர் வல்லான்போல் - விநயம், தருமதீபிகை 550

நேரிசை வெண்பா

எல்லாம் புரியவல்ல ஈசன் ஒருவனெதிர்
எல்லாம் இனிதாய் இயங்குகின்ற - வல்லான்போல்
நீயும் புரிவதாய் நெஞ்சம் செருக்கின(து)
ஆயும் புதுமை அறி. 550

- விநயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

எல்லாம் வல்ல இறைவனுடைய அருளால் யாவும் முறையே இயங்கி வருகின்றன. அவ்வரவு நிலையை உணராமல் நீயும் சில செய்வதாக நெஞசம் செருக்குதல் மாய மயக்கம் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் தெய்வச் செயலைத் தெரிக என்கின்றது.

இனிய பணிவு மனிதனுக்கு அரிய அணிகளாய் மருவியுள்ளன. பணிவும் அடக்கமும் உண்மையான உணர்வின் பலன்களாய் ஒளி வீசி வருகின்றன. ’அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பது பொய்யாமொழி. தன்னைத் தெய்வம் ஆக்கி எவ்வழியும் இன்பம் தரவல்ல இனிய நீர்மையை மனிதன் இழந்து போவது கொடிய துயரமாய் முடிந்து வருகிறது.

இன்ப மூலங்களை இகழ்ந்து தள்ளி விடுவதும், துன்ப விளைவுகளை உவந்து தொடர்ந்து கொள்ளுவதும் மருண்ட மாய மயக்கங்களாய் இருண்டு நிற்கின்றன. துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் உண்மை நிலையை ஊன்றி உணராத புன்மையேயாம்.

உரிய உண்மை தெளியின் அரிய நன்மைகள் வெளியாகின்றன. மெய்யறிவான ஞானம் உதயமாகவே யான், எனது என்னும் செருக்கு அறுந்து மனிதன் தேவனாய் மேலான இன்ப நலங்களை மேவி மகிழ்கிறான்.

அகில உலகங்களும் ஓயாமல் இயங்கி வருகின்றன. முறையே அவற்றை அங்ஙனம் இயக்கி வருகிற ஓர் அற்புத சக்தி அதிசய நிலையில் உள்ளது. அந்த அற்புதப் பொருளைத்தான் கடவுள், ஈசன், பிரமம் எனப் பல பெயர்களால் வழங்கி வருகிறோம்.

’அவனன்றி அணுவும் அசையாது’ என்னும் பழமொழி அவனால் யாவுமியங்கி வரும் உண்மையை இனிது உணர்த்தி வருகிறது. இந்தத் தத்துவத்தை ஒருவன் உய்த்துணர்ந்தால் உள்ளச் செருக்கு ஒழிந்து உயர்கதி யடைகிறான்.

நல்ல மெய்யுணர்வு இல்லாமையினாலேதான் எல்லாம் தன்னாலேயே ஆகின்றன என்று தருக்கி இன்னல் நிலைகளில் இழிந்து படுகிறான். சீவ முனைப்பு பாவ முளைப்பாய் வருதலால் பல துயரங்களை அவன் அடைய நேர்கிறான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

தானலா(து) ஒன்று தன்னைத்
..தானெனக் கருதிக் கொண்டே
யானெலாம் செய்தேன் என்னும்
..ஞானமஞ் ஞானம்; அத்தால்
ஈனமாம் வினையி ரண்டாம்;
..இருவினை யால்உ டம்பாம்;
ஊனமாம் உடம்பால் ஊழாம்;
..ஊழினால் ஆகா துண்டோ? – குறுந்திரட்டு

உண்மையை உணர்ந்து கொள்ளாமல், எல்லாம் நான் செய்தேன் என்று உள்ளம் செருக்குதல் அஞ்ஞானம்; அந்த மடமையினாலேதான் வினைகள் விளைந்து பிறவித் துன்பங்கள் நேர்ந்தன என்று இது உணர்த்தியுள்ளது.

'ஒன்றும் நம்செயல் இல்லை நெஞ்சே! இவண்'
ஓர்மயல் அதனாலே
சென்று சென்று வெம்பவக் கடல் மூழ்கினம்’ - வைராக்கிய சதகம்

எல்லாம் ஈசன் செயல் என்று தெளிந்து அடங்காமல் நான் என்ற அகங்காரம் நீண்டு நின்றமையினாலேதான் நாம் பிறவிக் கடலில் வீழ்ந்துள்ளோம் என்னும் இது ஈண்டு ஓர்ந்து சிந்திக்க வுரியது.

ஆணவச் செருக்குகளாலே அலலல்கள் விளைந்திருக்கின்றன; அந்தப் பொல்லாத புலைகளை ஒழித்து நல்ல தெய்வ சிந்தனைகளைச் செய்துவரின் எல்லா இன்ப நலங்களும் எளிதே வரும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

சிவன்செய லாலே யாதும்
..வருமெனத் தேறேன்; நாளும்
அவந்தரு நினைவை எல்லாம்
..அகற்றிலேன்; ஆசை வெள்ளம்
கவர்ந்துகொண்(டு) இழுப்ப அந்தக்
..கட்டிலே அகப்பட்(டு) ஐயோ!
பவந்தனை ஈட்டி ஈட்டிப்
..பதைக்கின்றேன் பாவி யேனே.

உண்மை நிலையை மறந்து புன்மை நினைவுகளை நினைந்து புலைப்பிறவிகளை யடைந்து தொலையாத துன்பங்களில் சுழன்று உழலுகின்றேனே! என்று தாயுமானவர் இங்ஙனம் பதைத்துப் பரிதபித்திருக்கிறார்.

என்செய லாவது யாதொன்றும் இல்லை,இனித் தெய்வமே
உன்செயலே என்றுணரப் பெற்றேன். - பட்டினத்தார்

தமது மெய்யுணர்வின் நிலையைப் பட்டினத்தார் இவ்வண்ணம் விளக்கியிருக்கிறார். எல்லாம் அவன் செயல் என்று தெளிந்தவுடனே பொல்லாத அவலங்கள் யாவும் பொன்றி ஒழிகின்றன.

தான் என்னும் அகங்கார இருள் ஞான ஒளி முன் ஒழிந்து போய், அங்கே அமைதியும் பணிவும் பெருகி வருகின்றன. உண்மையுணர்வு நன்மைகளை நல்கியருளுகிறது.

’நீயும் செருக்கின் அது ஆயும் புதுமை’ என்றது சீவனது நிலைமையை நினைந்து கொள்ள வந்தது.

செருக்கு மனிதனைச் சிறுமைப் படுத்துகிறது. அறிவு குறைந்த இடத்திலேதான் செருக்கு நிறைந்து நிற்கிறது.

தன்னைப் பெருமையாகக் கருதித் தருக்கி நிற்பவனை உலகம் சிறுமையாக எண்ணி இகழ்ந்து வருகிறது. நிலை தெரியாமல் புலையுறுகின்றான்.

எல்லாம் அறிய வல்லவன் இறைவன் ஒருவனேயாதலால் அவன் முன்னிலையில் தன்னை நிறுத்தி உன்னி உணர வேண்டும். உணரின் பணிவும் பண்பும் படிந்து வரும். இனிய பணிவால் அரிய பல உயர்வுகள் பெருகி வருகின்றன.

Be not wise in thine own eyes. - Bible

'உன்னை நீ ஞானியாக எண்ணிக் கொள்ளாதே' என்று சாலமன் என்னும் நீதிமான் இவ்வாறு கூறியிருக்கிறார்.

தனது அறிவு நிலையைப் பிறர் உவந்து கூறின் அது பெருமையாம்; தானே புகழ்ந்து சொல்லின் சிறுமையாகும். அந்தச் சிறுமையில் இழிந்து படாமல் உயர்ந்த பெருந்தன்மையுடன் ஒழுகி வரவேண்டும்.

Be wiser than other people, if you can; but do not tell them so. - Lord Chesterfield

'கூடுமானால் மற்றவர்களைக் காட்டிலும் நீ அறிவாளியாய் இரு, ஆனால் அவர்களிடம் அப்படிச் சொல்லாதே’ என செஸ்டர்பீல்டு என்னும் பிரபு தன் மகனுக்கு இவ்வாறு புத்தி போதித்திருக்கிறார். உயர்ந்த போதனைகள் உய்த்துணரவுடையன.

தன்னைப் பெருமைப்படுத்தி ஒருவன் புகழ்ந்து பேசினால் அது பிறரைச் சிறுமைப் படுத்தி இகழ்ந்தது போலாகிறது; ஆகவே வெறுப்புக்கிடமாய் அது விபரீதங்களை விளைக்கிறது.

விநயமும், அடக்கமும் யாண்டும் மேன்மைகளை விளைத்து வருகின்றன; செருக்கும் துடுக்கும் எவ்வழியும் இழிவுகளையே வளர்த்து இன்னல்களை விரித்து நிற்கின்றன.

தன்னைப் பெருமையாக உயர்த்திப் பேசுகிறவன் சிறுமையாய்த் தாழ்த்தப் படுகிறான். அடக்கமாய்த் தாழ்ந்து நிற்பவன் யாவராலும் உயர்வாக மதித்துப் போற்றப் பெறுகிறான்.

உணர்வு பெருக உள்ளம் அடங்குகிறது; அந்த அடக்கத்தில் எல்லா மகிமைகளும் இடம் பெற்று நிற்கின்றன.

கிரீஸ் தேசத்தில் பிறந்த சாக்ரடீஸ் என்பவர் பெரிய மேதை; இற்றைக்கு இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர். இவருடைய அறிவுரைகள் உயர்ந்த நெறிமுறைகளை உணர்த்தியுள்ளன. பெரிய அறிஞர் குழாத்தில் ஒரு நாள் இவர் சொன்ன மொழியை உலகம் முழுவதும் உவந்து கொண்டாடி வருகிறது. அன்று சொன்னதை அபலே காண்க.

One thing only I know; and that is that I know nothing. - Socrates

'ஒன்று மாத்திரம் எனக்கு நன்றாகத் தெரியும்; அதுதான் யாதும் தெரியாது என்பது’ என சாக்ரடீஸ் இவ்வாறு கூறியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய விநயம்! எத்துணை அடக்கம்! எல்லாக் கலைகளையும் நன்கு தெளிந்த பேரறிவாளி இங்ஙனம் பேசியிருப்பது அந்த உள்ளத்தின் பண்பையும், பெருந் தகைமையையும் உணர்த்தி நிற்கிறது.

சிறந்த அறிவு நிறைந்துள்ளமைக்கு அடையாளம் அங்கே செருக்கு இல்லாமல் இருத்தலேயாம் என்பதை இதனால் அறிந்து கொள்கிறோம். இழி புன்மைகள் ஒழிவதே உயர் பெருந்தன்மைகளாய் ஒளி பெறுகின்றன. பணிவும் பண்பும் அணிகளாய் நின்று மனிதனுக்கு அரிய பல நலங்களை அருளி வருகின்றன. அந்த இனிய நீர்மைகளை எய்தினவன் இன்பமூர்த்தி யாகிறான்.

வித்தையால் விநயமும், விநயத்தால் மேன்மையும், மேன்மையால் திருவும், திருவால் தருமமும், தருமத்தால் இன்பமும் உண்டாகிறது” என்னும் இது இங்கே ஊன்றி உணர்ந்து கொள்ளவுரியது.

அகம் வளைந்து வரின் சுகம் விளைந்து வருகிறது. என்றும் உள்ளவன், எல்லாம் அறிபவன், யாவும் வல்லவன் இறைவனே என்ற கருதி உருகி எவ்வழியும் விநயமாய் ஒழுகித் திவ்விய நலனையெய்தி மகிழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Dec-19, 7:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 78

மேலே