உற்றபசி நீக்கி உறுபுலன்கள் நன்கூட்டிச் சுற்றம் புரத்தல் – செல்வம், தருமதீபிகை 562

நேரிசை வெண்பா

உற்றபசி நீக்கி உறுபுலன்கள் நன்கூட்டிச்
சுற்றம் புரந்து சுகம்புரிந்து – பெற்ற
பிறவிப் பெரும்பயனைப் பேணி யருளும்
அறவி திருவே அறி. 562

- செல்வம், தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

செல்வம் செய்து வருகிற சீவிய நிலைகளில் சிலவற்றைச் சுட்டிக் காட்டி அதன் மகிமையை இப்பாடல் உணர்த்துகிறது. உயிர்களுக்கு ஏற்படும் பசியை நீக்கிப் பொறி புலன்களை ஊட்டி, உறவினங்களைக் கவனித்துக் காப்பாற்றி, உயர் சுகங்கள் புரிந்து பிறவிப் பெரும்பயனை விரும்பியருளுகின்ற தருமத்தாய் அருமைச் செல்வமே என்றறிந்து கொள் எனப்படுகிறது.

செல்வம் செய்து வருகிற உயிர் நிலைகளில் சிலவற்றைச் சுட்டிக் காட்டி அதன் மகிமையை இப்பாடல் உணர்த்துகிறது. வயிற்றுப் பசியோடு மனிதன் பிறந்திருக்கின்றான்; அந்த உயிர்க் கனலுக்கு நாளும் அளவாக உணவும் நீரும் ஊட்டி வர வேண்டும்; வயிறு வளர்த்தலே உயிர்வாழ்வாய் வளர்ந்து வருகிறது. பசி வந்த பொழுது வயிற்றுக்கு உணவு தரவில்லையாயின் படுதுயரமாய் நெடிதோங்கி நிற்கிறது.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. 226 ஈகை

வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும் என்கிறார் வள்ளுவர்.

ஐம்புலகளுக்கும் இன்ப நலங்களைப் பொருளினிது ஊட்டியருதலால் ’உறுபுலன்கள் நன்கு ஊட்டி’ எனப்பட்டது. நல்ல உணவு, உடை, மனை முதலிய எல்லாச் சுகபோகங்களும் பொருளால் இனிது அமைகின்றன.

பொருளுடையான் கண்ணதே போகம் அறனும்
அருளுடையான் கண்ணதே யாகும்’

என்று சிறுபஞ்ச மூலம் பாடல் 2 ல் காரியாசான் இவ்வறு கூறுகிறார்.

விரும்பிய இன்ப நலங்கள் எல்லாம் வந்து சேர்தலால் அதனை உடையவன் போகி எனப் புகழ்ந்து போற்றப் படுகிறான். பொருட்செல்வம் வைத்துள்ளவனைப் பலவகையிலும் உயர்த்திப் பெருமை செய்து வருதலால் அதன் அருமையை விழைந்து பேணி உலகம் போற்றி வருகிறது.

இம்மையிலும் மறுமையிலும் நன்மை புரிந்து வருதலால் பொருள் திரு எனப்பட்டது. பகழொளி பரப்பிப் புண்ணியங்களை வளர்த்து எண்ணிய இன்ப நலங்களையெல்லாம் செல்வம் ஈந்தருளுதலால் செல்வம் பிறவிப் பெரும்பயன் எனப்பட்டது.

செல்வத்தின் உருவநிலையைக் கருதியுணர ’அறவி திருவே’ எனப்பட்டது. மனித சீவியத்தை இனிமை செய்து இன்புறுத்தி வருதலின் அறவி, தருமசொரூபி, புண்ணியத்தாய் என்று இலட்சுமியை எண்ணித் துதித்தது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-19, 8:56 am)
பார்வை : 66

மேலே